உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில், பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல் நிறைவடைந்து விட்ட நிலையில், எஞ்சியுள்ள 2 கட்ட தேர்தல் மார்ச் 3 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. ஆகவே, மேற்படி தேர்தல் நடக்கவிருக்கும் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், சமாஜ்வாதி கட்சியினர் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரசாரக் கூட்டம் நடத்தினார்கள். இதில்தான், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பபட்டதாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதி கட்சியின் ஹண்டியா சட்டசபைத் தொகுதி வேட்பாளர் ஹக்கிம் லால் பிந்த் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மேற்கண்ட கூட்டத்தின் வீடியோ காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக 7 பேர் கோஷமிடுவது அடையாளம் காணப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, மேற்படி 7 பேரையும் கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர்.
எனினும், தனது பிரசார கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாரும் கோஷம் எழுப்பவில்லை என்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஹக்கிம் லால் பிந்த், மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.