பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கியமான வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் அவர், சுதேசி செம்மலாக திகழ்ந்தார், எத்தனையோ தொழில்கள் இருக்க, சுதேசி கப்பல் இயக்க அவருக்குள் எண்ணம் எழுந்தது ஏன்? இதை பற்றி அறியும் முன்னர், அவரது வாழ்க்கையை ஒரு முறை மனதில் நிறுத்துவோம்
வக்கீலாக இருந்த வ.உ.சி தேச பக்தர்களுக்காக வாதாடி வந்தார், சுதேசிய பண்டகசாலை, சுதேசி பிரச்சார சபை, நெசவு சாலை, கைத்தொழில் சங்கம் போன்றவற்றை நடத்தி வந்தார் வ.உ.சி. இவற்றின் மூலம் மக்கள் மத்தியில் சுதேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையை தொடர்ந்து நாட்டு மக்கள் கொந்தளித்தனர். இது சுதேசி இயக்கமாக மாறியது. இதை தமிழகத்தில் முன்னெடுத்தார் வ.உ.சி.
இந்தியர்களுக்கு என்று கப்பல் நிறுவனம் எதுவும் அப்போது இல்லை. எனவே அக்டோபர் 16, 1906 அன்று சுதேசி நாவாய் சங்கம் என்ற நிறுவனத்தை துவக்கினார், இதுவே நமது நாட்டின் முதல் சுதேசி கப்பல் நிறுவனம். முதலில் கப்பல்களை வாடகைக்கு எடுத்தார், அதில் பல சங்கடங்கள் ஏற்பட்டன. சொந்தமாக கப்பல் வாங்க முடிவு செய்து, தனது மொத்த சொத்தையும் முதலீடு செய்தார், நல்ல உள்ளம் கொண்ட சிலலர் நிதியுதவி செய்தனர், கடனும் வாங்கினார். 1907ல் எஸ்.எஸ். காலியோ மற்றும் எஸ்.எஸ். லாவோ என இரு கப்பல்கள் வாங்கப்பட்டன. சுதேசி கப்பல் நிறுவனத்தை முறியடிக்க பிரிட்டிஷார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் மக்களின் ஆதரவுடன் அது வளர்ந்தது, இதனால் பிரிட்டிஷாரின் கப்பல் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது. இதற்கிடையில் 1908ம் கோரல் மில் தொழிலாளர்களுக்காக போராடி அவர்களுக்கு உரிமைகளை பெற்று தந்தார். இவையெல்லாம் வ.உ.சி மீது பிரிட்டிஷாருக்கு வஞ்சத்தை ஏற்படுத்தியது.
வங்கத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திர பால் மார்ச் 9 1908 அன்று சிறையிலிருந்து விடுதலையானார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து நாடெங்கும் கூட்டங்கள் நடைபெற்றன. வ.உ.சி மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் கூட்டம் நடத்த திட்டமிட்டனர், பிரிட்டிஷார் அவர்களை தடுத்து, பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்தனர். ராஜ துரோக குற்றம் சுமத்தப்பட்டு, ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டு, நேர்மையற்ற விசாரணையின் முடிவில், அவருக்கு 40 ஆண்டுகளும், சிவாவிற்கு 10 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீட்டில் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
முதலில் கோயமுத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு கடுமையான வேலைகள் தரப்பட்டன. கை, கால்கள் விலங்கிடப்பட்டன, செக்கு இழுத்தார், அவரது உடல்நிலை மெலிந்தது. அதே போல சுப்ரமணிய சிவாவின் உடல் நிலையும் மோசமடைந்தது. டிசம்பர் 24, 1912 அன்று இருவரையும் பிரிட்டிஷார் விடுதலை செய்தனர். விடுதலை கிடைத்து விட்டாலும், பழைய வாழ்க்கை திரும்ப கிடைக்கவில்லை. அவரது வக்கீல் உரிமத்தை பிரிட்டிஷார் ரத்து செய்திருந்தனர். சுதேசி கப்பல் நிறுவனம் நஷ்டம் அடைந்து, அதன் கடன்களை ஈடுகட்ட கப்பல் ஏலம் விடப்பட்டிருந்தது.
விடுதலைக்கு பிறகு, சென்னைக்கு வந்து இங்கு எண்ணெய் கடை வைத்து, குடும்பத்தை நடத்தினார் வ.உ.சி . பின்னர் கோவில்பட்டி, தூத்துக்குடி ஊர்களுக்கு வந்து வங்கி பணி, பத்திரிகையாளர் பணிகளை மேற்கொண்டார் . சில ஆண்டுகளுக்கு பிறகு வாலஸ் எனும் ஆங்கிலேய நீதிபதி, இவரது வக்கீல் உரிமத்தை மீண்டும் வழங்கினார். இவற்றின் மூலம் கிடைத்த வருமானம், பழைய கடன்களை அடைக்க ஓரளவு உதவியது. காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், முழு நேர அரசியலில் இருந்து விலகியே இருந்தார் வ.உ.சி. நவம்பர் 18 1936 அன்று 64வது வயதில் உயிர் நீத்தார்.
வ.உ.சி சுதேசி கொள்கையை உயிர் மூச்சாக கருதினார். பல்வேறு தொழில்கள் இருக்க, சுதேசி கப்பல் இயக்க அவர் முடிவெடுத்த காரணம் என்ன ? அது இயல்பாக எழுந்ததா அல்லது மண்ணின் பெருமையா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
நாம் சுமார் 2200 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தால், முத்து நகரத்தில் (இன்றைய தூத்துக்குடி) உள்ள கொற்கை துறைமுகத்திற்கு ஏராளமான நாவாய்கள் வந்து போவதையும், மக்கள் கடல் கடந்து வந்து முத்துக்களை வாங்கி செல்வதையும் காண முடியும். அவ்வளவு செழிப்பான ராஜ்யமாக விளங்கியது. அகநானூறு, கலித்தொகையில் கொற்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் பிறப்பிடம் இந்த கொற்கை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலப்போக்கில் இந்த துறைமுகம் பொலிவை இழந்தது. அங்கிருந்து சற்று முன்னோக்கி பயணித்தால், காஞ்சிபுரத்தில் உள்ள மாமல்லபுரம் துறைமுகத்தை நாம் காணலாம். சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தோம். வர்த்தகம் மட்டுமல்லாது கலாசார ரீதியான தொடர்புகளுக்கும் இந்த துறைமுகம் வித்திட்டது.
அப்படியே கால சக்கரத்தை 11ம் நூற்றாண்டிற்கு ஓட்டி வந்தால், பாரத நாட்டின் ஒப்பற்ற வீரன் ராஜேந்திர சோழன், கடல் கடந்து கடாரம் (மலேசியா) வரை சோழர் கொடியை நாட்டுவதை காணலாம். தாய்லாந்து, இந்தோனேசியா , இலங்கை, பர்மா (மியான்மர்) என்று அனைத்து திசைகளிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்டார். இந்து மகா சமுத்திரம் நமது ஆளுமையின் கீழ் இருப்பதையும், கடல் தாண்டிய வணிகத்தில் முன்னணியில் இருப்பதையும் உணர முடியும்.
நமது கலாச்சாரம் பற்றி அறியவும், கல்வி கற்கவும், ஞானம் பெறவும், வேளாண் பொருட்கள், அணிகலன்கள், ஆடைகள் வாங்கவும் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் இங்கு வந்து சென்றார்கள். நமது வணிகர்களும் கடல் கடந்து சென்று, பொருட்களை விற்று வந்தார்கள் . ஒரு காலகட்டத்தில் உலகத்தின் மொத்த உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு இந்தியாவில் நடைபெற்று வந்தது. இப்படிப்பட்ட ஒரு வளமான, வலிமையான தேசமாக பாரதம் விளங்கிய அற்புத காட்சியை நாம் காணலாம்.
அழகுடன் ஆபத்தும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த அழகும், செழிப்பும் தான் அந்நியர்களை இங்கு வரவழைத்தது. 15ம் நூற்றாண்டின் இறுதியில் கடல் மார்க்கமாக போர்த்துகீசியர் வாஸ்கொ டா காமா வந்தார். மலபாரை கைப்பற்றினார்கள். அடுத்த சில ஆண்டுகளில் வியாபாரம் செய்கிறேன் என்று சொல்லி உள்ளே வந்த டச்சு , பிரெஞ்சு, பிரிட்டிஷ் நாட்டவர்கள் நமது நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டார்கள். கடல் பகுதியும் அவர்களுக்கு சொந்தமாகி விட்டது. கப்பல் போக்குவரத்து பிரிட்டிஷார் வசமே இருந்தது. இதனால் நமது உள்நாட்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது சிக்கலாகி போனது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு, ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து விட்டது.
இழந்த பெருமைகளை மீட்க வேண்டும் என்றால், கடல் தாண்டிய வர்த்தகம் மீண்டும் இந்தியர்கள் வசம் வர வேண்டும் என்று வ.உ.சிதம்பரனார் உணர்ந்திருக்க வேண்டும். கடல் மார்க்கமாக இழந்த பெருமைகளை, அதே கடல் மார்க்கமாக மீட்பதே உசிதம் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க வேண்டும். சுதேசி கப்பல் என்பது வியாபார விஸ்தீரணம் மட்டும் அல்ல, அது நமது நாட்டின் அடையாளத்தை மீட்பதுமாக இருக்கும் என்பதை அவர் எண்ணியிருக்க வேண்டும். அதனால் தான் அவர் கப்பல் சுதேசி கப்பல் இயக்க தீர்மானித்திருக்க வேண்டும் .
இன்று தன்னிறைவு பாரதம் திட்டம் நம் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 120 ஆண்டுகளுக்கு முன்னரே இதை முன்னெடுத்தவர் வ.உ.சி. அவர் ஒவ்வொரு செயலிலும் தனது சுதேசி கொள்கைகளை கடைபிடித்தார். சுதேசி பொருட்களை மட்டுமே பயன்படுத்தினார் அவர். பல்லாயிரக்கணக்கானோர் இவரால் ஈர்க்கப்பட்டு சுதேசி போராட்டத்தில் ஈடுபட்டனர், விடுதலை வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஒரு கட்டம் வரை இவரது வாழ்க்கையும், மஹாத்மா காந்தியின் வாழ்க்கையும் ஒரே மாதிரி பயணித்தது. இருவரும் சம காலத்தில் பிறந்தவர்கள், வழக்கறிஞராக பணிகளை துவக்கியவர்கள், வ.உ.சி இங்குள்ள தொழிலாளர்களுக்கு போராடினார், காந்தி தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்திய தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். இரு தலைவர்களுமே ஆன்மீகத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்கள். இருவருமே பிரிட்டிஷ் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள், சுதேசி கொள்கையிலும் தீவிரமாக இருந்தார்கள்.
வரலாறு சொல்லும் உண்மை என்னவென்றால் சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. காந்தியை விட முன்னோடி. தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியாவிற்கு திரும்பியது 1915ல், ஆனால் அதற்குள் வாழ்க்கையில் பல நிலைகளை கடந்து விட்டிருந்தார் வ.உ.சி. அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர், சில காலம் காங்கிரஸில் இருந்தாலும், முன்னரே குறிப்பிட்டது போல முழு நேர அரசியலில் இருந்து விலகி நின்றார். அதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. தன்னை யாரும் கொண்டாட வேண்டாம் என அவரே நினைத்தாரோ அல்லது காலம் அவரை கண்டுகொள்ளாமல் விட்டதோ தெரியவில்லை, தேசமே கொண்டாடியிருக்க வேண்டிய ஒரு தலைவரான , வ.உ.சிதம்பரனார், தனது இறுதி காலத்தில், புகழ் வெளிச்சம் படராமலேயே மறைந்து விட்டார்.
காந்திஜிக்கு நிகராக போற்றப்பட வேண்டியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள். இவரை தமிழகத்தின் மஹாத்மா என்று அழைத்தாலும், அது சாலப் பொருந்தும். அன்னாரது 150வது பிறந்த நாளன்று அவர் பெருமைகளை நினைவுக் கொள்வோம். வந்தே மாதரம்