மாபெரும் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கட்சி, நாடு சுதந்திரம் பெற பாடுபட்ட கட்சி என காலம் காலமாக பெருமைகளை கொண்டாடும் இந்திய காங்கிரஸ் கட்சி செய்த ஜனநாயக படுகொலைகளுக்கு இணையாக,
கட்சியின் முன்னாள் தலைவர்களையும் அவர்கள் வளர்த்த ஜனநாயக மாண்புகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டது.
மாபெரும் தேசியத் தலைவர், சுதந்திரப் போராட்டவீரர், அரசியல் சாசன வழிகாட்டி, “தென்னிந்தியாவின் சிங்கம்” என்று போற்றப்பட்டவர் சேலம் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார். தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோக்கலே, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன் மோகன் மாளவியா, பாலகங்காதர திலகர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி போன்ற தேசியத் தலைவர்களுடன் சுதந்திரப் போராட்டத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பங்கு வகித்தவர் இவர். இன்று அவரின் தேசப் பங்களிப்பைப் பற்றிப் பேசவோ அல்லது எழுதவோ யாருமில்லை என்பதோட அவரை பற்றி ஒரு துணுக்கு செய்தி கூட அறியாத மூடர்களாக நாம் இருப்பது பெரும் வருத்தத்திற்குரியது.
சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார் ஜூன் 18, 1852 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகில் உள்ள பொன்விளைந்த களத்தூர் என்ற கிராமத்தில் சடகோபாசாரியாருக்கும், கனகவள்ளி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். அவரின் தந்தையார் சமஸ்கிருதம் மற்றும் தர்மசாஸ்திரங்கள் அறிந்த அறிஞர்.
விஜயராகவாச்சாரியார் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை மதுராந்தகத்தில் 1868ம் ஆண்டு முடித்துவிட்டு பச்சையப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை 1870ல் முடித்தார்.
1871ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பை 1875ம் ஆண்டு முடித்துவிட்டு அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு மங்களூர் அரசுக் கல்லூரிக்குப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவரால் நேர்மையாக பணியைத் தொடர இயலவில்லை. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அடக்குமுறையைப் பின்பற்றியதை எதிர்த்து பிறகு தனது பணியை ராஜினாமா செய்தார். (அவர் ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கியதால் கல்வித்துறை இயக்குநர் அவர் பணியில் இருந்து விலகியதை விரும்பவில்லை.) பிறகு அவர் சில ஆண்டுகள் சேலம் நகராட்சி கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். இதனுடன், தனியாக அப்போது சட்டமும் பயின்று வந்தார். பின்னர் பணியை ராஜினாமா செய்துவிட்டு 1881ம் ஆண்டில் சேலம் நகரத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் துவங்கினர். குறுகிய காலத்திலேயே அவர் மிகச் சிறந்த வழக்கறிஞராகப் புகழ்பெற்றார்.
1882ம் ஆண்டு விஜயராகவாச்சாரியார் சேலம் மாநகர சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதே ஆண்டு, சேலம் செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் நடந்த இனக்கலவரத்தில் விஜயராகவாச்சாரியார் குற்றவாளியாகக் கருதப்பட்டு, 10 ஆண்டுகள் அந்தமான் தீவுகளுக்குக் கடத்தப்படவேண்டும் என்ற சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதனால் அவர் நகரமன்றப் பதவியையும் இழந்தார். சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விடுதலையானார். மேலும் மாகாண நிர்வாகத்திடமிருந்து நஷ்ட ஈடும் பெற்றார். நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடியவர் எர்டுலே ஜான் நார்டன் என்ற ஆங்கிலேய வழக்கறிஞர்.
1882 ஆம் ஆண்டு நடந்த சேலம் கலவரம் விஜயராகவாச்சாரியாரை ஒரே இரவில் பிரபலமாக்கியது. இந்த கலவர வழக்கு இந்திய தேசிய ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு “சிவில் உரிமைகளின் சாம்பியன்” என பாராட்டப்பட்டார். இதனால் அவர் “தென்னிந்தியாவின் சிங்கம்” மற்றும் “சேலத்தின் ஹீரோ” என கொண்டாடப்பட்டார்.
ஏ. ஓ. ஹியுமின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததால் 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது முதல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக விஜயராகவாச்சாரியார் பங்கு கொண்டார்.
1895ம் ஆண்டு முதல் 1901ம் ஆண்டு வரை மதராஸ் மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் மற்றும் 1913ம் ஆண்டு முதல் 1916ம் ஆண்டு வரை மத்திய கவுன்சில் உறுப்பினராகவும் பதவி வகித்து மக்களுக்காகப் போராடியவர். இந்தக் காலகட்டத்தில் ‘சில்வர் டங்’ என்று போற்றப்பட்ட வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி, சி.சங்கரன் நாயர், வி.பஷ்சியம் ஐயங்கார் போன்றோருடன் தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டார்.
1906ம் ஆண்டு, கல்கத்தாவில் காங்கிரஸின் மகாசபை கூட்டம் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஜயராகவாச்சாரியார் “நிரந்தர நிலச் சீர்திருத்தம் மற்றும் நிலக்குடி உரிமை அமைப்பு முறைகள்” பற்றிய தீர்மானங்கள் கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தில் அவர் கூறியதாவது: ‘ஐரோப்பிய நிலப்பிரபுத்துவம் இந்தியாவில் திணிக்கப்படக்கூடாது, அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், இந்திய மக்களுக்கு அடிப்படையில் சொத்துரிமை உண்டு. அதை அவர்கள் மறுக்கமுடியாது.’ இந்தச் சீர்திருத்தங்கள் பின்னாட்களில் நிலச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் பல்வேறு சட்ட விதிகளை உருவாக்க முன் உதாரணமாக இருந்தது.
1919ம் ஆண்டு அமிர்தசரஸில் காங்கிரஸ் மகாசபை கூட்டம் மோதிலால் நேரு தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில், விஜயராகவாச்சாரியார் “மக்களின் அடிப்படை உரிமைகள்” என்பது குறித்துத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மகாசபை 1920ம் ஆண்டு நாக்பூரில் விஜயராகவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான பெருமை இவரையே சேரும். இந்த கூட்டத்தில்தான் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் ரெளலட் சட்டத்திற்கு எதிராக போராடிய காலகட்டம் அது.
அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இந்த மாநாட்டில்தான் அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபையினால் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டார். ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதுவரை தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகத்தான் திகழ்ந்தார் அவர்.
முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர் விஜயராகவாச்சாரி. மத்திய சட்டமன்றத்தில் லார்டு பிர்கென்ஹெட் (Lord Birkenhead, the Secretary of State for India) என்ற ஆங்கிலேய அதிகாரி, ‘இந்தியர்களால் ஒர் அரசியல் சாசனம் தயாரிக்க முடியுமா?’ என்று ஒரு சவால் விட்டார். அந்த சவாலை ஏற்று, 1927ம் ஆண்டு, இந்தியாவிற்கு முதன்முதலாக, தனி ஒரு மனிதனாக “ஸ்வராஜ் அரசியலமைப்புச் சட்டம்” என்ற ஒன்றைத் தயார் செய்து கொடுத்தவர் விஜயராகவாச்சாரியார். நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு விஜயராகவாச்சாரியார் எழுதிய அரசியல் சட்டம் ஓர் அடிப்படையாகவே அமைந்தது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் கொள்கை ரீதியாக ஆங்கிலேயே அரசை எதிர்த்து போராடும் அணுகுமுறையில் குழப்பம் உருவாகி தலைவர்களிடையே பனிப்போர் இருந்தது. அதில் மிதவாத காங்கிரஸ் அணிக்குத் தலைவர் கோபால கிருஷ்ண கோகலே. தீவிரவாத அணிக்குத் தலைவராகத் திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அப்போது விஜயராகவாச்சாரியார் திலகரின் அணியிலே இருந்தார்.
பெண்களின் முன்னேற்றம், பருவமடைந்த பின்னர் அவர்களுக்கு திருமணம், பெண்ணுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு கிடைக்க வேண்டும் மற்றும் தீண்டாமை
ஒழிப்பு என போராடினார்.
மெட்ராஸ் இதழில் பல்வேறு பொதுக்கொள்கைகள் பற்றி அவர் எழுதியவை ஏராளம். அறுபது ஆண்டுகள் போராடிய இந்தத் தேசியத் தலைவர், தேசிய வரலாற்றில் பல்வேறு பெருமைகளைப் பெற்றவர், இந்து மகா சபையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் (1931).
கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நடத்திய சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக விஜயராகவாச்சாரியார் இருந்தார் என்பதை வெகு சிலரே அறிவர்! ஆசிரியர், சீர்திருத்தவாதி, அரசியல்வாதி, வழக்கறிஞர், சிறந்த அரசியலமைப்பு நிபுணர் எனப் பன்முகம் உடையவர் விஜயராகவாச்சாரியார். அவரின் மனைவியின் பெயர் லட்சுமி. அவர்களின் ஒரே மகள் சீதா. நாடு சுதந்திரம் அடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 19, 1944ம் ஆண்டு, விஜயராகவாச்சாரியார் தனது 92வது வயதில் காலமானார்.
இன்றைய அராஜக அரசியலில் ஆண்டுதோறும் அரசியல் தலைவர்களின் சிலைக்கு, பிறந்த நாளின் போதும் நினைவு நாளன்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ஆனால் நாட்டுக்காக உழைத்த தேசியத் தலைவரான விஜயராகவாச்சாரியாரை, தமிழகத்தின் பெருமை மிகுந்த மனிதரான இவரை, அரசும் அவர் உழைத்த கட்சியும் கைவிட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலில் விஜயராகவாச்சாரியார் போன்ற பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் மறைக்கப்பட்டு மக்கள் மனதில் இருந்து அடியோடு மறக்கப்பட்டுவிட்டனர்.
சிறந்த தேசியவாதியாக விளங்கிய விஜயராகவாச்சாரியார் தனக்கென்று எதையுமே வைத்துக்கொள்ளவில்லை. ஏழை எளிய மக்களுக்கும் நாட்டுக்கும் தனது கடைசிகாலம் வரை உழைத்தார். சேலத்தில் அவர் பெயரில் ஒரு நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்தில் அவரின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவாக சேலம் மாநகரத்தில் இரண்டு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவைகள் ஏணிப்படி இல்லா சிலைகள்! அன்று முதல் இன்று வரை இந்தச் சிலையை யாரும் கண்டு கொள்வது இல்லை.
இப்படிப்பட்ட தியாகிகளின் தியாக வரலாறுகள் தெரியாது போனால் எப்படி அடுத்த தலைமுறைக்கு நாம் தேசப்பற்றை ஊட்ட முடியும்?
— திருமதி.சுபா பாலாஜி