வேலூர் அருகே கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்ட கும்பலை ஹிந்துக்கள் சிறைப்பிடித்து, திருப்பி அனுப்பிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மத மாற்றம் என்பது நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஆகவே, மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஹிந்துக்களும், ஹிந்து அமைப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, மத மாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசும் பரிசீலித்து வருகிறது. அதேபோல, கோவா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களும் மத மாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் மத மாற்றத் தடைச் சட்டம் சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றமும் கட்டாய மத மாற்றம் சட்டப்படி குற்றம் என்று கூறியிருக்கிறது. ஆனாலும், மத மாற்றம் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் மத மாற்றம் உச்சத்தில் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் முதல் கிராமங்கள் வரை கிறிஸ்தவ மத மாற்றம் வரைமுறையின்றி நடந்து கொண்டிருக்கிறது. இப்படி மதம் மாற்ற வருபவர்கள் பற்றி அப்பகுதி ஹிந்துக்களும், ஹிந்து அமைப்பினரும் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மாறாக சமாதானப்படுத்தி வைத்து அனுப்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில்தான், மத மாற்ற வந்த கும்பலை ஹிந்துக்கள் ஒன்று திரண்டு வந்து முற்றுகையிட்டு, கதற விட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வேலூர் மாவட்டம் சின்னச்சேரி கிராமத்துக்கு யேசுதாஸ் என்பவர் தலைமையில் சுமார் 15 பேர் கொண்ட கிறிஸ்தவ மத மாற்றும் கும்பல் ஆட்டோ மற்றும் காரில் நேற்று வந்திருக்கிறது. இக்கும்பல் அக்கிராம மக்களிடம் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்ததோடு, கடவுளை சென்றடையும் வழி என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தையும் விநியோகித்திருக்கிறது.
இதுகுறித்த தகவல் ஹிந்து அமைப்பினருக்குத் தெரியவந்தது. உடனே, சம்பவ இடத்துக்கு வந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கும்பலிடம், எப்படி மத மாற்றம் செய்யலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நீங்கள் ஹிந்து மதத்துக்கு மாறுங்கள் என்று சொல்லி, விபூதி, குங்குமம் ஆகியவற்றை அக்கும்பலின் நெற்றியில் பூசிவிட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையறிந்த குடியாத்தம் போலீஸார் விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, கிறிஸ்தவ மத மாற்றி கும்பலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஹிந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் மத மாற்றம் உச்சத்தில் இருக்கிறது. இதை தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கண்டிப்பதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. காரணம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரால்தான் தாங்கள் ஆட்சி வந்திருக்கிறோம் என்கிற எண்ணம்தான். தற்போதே தமிழகத்தில் ஏராளமான ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மதம் மாற்றி விட்டார்கள். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் ஹிந்துக்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள். ஆகவே, ஹிந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதோடு, இதுபோன்ற மத மாற்ற கும்பல் எங்கு வந்தாலும், அங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும். மேலும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மத மாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவேண்டும்” என்றார்.