தமிழகத்தில் ஹிந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அரபு மொழிக்கு மட்டும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்தது எப்படி என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் அமைந்திருக்கிறது பேர்ணாம்பட்டு நகராட்சி. இங்கு நகராட்சி ஆணையராக இருப்பவர் சையது உசேன். இவர், பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையில் ‘அல்லா ஒருவனே கடவுள். இது இறைவன் எனக்கு அளித்த கொடை. இறைவனின் நாட்டம்’ என்று அரபு மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை பதித்திருந்தார். இது அந்த நகராட்சியில் பணிபுரியும் இதர மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு அவர்தான் தலைமை அதிகாரி என்பதால் யாராலும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. அதாவது, எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை.
இந்த நிலையில்தான், சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து பேர்ணாம்பட்டு நகராட்சி சேர்மன், துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் என மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றார்கள். இவர்கள் ஆணையர் சையது உசேன் அறைக்குச் சென்று வந்தபோது, அரபியில் கல்வெட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனாலும், இவர்களுக்கும் ஆணையரை எதிர்த்து கேள்வி கேட்க துணிவில்லை. தவிர, தற்போது தி.மு.க. ஆட்சி நடப்பதாலும், பேர்ணாம்பட்டு நகராட்சியும் தி.மு.க. வசம் இருப்பதாலும், இஸ்லாமியர்கள் தி.மு.க. ஆதரவாளர்கள் என்பதாலும் ஆணையர் சையது உசேனின் இத்தகைய செயல்பாட்டை கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.
எனினும், துணிச்சலான ஒருவர் இதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். இது வைரலான நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், பாரதத்தில் அதிகம் பேசப்படும் மொழியான, தேசத்தின் மொழியாக கருதப்படும் ஹிந்தி மொழிக்கு தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அப்படி இருக்க, ஒரு குறிபிட்ட மதத்தினரால் மட்டுமே பேசப்படும், அதுவும் அரபு நாடுகளில் இஸ்லாமியர்களால் பேசப்படும், சிறுபான்மை மொழியான அரபி மொழியில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டை, ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்தைச் சேர்ந்த ஆணையர் சையது உசேன், தனது அலுவலகத்தில் வைக்க யார் அனுமதி கொடுத்தது என்கிற கேள்வியையும் எழுப்பினார்கள்.
இதனிடையே, இந்த விவகாரம் ஹிந்து அமைப்புகளுக்குத் தெரியவரவே, ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால், இந்த விவகாரம் பெருமளவில் விவாதத்துக்கு உள்ளானது. இதையடுத்து, பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சையது உசேன் அறையில் பதிக்கப்பட்டிருந்த அரபு மொழி கல்வெட்டு அகற்றப்பட்டது. அதேசமயம், சையது உசேன் ஆணையராக இருந்த அனைத்து நகராட்சிகளிலும் இதேபோலதான் அரபு மொழி கல்வெட்டை பதித்து வைத்திருந்தாரா என்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஹ்ந்து அமைப்புகளும், சாமானிய மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.