கட்சிக்கு எதிராக களத்தில் குதித்த தி.மு.க. நிர்வாகி: தட் கரடியே காரித் துப்பிய மொமன்ட்!

கட்சிக்கு எதிராக களத்தில் குதித்த தி.மு.க. நிர்வாகி: தட் கரடியே காரித் துப்பிய மொமன்ட்!

Share it if you like it

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம், தனியார் நூற்பாலைக்கு குடோன் அமைக்க வாடகைக்கு விட்டு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சேனன்கோட்டையில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது. அப்போதைய வேடசந்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமசிவம் ஏற்பாட்டில் 2.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த பதப்படுத்தும் நிலையம், தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாத காரணத்தால், திறப்பு விழா நடைபெறவில்லை. இதையடுத்து, தி.மு.க. ஆட்சி வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.

இதனால், இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விலை குறைவான நேரத்தில் பாதுகாப்புடன் வைத்திருந்து விலையேற்றத்தின்போது நல்ல விலைக்கு விற்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இந்த நிலையம் தனியார் நூற்பாலைக்கு வாடகைக்கு விடப்பட்டு, ஆலையில் வீணாகும் கழிவுப் பொருள்களை தேக்கிவைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், நாகம்பட்டி தி.மு.க. ஒன்றிய பெண் கவுன்சிலரின் கணவரும் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளருமான மாசி, காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டடம் நூற்பாலை குடோனாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, இதுகுறித்து வேதனை தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், இப்பகுதியிலுள்ள அனைத்து தி.மு.க.வினரும், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில், பதப்படுத்தும் நிலையத்தை முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். இதன் மூலம் அனைத்து விவசாயிகளும் பயனடையலாம். ஏராளமான விவசாய பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தோம். ஆனால், அரசு அதிகாரிகள் விவசாயத்துக்கே சம்பந்தம் இல்லாத நூற்பாலை நிர்வாகத்துக்கு குடோனுக்காக வாடகைக்கு விட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தொடர்ந்து, தனியார் நூற்பாலைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, கட்டடத்தை விவசாயிகள் உற்பத்திக் குழுக்களுக்கு வழங்க வலியுறுத்தி மாசி தலைமையில் விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு குடோனுக்கு பூட்டு போட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வுக்கு எதிராக அக்கட்சியின் நிர்வாகியே களத்தில் குதித்த சம்பவத்தை, தட் கரடியே காரித்துப்பிய மொமன்ட் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it