வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு – பரிதவிக்கும் சாமானிய மக்கள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு – பரிதவிக்கும் சாமானிய மக்கள்

Share it if you like it

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளராக போகும் பொது மக்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம் . அதில் பார்வையாளர் கட்டணம் காணொளி புகைப்படம் எடுக்கும் கேமராக்களுக்கான தனி கட்டணம் உள் வளாகத்தில் சுற்றி பார்க்க ஏதுவாக இருக்கும் பேட்டரி கார் போக்குவரத்து கட்டணம் என்று பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் வெளியான ஒரு உத்தரவில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் ரூபாய் ₹ 200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. புகைப்படக் காணொளி எடுப்பதற்கான கேமரா கட்டணம் தனியாக பிரிக்கப்பட்டு அதுவும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறும் என்று பொதுமக்கள் பலரும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்.

சென்னை வாசிகளுக்கும் சென்னையின் அண்டை மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் பொழுதுபோக்கு என்ற அளவில் முதலிடம் பெறுவது சினிமா தியேட்டர்கள் தான். ஆனால் அதன் கட்டண உயர்வும் பகல் கொள்ளை அளவிலான நொறுக்குத்தீனின் விலை உயர்வு சாமானிய மக்களை சினிமா தியேட்டரின் பக்கம் நெருங்க முடியாத நிலைக்கு கொண்டு வந்தது. அதன் தாக்கம் குடும்பத்தோடு குறைந்த செலவில் பொழுதுபோக்கும் நண்பர்கள் உறவினர்கள் பெரும் கூட்டத் திரளான மக்கள் என்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவும் பொது மக்களுக்கு சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரை வண்டலூர் உயிரியல் பூங்கா சென்னையை அடுத்த மகாபலிபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட சில இடங்கள் மட்டுமே இருக்கிறது.

மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மாநகராட்சிகளில் இருக்கும் பூங்காக்களில் பகல் நேரங்களில் நிற்கக் கூட முடியாது. மாலை நேரங்களில் மட்டுமே அங்கு பொழுதை கழிக்க முடியும் .ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இயற்கையான சூழலும் குடிநீர் கழிவறைகள் வாகன நிறுத்துமிடம் என்று சகல வசதியும் இருக்கும் இடங்களை அவர்களுக்கு நாள் முழுவதுமான பொழுதுபோக்கிற்கு ஏற்ற இடங்களாக இருக்கும். மேலும் இயந்திரத்தனமான நகர வாழ்க்கை போக்குவரத்து நெரிசல் என்று எந்நேரமும் ஒரு மன உளைச்சலோடு இருக்கும் மக்களுக்கு வனம் சார்ந்த சூழல் விலங்குகளோடு பாதுகாப்புடன் கூடிய அருகாமையிலான வன சுற்றுலா என்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பெரும் வரவேற்பும் ஆதரவும் மக்களிடம் இருந்தது.

தொடர் விடுமுறை நாட்கள் அல்லது நண்பர்கள் உறவினர்கள் கூடுகை என்று திட்டமிடும்போது தேவையான குடிநீர் உணவு தின்பண்டங்கள் என்று அனைத்தையும் கையில் கொண்டு போக முடியும். போக்குவரத்தும் நுழைவு கட்டணமும் மட்டுமே பண செலவாக இருக்கும் . அந்த வகையில் ஒரு நாள் முழுவதும் குடும்பமாக விலங்குகளை சுற்றி பார்க்கவும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவும் தங்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஒரு நாள் சுற்றுலா தலமாக வண்டலூர் உயிரியல் பூங்காவை சென்னை வாசிகள் மற்றும் அண்டை மாவட்ட மக்கள் இன்று வரை அனுபவித்து வருகிறார்கள். தமிழக அரசின் இந்த திடீர் கட்டண உயர்வு அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் அரசு சார்பில் ஆவின் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை ஏற்றம் இலவச பேருந்து பயணம் என்ற சலுகை காரணமாக ஷேர் ஆட்டோக்கள் மினி வேன் தனியார் போக்குவரத்து களின் விலை ஏற்றம் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழக அரசின் காரணமாக பல்வேறு விலையேற்றங்களையும் பொருளாதார சுமைகளையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மின் கட்டணம் முதல் சொத்துவரி வரை பன்மடங்கு உயர்த்தப்பட்டது பெரும் பாதிப்புகளை மக்கள் கடந்து வந்தார்கள். இந்நிலையில் அன்றாடம் காய்ச்சிகள் முதல் நிலையான மாத வருவாய் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமை மன உளைச்சலான இயந்திர வாழ்க்கை என்று அனைத்திற்கும் ஒரு வடிகாலாக மன ரீதியான புத்துணர்வு தரும் மருந்தாக இந்த பொழுதுபோக்கு இடங்களையும் சுற்றுலா தலங்களையும் முதல் இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதிலும் வண்டலூர் உயிரியல் பூங்கா சென்னை நகருக்கு வெளியே போக்குவரத்து நெரிசலுக்கு அப்பால் அமைந்திருப்பது. சென்னை நகர மக்களுக்கும் அண்டை மாவட்ட மக்களுக்கும் எளிதில் பிரயாணம் செய்யவும் ஒரே நாளில் கண்டு களிக்கவும் ஏதுவான இடமாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா முதலிடத்தில் இருந்தது. ஆனால் இந்தக் கட்டண உயர்வும் தமிழக அரசின் இந்த இரும்பு பிடியும் சாமானிய மக்களை மனரீதியாக புண்படுத்துகிறது.

ஒருபுறம் சீரழியும் நிர்வாகம் தொடர்ச்சியான விலையேற்றம் எல்லா வகையிலும் கட்டண உயர்வுகள் என்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி உழைத்தாலும் மொத்த வருவாயும் விலைவாசி உயர்வு கட்டண உயர்வு என்று பகல் கொள்ளையாக போகிறது . மறுபுறம் வீதிக்கு வீதி டாஸ்மாக் மதுபான கடைகள் போதை பொருட்களின் சர்வ சுதந்திரமான நடமாட்டம் என்று பெரும்பாலான வருமானம் போதையின் பாதையில் போகிறது. இது இரண்டிற்கும் இடையில் பரிதவிக்கும் பெண்களும் குழந்தைகளும் அவர்களின் குறைந்தபட்ச மன ஆறுதலுக்கும் புத்துணர்வுக்கும் துணையாக இருந்தது ஆலயங்களும் வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற பொழுதுபோக்கு சுற்றுலா தளங்கள் மட்டுமே . எல்லா தரப்பு மக்களுக்கும் பொதுவான எல்லா நாட்களிலும் கிடைக்கும் பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக வண்டலூர் உயிரியல் பூங்கா இருந்தது . ஆனால் தமிழக அரசின் இந்த கட்டண உயர்வு காரணமாக இனி இது போன்ற பொழுதுபோக்கும் மன ஆறுதலும் கூட சென்னையில் சாமானிய மக்களுக்கு இல்லை என்ற நிலை உருவாகிறது .சென்னை மக்களை கடந்து வடமாவட்ட மக்களையும் பெரிய அளவில் பாதிக்கும். இந்த கட்டண உயர்வை பற்றி அரசு எந்த ஒரு விளக்கமும் அல்லது பரிசீலனையோ இல்லாமல் கட்டண உயர்வை அமல் படுத்துவதற்கான முனைப்பு காட்டுவது பொதுமக்களை மேலும் புண்படுத்துகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் .இலவசமாக தருகிறோம் என்று சொல்லி வந்தவர்கள் இன்று அந்த இலவசங்கள் அதன் மூலம் வரும் நஷ்டத்தை ஈடுகட்ட பல்வேறு வகையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விலைவாசி உயர்வு கட்டண உயர்வுகளை செய்கிறார்கள் என்ற யதார்த்த உண்மையை இன்னமும் தமிழகத்தில் பொதுமக்கள் உணரவில்லை . அதே நேரத்தில் இலவசங்களும் பண பலன்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை மேலும் மேலும் சுரண்டும் நிலைக்கே கொண்டு போகும் அது ஆட்சியாளர்களுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தராது. பொதுமக்களுக்கும் நீண்ட கால பலனை தராது என்பதை உணர்ந்து சரியான வழியில் ஆட்சி அதிகாரத்தையும் மக்களையும் வழிநடத்த வேண்டிய ஆட்சியாளர்களும் அதிகாரத்திற்கு வந்தால் போதும் அதிகார கொள்ளையை முன்னெடுத்தால் போதும் என்ற சுயநலத்தில் மீண்டும் மீண்டும் மக்களை இலவசம் என்ற மாயையில் வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இது போன்ற கட்டண உயர்வுகளை விலைவாசி உயர்வுகளை அனுமதிப்பது நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. இதை தமிழகத்தின் பொதுமக்களும் ஆட்சியாளர்களும் உணர்ந்தால் எதிர்காலத்திலாவது இதுபோன்ற சீரழிவுகளை தவிர்க்க முடியும்.


Share it if you like it