போலி ஆதார்… 1,000 சிம் கார்டு… இப்ராஹிம், தஸ்தகீர் கைது!

போலி ஆதார்… 1,000 சிம் கார்டு… இப்ராஹிம், தஸ்தகீர் கைது!

Share it if you like it

வேலூர் அருகே போலி ஆதார் எண் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கிய இப்ராஹிம், தஸ்தகீர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேற்கண்ட சிம் கார்டுகள் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரி போலீஸார், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அலமேலுமங்காபுரம் அருகே 2 வாலிபர்கள் சர்வீஸ் ரோட்டில் சந்தேகப்படும்படி நின்றிருந்திருக்கிறார்கள். இருவரையும் பிடித்து போலீஸார் சோதனை நடத்தியபோது, பையில் ஏராளமான ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பிகள் மற்றும் 40 சிம்கார்டுகள் இருந்திருக்கிறது. இருவரிடமும் நடத்திய விசாரணையில், போலி ஆதார் அட்டைகளை வைத்து சிம்கார்டுகள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, 2 வாலிபர்களையும் பிடித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு நடத்திய விசாரணையில், மேலும் 2 பேருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து, சிம்கார்டுகளை வாங்கி விற்று வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, 4 பேரையும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தைச் சேர்ந்த ஆதார் இப்ராஹிம், ஷேக் தஸ்தகீர், அசோக், வேலூரைச் சேர்ந்த விஜய் என்பதும், வேலூர் மாவட்டத்தில் போலியான ஆதார் அட்டைகளை வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், இப்ராஹிம், ஷேக் தஸ்தகீர் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தின் சிம்கார்டுகளை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்திருக்கிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பிறகு, இப்ராஹிம் தஸ்தகீர் இருவரும் சேர்ந்து அசோக், விஜய் ஆகியோரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, இந்த மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

அதாவது, தற்போதைய நடைமுறைப்படி ஆதார் அட்டை நகல் கொடுத்துத்தான் சிம்கார்டுகள் வாங்க வேண்டும். அப்படி வாங்குபவர்களின் ஆதார் அட்டை நகலில் இருக்கும் புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் புகைப்படங்களை வைத்து போலி ஆதார் அட்டைகளை தயார் செய்து, ஒவ்வொரு ஆதார் அட்டையின் மூலமும் 10-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி இருக்கிறார்கள். இந்த சிம்கார்டுகளை, ஆந்திரா, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூரியர் மூலம் பார்சல் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சிம்கார்டுகள் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், மேற்படி பார்சல் அனுப்பிய விவரங்கள் மற்றும் சிம்கார்டுகளின் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Share it if you like it