காந்தியை உலகிற்கு அறிமுகம் செய்தவர் – அண்ணாசாமி சுந்தரம்

காந்தியை உலகிற்கு அறிமுகம் செய்தவர் – அண்ணாசாமி சுந்தரம்

Share it if you like it

வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம்

(பிறப்பு: 02.02.1896 – மறைவு:11.03.1967)

இந்திய விடுதலை இயக்கத்தின் போது மகாத்மா காந்தியுடன் துணை நின்றவர். மதன் மோகன் மாளவியாவின் நம்பிக்கை பெற்றவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் செயலராக இருந்தவர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம்.

கோயமுத்தூர் நகரத்தை ஒட்டிய வெள்ளலூர் கிராமத்தைச் சார்ந்த அண்ணாசாமி அய்யருக்கு பிறந்தவர் சுந்தரம். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் போது, மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்ட சுந்தரம், கல்வியை இடையில் நிறுத்தி விட்டு, டிசம்பர் 1914 இல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து, இந்திய விடுதலை இயக்கத்தில் நேரடியாகப் பங்கெடுத்தவர்.

https://youtu.be/8S4LvjiZtkA

1917 இல் வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்திலும், 1925 இல் வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும், 1930 இல் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் மற்றும் 1930 & 1931ஆம் ஆண்டுகளில் ஒத்துழையாமை இயக்கங்களில் கலந்து கொண்டு, பல முறை சிறை சென்றவர்.

மகாத்மா காந்தி, லண்டன் நகர வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன், இந்திய விடுதலை குறித்தான காந்தியின் இந்திய விடுதலை இயக்க செய்திகளை, ஐரோப்பிய நாடுகளில் பரப்ப, 1931 ஆம் ஆண்டில் ஏழு மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

       இத்தாலி, சுவிட்சர்லாந்து, வாடிகன், ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, செக்கோஸ்லோவோகியா போன்ற ஐரோப்பிய நாடுகளில், காந்தியின் இந்திய விடுதலை இயக்கச் செய்திகளை அந்நாட்டு தலைவர்களிடம் விவரித்து, இறுதியாக லண்டன் வட்ட மேஜை மாநாட்டிற்கு காந்திக்கு உதவியாக இருந்தார்.

1916 ஆம் ஆண்டில் மதன் மோகன் மாளவியா, வாரணாசியில் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவ மேற்கொண்ட முயற்சியில், சுந்தரம் மாளவியாவின் நேர்முக உதவியாளாராகவும், பல்கலைக்கழக கட்டிட நன்கொடை வசூலிக்கும் குழுவின் செயலராகவும் இருந்து, நாடு முழுவதுமிருந்து நன்கொடைகள் வசூலித்துக் கொடுத்தார். 1926 இல் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் துவங்கிய பின், அதன் செயலராக, 1956 ஆம் ஆண்டு முடிய, முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார்.


Share it if you like it