அழிக்கப்பட்ட ஆலயம் – வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

அழிக்கப்பட்ட ஆலயம் – வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

Share it if you like it

அகத்தியர் வணங்கிப் பேறு பெற்ற தலம், ஆகையால், வேதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு, “அகத்தீஸ்வரம்” என்னும் பெயருண்டு!

14 ஆம் லூயி பிரான்ஸ், தேசத்தை ஆட்சி புரிந்த காலம், அவர் பிரதிநிதியாக,“கவர்னர் துய்ப்ளேக்ஸ்” புதுவையை ஆண்டு கொண்டிருந்தார். அவருக்கு, அக்காலத்தில் உடனிருந்து உதவி வந்தவர், ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் (1709 – 1761).

‘நாட்குறிப்பு’ எழுதுவது ”ஆனந்தரங்கப் பிள்ளையின் வழக்கம். அவரின் நாட்குறிப்புகளால், எத்தனையோ அரிய செய்திகள், உலகுக்கு கிடைத்தன. எளிதில் எல்லோராலும் படித்தறிந்து கொள்ள முடியாத, தமிழ் நடை அது.

”ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள்” (தமிழ்ப் பிரதி), பாரீஸ் தேசத்து தேசியப் புத்தக சாலையில், தமிழ்ப் பிரிவில் வைக்கப் பட்டிருக்கின்றன”.

சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள், 19-11-44ல் “முதல் ஆங்கிலேயன்’ என்றொரு கட்டுரையை, “இந்துஸ்தான்” இதழில் எழுதி இருந்தார்கள். அக்கட்டுரையில், பரங்கியர் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களைக் குறித்திருக்கின்றனர். ”கோயில்கள் தரை மட்டம்” என்ற சொற்றொடர், அக்கட்டுரையில் காணப்படுகிறது. அதற்கொரு சான்று, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் கிடைக்கிறது.

(1748) விபவ ஆண்டு, ஆவணி மாதம் 20 ஆம் தேதி, நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி, பிள்ளையவர்களின் நாட்குறிப்புகள் கீழே தரப் படுகிறது.

“இன்று காலை நடந்த அரிய செயல் வருமாறு: ‘இஞ்சினியர் செர்ப்போ’ என்பவரும், கிறிஸ்து மதப் போதகர்களும், (பாதிரிமார்கள்) 200 ஒட்டர்களையும் மற்றும் 200 கூலியாட்களையும் அழைத்துக் கொண்டு, “சேன்போல்’ கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். (இக்கோயில் இன்று இல்லை). அங்கு இருந்த 67 குதிரை வீரர்களையும், 200 சிப்பாய்களையும் துணையாகக் கொண்டு, முன் கூட்டியே தங்களுக்குள் முடிவு செய்திருந்த படி, வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் வந்து சேர்ந்தார்கள். (வேதபுரீஸ்வரர் கோயில் என்பது தான், மேற்குறித்த சிவன் கோயில்). கோயிலின் தென்புற மதில் சுவரை இடிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட கோயில் அதிகாரிகளும், பிராமணர்களும் என்னிடம் வந்து முறையிட்டனர். விக்கிரஹங்கள், பூசைப் பொருட்கள், வாகனங்கள் முதலியவற்றை உடனே அப்புறப் படுத்தும் படி, சொல்லி அனுப்பினேன். பழைய அமுதுண்டு, 7 மணிக்கு, பாக்குக் கிடங்குக்குப் போனேன்.

அங்கு, வேளாளப் பிரமுகர்களும், கோயில் அர்ச்சகர்களும் வந்தனர். கவர்னரைப் போய்ப் பார்த்து, காப்பிரிகளும், பறையர்களும் உள் நுழைவதற்கும் பூசைக்குரிய பொருட்களை எடுத்துக் கொள்வதற்கும், உத்தரவு கேட்கும்படி அவர்களிடம் கூறினேன். அத்தருணத்தில் சிலர் ஓடி வந்து, சேன்போல் கோயிலின் பெரிய குருவாகிய (பாதிரியார் “கேர்து’ என்பவர் மூலஸ்தானத்தின் கதவைக் காலால் எட்டி உதைத்து, காப்பிரிகளைக் கூப்பிட்டு அக்கதவைக் கழற்றிப் போடும் படி உத்தரவிட்டதாகவும், விமானங்களை உடைத்துக் கொண்டிருக்கிறதாகவும் கூறினர். “பார்த்தீர்களா! நான் சொன்னது போல் நடப்பதை; சீக்கிரம் செல்லுங்கள்” என்று வேளாளர் முதலியோரிடம் சொல்லி விட்டு, நானும் கவர்னர் மாளிகைக்குப் புறப்பட்டேன்.

போகும் போதே, ஏதாவது பொருத்தமில்லாத காரணத்தை, அவர் (கவர்னர்) சொல்வாரென்று, எண்ணிக் கொண்டே போனேன். நான் போன போது, கவர்னர் என்னிடத்தில் ஒரு வார்த்தையும் பேசாமல், தன் மனைவியின் தூக்குக் கூடையில் (பிரம்பினால் செய்யப்பட்ட ‘டோலி’) உட்கார்ந்து ‘சேன்போல்’ கோயிலை நோக்கிப் புறப்பட்டு விட்டார்!

ஆறுமுக முதலி, நல்ல செட்டி, துளுவுப்ப முதலி இன்னும் மற்ற நாட்டாண்மைக்காரர்களும், கவர்னர் வீட்டிற்கு அருகில் இருக்கும் குளத்தருகில் போய், அங்கு கவர்னரைக் கண்டு வணங்கினர். கவர்னர், ‘எங்கு வந்தீர்கள்?’ என்று கேட்டார். அருகிலிருந்த ‘பர்லான்’ என்பவர் (மதம் மாறிய உள்ளூர் ஆள்) “அவர்கள் கோயில் இடிக்கப் படுகிறது; அதனுள்ளிருக்கும் தங்கள் பொருள்களை எடுத்துக் கொள்ள உத்தரவு கேட்கிறார்கள்” என்று அரைகுறையான பிரஞ்சு மொழியில் கூறினார்.

கவர்னர் அச்சமயம் நல்ல இயல்போடு இருந்ததால், “சரி, அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று உத்தரவு கொடுத்து, அனுப்பி விட்டார்! பிறகு, சேவகர்களைப் பார்த்து, “இங்கு இருப்பவர்களை அடித்து விரட்டுங்கள்” என்று கட்டளையிட்டார்.

இச்சமயத்தில், ‘கப்புய்சேன்” கோயிலுக்கு (இன்றும் உள்ள ஒரு ‘சர்ச்’) வலப்புறத்திலுள்ள பள்ளி வாசலையும் (இந்தப் பள்ளிவாசலும் இன்றில்லை) இடிக்கக் கட்டளையிட்டதாகக் கேள்வியுற்ற, ஜமேதார் அப்துல் ரஹ்மான் ஓடி வந்து, பின்வருமாறு முறையிட்டார்! ”ஐயா நீங்கள் பள்ளி வாசலை இடித்து விடக் கட்டளையிட்டிருக்கிறீர்கள். அப்படி அது இடிக்கப்பட்டால், ஒரு சிப்பாய் கூட இங்கிருக்கப் போவதில்லை. மேலும், இடிக்க ஆரம்பித்த உடனே, சிப்பாய்கள் இடிப்பவர்கள் மீது பாய்ந்து, அவர்களைக் கொன்று விடுவார்கள்.”

(இதனால், அப்போது அதிகமான முஸ்லிம்கள் உள்நாட்டுச் சிப்பாய்களாக இருந்தனர் என்று தெரிகிறது).

சிப்பாய்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டி இருந்ததால், ‘பள்ளி வாசலை இடிப்பதைப்  பற்றிப் பேச்சே இல்லை” என்று ஐயா (கவர்னர்) சொல்லி அனுப்பி விட்டார்!

தமிழர்கள் வீரத்தோடு இருந்திருந்தால், அவர்கள் கோயிலை யாரும் தொட்டிருக்க முடியாது…

நாட்டாண்மைக்காரர்கள் தங்கள் பொருட்களை எடுக்கக் கோயிலுக்கு வந்த போது, “சேன்போல்” ஆலயத்து கிறிஸ்துவப் பாதிரிகள், காப்பிரிகளையும், சிப்பாகளையும், பறையர்களையும் ஏவி, அவர்களை அடிக்கும் படி தூண்டினார்கள். பாதிரிகளும் கோயிலில் அவர்களை நுழைய விடாமல், தடி கொண்டடித்தார்கள். உற்சவ விக்கிரகத்தையும், பிள்ளையார் விக்கிரகத்தையும் தான், அவர்களால் கைப்பற்ற முடிந்தது. நகைகளை எடுக்கும் போது, காரைக்காலில் இருந்து வந்த கிறித்துவப் பாதிரி, பெரிய லிங்கத்தை உதைத்துத் தள்ளி, கையில் வைத்திருந்த சம்மட்டியினால், அடித்து உடைத்து விட்டார்.

காப்பிரிகளைக் கொண்டும், வெள்ளையர்களைக் கொண்டும் விஷ்ணு விக்கிரகத்தையும், மற்ற விக்கிரகங்களையும், உடைக்கச் செய்தார். அன்றியும், “உங்களுக்கு எவற்றை உடைக்கப் பிரியமோ, அவற்றையெல்லாம் உடையுங்கள்” என்று சொன்னார். அப்போது, அவர்கள், “50 வருடமாகச் செய்ய முடியாதிருந்ததை நீர் செய்தீர்! உமது விடா முயற்சியினால், இது நடந்தது; நீர் ஒரு தகுதியான மனிதர்; ‘மகாத்மா’; இதை எங்கள் புத்தகத்தில் எழுதி, உம்மை இந்த உலகம் முழுவதும் புகழும்படி செய்வோம்” என்று கூறினார். இத்தருணத்தில், பர்லான்’ என்பவன், செருப்புக் காலினால் லிங்கத்தை ஒன்பது பத்துத் தடவை எட்டி உதைத்து, அதன் மீது காறி  உமிழ்ந்தான்.

இந்தக் கோயிலில் நடந்த அட்டூழியங்களை, ஏட்டில் எழுதவோ, வாயினால் சொல்லவோ முடியாது. இவ்விதம் செய்யும் படி சொன்னவர்களுக்கு என்ன கதி நேருமோ தெரியாது?”

நாட்குறிப்புச் சுருக்கம் இவ்வளவே! அதற்குப் பிறகு, புதிதாக அமைக்கப்பட்டதே, அருள்மிகு ஸ்ரீவேதபுரீசுவரர் திருக்கோயிலாகும்!

இந்நிகழ்ச்சிக்கு முதற் காரணமாய் இருந்த கவர்னர்  துய்ப்ளேக்சும், அவர் குடும்பத்தினரும் பரிதாபமான முடிவைப் பெற்றனர்!

“துய்ப்ளேக்ஸ் பிரான்ஸ் தேசம் சென்றதும், சில பொய்க் குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு, அவருடைய பெட்டுகள், பட்டயங்கள், மற்ற உடைமைகள் எல்லாம் பாதுகாப்பில் வைக்கப்பட்டன. அவரும், அவர் குடும்பத்தாரும் வறுமையின் வாய்ப்பட்டுத் துயரப் பெருக்கால் உயிர் துறந்தனர்”


Share it if you like it