துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் களம் இறக்கப்பட்டு இருப்பவர் ஜெகதீப் தன்கர். அதே வேளையில், காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் 510– க்கும் மேற்பட்ட வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் அதற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை பத்து மணிக்கு வாக்கு பதிவு துவங்கியது. இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடி தனது வாக்கினை முதல் ஆளாக பதிவு செய்தார். இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் வாக்களித்தனர். இன்று மாலை 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து, அதன் முடிவுகள் அன்றே வெளியிடப்படுகிறது. அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்படும் புதிய துணை குடியரசு தலைவர் வருகிற ஆகஸ்ட் 11 –ம் தேதி பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.