வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில்
தாயார் – எல்லையம்மன்
மூலவர் – எல்லையம்மன்
உற்சவர் – மாரியம்மன் – சிரசு உற்சவர்
ஊர் பெயர்.- வெட்டுவாணம்
புராதன பெயர் – வெட்டுப்பட்ட வனத்து அம்மன்
கோவில் நடை திறப்பு காலை 8 – 12 மாலை 5 – 8 வரை
ஆலய தல வரலாறு:
சிவனும் பார்வதியும் ஜமதக்னி முனிவராகவும் ரேணுகா தேவியாகவும் பூலோகத்தில் எழுந்தருளி விசு விசுவாஷ் விஸ்வரூபம் பரஞ்சோதி பரசுராமன் என்ற ஐந்து புதல்வர்களோடு வாழ்ந்தார்கள். பரசுராமன் என்னும் அவரது கடைசி புதல்வன் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற இலக்கணத்தில் வாழ்ந்தவர்.
ரேணுகா தேவி தினமும் மணலில் பானை செய்து அதில் புனித நீர் கொண்டு வந்து முனிவரின் பூஜைக்கு கொடுப்பது வழக்கம். ஒரு நாள் ஆகாயத்தில் பறந்து போன கந்தர்வனின் நிழல் உருவத்தை தனது பானையில் இருந்த நீரின் நிழலாக பார்த்த ரேணுகாதேவி சுதாரிக்கும் முன் அவரது அழகு இளமை மறைந்தது. பானையும் குலைந்து மண்ணும் நீரும் ஆற்றில் கலந்தது.
தவறு நிகழ்ந்ததை ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டு தனது கணவரின் தண்டனை தான் இது என்பதை உணர்ந்து அவர் தவறை உணர்ந்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் பானையை உருவாக்கவோ தண்ணீரைக் கொண்டு வரவோ இயலவில்லை.
நிகழ்ந்ததை அறிந்த ஜமதக்னி முனிவர் தனது நான்கு புதல்வர்களையும் ஒவ்வொருவராக அழைத்து அவர் தாயின் சிரசை வெட்டி கொல்லுமாறு உத்தரவிட்டார். நான்கு புதல்வர்களும் வரிசையாக மறுத்துவிட்டனர். ஆனால் ஐந்தாவது புதல்வரான பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று விறகு வெட்டும் கோடாலியை கொண்டு தனது தாயை வெட்டி கொன்றார் .
அவர் தனது தாயை வெட்டுவதற்காக துரத்திச் செல்லும் போது அருந்ததி என்ற விறகு வெட்டிப் பெண் பின்னே ரேணுகாதேவி ஒளிந்து கொள்ள பரசுராமர் எத்தனை முறை எச்சரித்தும் அவள் விலகாது போக பரசுராமர் இரண்டு பேரின் தலைகளையும் சேர்த்து வெட்டி வீழ்த்தினார். திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வின் முடிவில் மீண்டும் தாய் ரேணுகா உயிர்பித்து வந்தார். ஆனால் தந்தையின் ஆணைப்படி இறந்த தாயின் உடலையும் தலையையும் இணைக்கும் போது குழப்பத்தில் தனது தாயின் உடலோடு விறகு வெட்டி பெண்ணான அருந்ததியின் தலையை தவறுதலாக பரசுராமர் பொறுத்தி விட அவரது தாயின் தலையை அருந்ததியின் உடலோடு பொறுத்தி உயிர்பிக்க செய்தார் .
அதன் பிறகு உயிர் பெற்று எழுந்த விறகு வெட்டியின் மகளான அருந்ததி மாரியம்மன் எல்லையை காக்கும் காவல் தெய்வமாக எழுந்தருளினாள். ஒரு விவசாயி உழும் பணியின் போது பூமியில் மறைந்திருந்த சிலையில் வெட்டுப்பட்டு உதிரம் ஆறாக ஓடியது . பதறிய விவசாயிக்கு காட்சி கொடுத்த மாரியம்மன் நான் எல்லைகளை காக்கும் எல்லையம்மன் எனக்கு இங்கேயே கோவில் அமையட்டும் என்ற உத்தரவின் பேரில் அங்கு ஒரு பெரும் ஆலயம் எழுப்பப்பட்டது . சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படும் இந்த வரலாறு. நிகழ்ந்த இடம் தற்போதைய வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வெட்டுப்பட்ட வனம் என்ற பெயர் கொண்ட வெட்டுவானம் என்ற கிராமமாக அறியப்படுகிறது. எல்லையம்மன் எல்லை காக்கும் தெய்வமாக மாரியம்மன் அம்சமாக வழிபடப்படுகிறார்.
கோவில் அமைவிடம் –
தற்போதைய வேலூர் மாவட்டத்தில் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டான் சுங்க சாவடியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்குள் வெட்டுவாணம் கிராமமும் ஆலயமும் இருக்கிறது. நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் ஆலயத்தின் நுழைவாயில் வழியே 100 மீட்டர் பயணத்திற்குள் ஊரில் வரவேற்பாகவே ஆலயம் தான் அமைந்திருக்கிறது. ஆம்பூர் – குடியாத்தம் இரயில் நிலையங்கள், ஆம்பூர் – குடியாத்தம் – வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து எளிதாக கோவிலை அடையலாம்.
கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் எல்லையம்மன் . உயர்ந்த கொடி மரமும் பலிப்பிடம் என்று ஆகம விதியின் அடிப்படையில் அமைந்திட்ட பெரும் ஆலயம் . அதன் எதிரில் கட்டமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட குளம் பக்கவாட்டில் இருக்கும் புற்று வேப்பமரம் என்று ஒரு சக்தி பீடத்திற்கு உண்டான அத்தனை அம்சமும் பொருந்தி இருக்கும் சமவெளி கோவில் வரிசையில் வெட்டுவானம் எல்லையம்மன் பிரசித்தி பெற்றது .
கோவில் நடை தினசரி காலை 8 முதல் 12 வரை மாலை 5 முதல் 8 வரை நடைபெறும் ஆனால் விசேஷ தினங்களில் உற்சவம் திருவிழா காலங்களில் காலை முதல் இரவு வரை நடை திறப்பு உண்டு.
விசேஷ பூஜைகள் மற்றும் நேர்த்தி கடன்கள்:
அமாவாசை – பௌர்ணமி – செவ்வாய் வெள்ளி ஞாயிறு பூஜைகள், வருடப்பிறப்பு – நவராத்திரி – ஆடி – தை முதல் நாள் அயன பிறப்புகள் , ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளியில் தொடங்கும் ஆடி வெள்ளி உற்சவம் ஆவணி மாதம் வரையிலான தொடர்ந்து 9 வெள்ளிகள் சிறப்பு அலங்காரம் உற்சவம் தேரோட்டம் என்ற விழா களைக்கட்டும் .பத்தாம் வெள்ளியில் விடையாற்றி உற்சவம் கண்டு இனிதே நிறைவேறும். ஆனி மாத இறுதியில் தொடங்கும் திருவிழா கொண்டாட்டம் ஆடி மாதம் முழுவதிலும் எள் இறங்காத மக்கள் கூட்டம் நிறைந்து ஆவணி மாதம் வரையிலும் நீடிக்கும். உள்ளூர் மக்கள் முதல் வெளி மாவட்ட வெளி மாநில வெளிநாடுகளில் இருக்கும் மக்கள் வரை இந்த ஆடி மாத உற்சவத்தின் போது இந்த கோவிலுக்கு வந்து விசேஷ பூஜைகள் நேர்த்திக் கடன்கள் செய்வது சிறப்பு.
எல்லையம்மனுக்கு கூழ் வார்த்தல் மாவிளக்கு பூஜை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வதும் ஆடு கோழி உள்ளிட்டவற்றை பலி கொடுத்து செய்யும் பூஜைகளும் பிரதானம். பல்வேறு ஊர்கள் மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் ஆங்காங்கே கும்பலாக அடுப்பு வைத்து சமைத்து பூஜை செய்வதும் முன்பின் தெரியாதவர்களுக்கு கூட அழைத்து உணவு அளித்து விருந்தோம்பல் செய்வதும் வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் அன்றாட நிகழ்வு.
கல்வி வியாபாரம் வேலை திருமணம் குழந்தை பாக்கியம் தடை நீங்க வேண்டுகோள் வைப்பவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறிய பின் வந்து மனமகிழ்ச்சியோடு வேண்டுதலை நிறைவேற்றுவதை தினமும் பார்க்க முடியும். சிறப்பு பூஜைகளுடன் பசுவையும் கன்றையும் முன்னிறுத்தி கோ பூஜையோடு தினசரி பூஜை தொடங்கும்.. ஆண்டு உபயதாரர்கள் பூஜையில் அவர்கள் குடும்பத்தாரை முன்னிறுத்தி செய்யும் கோ பூஜையும் இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.
முடி இறக்குதல் காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களுக்கும் வேண்டிய ஏற்பாடுகள் ஆலயத்தில் உண்டு. முடி காணிக்கை தருவது மற்றும் கண் மலர் வாங்கி நேர்த்திக்கடன் செய்வது ஆலயத்தில் பிரதானம். அம்மனுக்கு விசேஷ ஆடை அலங்காரத்தோடு அலரி பூ மாலை எலுமிச்சம் பழம் மாலை வேம்பு மாலை சாற்றுவது சிறப்பு. வளையல் மாலை உள்ளிட்ட வேண்டுதல் நேர்த்திக் கடன்களும் அனுமதி உண்டு.
தந்தையின் ஆணையை ஏற்று தாயை கொன்றாலும் அதே தந்தையிடம் மன்றாடி தாய்க்கு மீண்டும் உயிர் கொடுத்ததால் தாய்க்கு தாயும் மாணவன் என்ற வகையில் பரசுராமருக்கு இங்கு விசேஷ பூஜை மரியாதை உண்டு. பெரும் வேண்டுதல்களோடு வருபவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு மீண்டும் வந்து பரசுராமர் சிலையை மண் சிலை வாங்கி கைகளில் ஏந்தி வலம் வந்து ஆலய மரத் தடியில் அமர்த்தி நேர்த்திக் கடனாக வழிபடும் சிறப்பு இந்த ஆலயத்தில் மட்டுமே உண்டு.
இந்து அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயத்தில் அறநிலையத்துறையின் தலையீடு காரணமாக இந்த சம்பிரதாயங்களில் சில குறுக்கீடுகள் இருந்தாலும் இன்றளவும் பெரும்பாலும் பரசுராம வழிபாட்டை முடிந்த வரையில் மக்கள் கடைபிடித்தே வருகிறார்கள்.தீராத நோய் அல்லது மாந்திரிக தொந்தரவுகள் மற்றும் உயிராபத்து உணர்ந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து இங்கேயே தங்கி இருப்பதும் அபாயம் நீங்கியதாக உணரும் போது அம்மன் அசரீரியாக கனவில் உறக்கத்தில் சமிக்ஞை கொடுத்த பிறகு நிம்மதியாக ஊர் திரும்பும் சக்தி வாய்ந்த தலம் இது.
சாதாரண நாட்களில் வேலூர் திருப்பத்தூர் மார்க்கத்தில் பயணிக்கும் பேருந்துகள் வெட்டுவானம் கிராமத்தில் நிற்காது யாரும் இருந்தால் இறங்கி விடுங்கள் என்று வலுக்கட்டாயமாக இறக்கி விடும் வழக்கம் கொண்டவர்கள். ஆனால் இந்த ஆடி ஆவணி மாதங்களில் வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலுக்கு வருபவர்கள் தான் பேருந்துகளுக்கு லாபம் கொடுக்கும் பங்குதாரர்கள் என்ற காரணம் கொண்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் சாதாரண வழித்தடங்கள் தொடங்கி வழிநில்லா பேருந்துகள் வரை அனைத்து பேருந்துகளிலும் வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் நின்று போகும் என்று பதாகையை ஒட்டியபடி பயணிப்பதில் இருந்தே வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலுக்கு கூடும் கூட்டத்தையும் போக்குவரத்து துறை கூட அதற்கேற்ப மாறுவதும் வெட்டுவாணம் எல்லையம்மன் மகத்துவம்.