வெள்ளத்தில் சிக்கியவர்களை கோவிலில் அடைக்கலம் தந்து உணவு வழங்கிய கிராம மக்கள் !

வெள்ளத்தில் சிக்கியவர்களை கோவிலில் அடைக்கலம் தந்து உணவு வழங்கிய கிராம மக்கள் !

Share it if you like it

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு, ரயிலில் இருந்த 1,000 பயணிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே 2 நாட்களுக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, அங்கிருந்து இரவு சிறப்பு ரயில்மூலமாக நேற்று மதியம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ரயிலில் இரண்டு நாள் தவிப்பு குறித்து திசையன் விளையைச் சேர்ந்த பயணி ஏ.சித்திரவேல் கூறும் போது, “கடுமையான மழையில் ரயிலுக்குள் சிக்கிக் கொண்டோம். உணவு ஏதும் கிடைக்காத நிலையில், ரயில் நிலையம் அருகே இருந்த பெட்டிக் கடையில் பிஸ்கட், பழங்கள் மற்றும் தின் பண்டங்களை வாங்கி வந்து, ஒருவருக்கொருவர் பகிர்ந்து சாப்பிட்டோம்.

ரயில் நிலையம் அருகே உள்ள மேலூர் புதுக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள், எங்களையெல்லாம் அங்கு அழைத்துச் சென்று பத்திரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் உணவு தயாரித்து மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கினர். நேற்று முன்தினம் காலையும் அவர்கள் தான் உணவு வழங்கினர். மழை வெள்ளத்தால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களுக்கும் உதவிய மனித நேயத்தை என்றும் மறக்க முடியாது. கிராம மக்கள் வழங்கிய உணவு தான் எங்களை உடல் பலவீனமின்றி வைத்திருந்தது. அவர்கள் உதவவில்லை என்றால் நாங்கள் சோர்ந்திருப்போம்” என்றார்.


Share it if you like it