வேலூரில் குடிநீர் அடி பைப் மீது கழிவுநீர் கால்வாய் தடுப்புச் சுவர் அமைத்த அவலம் அரங்கேறி இருக்கிறது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வேலூர் மாநகராட்சியை சீர்மிகு நகரமாக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிக்காக மத்திய அரசின் பங்களிப்பாக 500 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்களிப்பாக 500 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், பூங்கா, சாலைகள், கான்கிரீட் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடந்து வருகின்றன. இப்பணிகளில்தான் ஏராளமான குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த மாதம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விசிட் அடித்தார். இதையொட்டி, சாலை அமைக்கும் பணிகள் அவசர கதியில் நடந்தன. அப்போது, கடைகளின் முன்பும், வீட்டின் முன்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களோடு சேர்த்து கான்கிரீட் சாலை அமைத்த அவலம் அரங்கேறி தமிழகம் முழுவதும் சிரிப்பாய் சிரித்த சம்பவம் நடந்தேறியது. இந்த நிலையில்தான், தற்போது குடிநீர் அடி பைப் மீதும் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்த அவலம் அரங்கேறி இருக்கிறது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட 2-வது மண்டலம் சத்துவாச்சேரியை அடுத்த 19-வது வார்டு விஜயராகவபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடந்திருக்கிறது. இப்பணியின்போதுதான், குடிநீர் அடி பைப்புடன் சேர்த்து கான்கிரீட் சுவர் எழுப்பி இருக்கிறார்கள். இதில், அடி பைப்பின் கைப்பிடி மட்டுமே வெளியே தெரிகிறது. தண்ணீர் வெளியே வரும் குழாய், கான்கிரீட் சுவருக்குள் மறைந்து விட்டது. இதை யாரோ வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர்.
இதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும், வேலூர் மாநகராட்சியின் அவலநிலையை பாருங்கள் என்றும், இதுதான் விடியல் அரசு என்றும் கலாய்த்து வருகின்றனர்.