“ஒரு வேளை நான் மத்திய கல்வி அமைச்சரானால் ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ஒழித்து, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவேன்” என்று வாத்தி திரைப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரி பேசியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் அதேசமயத்தில், எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது.
தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் இன்று ரிலீசாகி இருக்கும் படம் ‘வாத்தி’. இப்படத்தில் தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை தெலுங்கு திரையுலக இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கி இருக்கிறார். இவர், 2010-ம் ஆண்டு ‘சினேக கீதம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமானதோடு, அப்படத்தில் நடிக்கவும் செய்தார். பின்னர், 2018-ம் ஆண்டு ‘தோழி ப்ரேமா’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தவிர, ‘மிஸ்டர் மஞ்சு’, ‘ரங்தே’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது ‘வாத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர் ஒருவருக்கு வெங்கி அட்லுரி அளித்துள்ள பேட்டிதான், பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், சிலரது மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது. அதாவது, மத்திய அரசு பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் பயன்பெறும் வகையில், கடந்தாண்டு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. இது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேசமயம், தமிழகத்தில் மட்டும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், வாத்தி பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிருபர் ஒருவர், “ஒருவேளை நீங்கள் மத்திய கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள்?” என்று வெங்கி அட்லுரியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அட்லுரி, “இது சர்ச்சையான பதிலாகக் கூட இருக்கலாம் என்றபடியே தொடர்ந்தவர், தற்போது இருக்கக் கூடிய இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன். ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு கூடாது, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவேன். அப்போதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்’’ என்று கூறியிருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே, இக்கருத்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அதாவது, ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டால், தன்னை விட குறைந்த மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவரிடம் தன்னுடைய கல்வி உரிமை பறிகொடுக்கும் உயர் ஜாதி மாணவர்கள், பிற்காலத்தில் வேலை வாய்ப்பையும் இழக்கிறார்கள். இதனால், உயர் ஜாதியினரின் கனவு தகர்க்கப்படுகிறது. எனவே, தங்களது கேரியருக்கு வெளிநாடுகளை நோக்கி கவனம் செலுத்துகிறார்கள். இதன் காரணமாக, இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய பல்வேறு திறமைசாலிகள், வெளிநாடுகளுக்கு கிடைத்து விடுகிறார்கள். ஆகவே, ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடை ரத்து செய்துவிட்டு, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதையடுத்தே, பா.ஜ.க. தலைமையிலான மத்திய பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடை கடந்தாண்டு நடைமுறைப்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில்தான், வாத்தி திரைப்படத்தினர் இயக்குனரும் அதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் அதேசமயம், ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டால் அதிகம் பயனடைந்து வரும் சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்திலுள்ள இட ஒதுக்கீடு போராளிகள் கச்சைகட்டிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெங்கி அட்லுரிக்கு எதிராக கம்பு சுற்றி வருகின்றனர்.