ஆசிரமம் பெயர் அன்பு… நடந்ததெல்லாம் அத்துமீறல், பாலியல்: ஜூபின், மரியா, பிஜூ உட்பட 9 பேர் கைது!

ஆசிரமம் பெயர் அன்பு… நடந்ததெல்லாம் அத்துமீறல், பாலியல்: ஜூபின், மரியா, பிஜூ உட்பட 9 பேர் கைது!

Share it if you like it

விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் அத்துமீறல், அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், காப்பக நிர்வாகி ஜூபின், அவரது மனைவி மரியா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அருகேயுள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி என்கிற பெயரில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இங்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த சூழலில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், அதேபோல அங்கு தங்கி இருக்கும் பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், பல்வேறு முறைகேடுகளும் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், இக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்களை காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கெடார் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர், அவர்கள் அனைவரும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலுள்ள ஆசிரம மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஆகியோர் போலீஸில் தனித்தனியே புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத், சதீஷ், பூபாலன், தாஸ் ஆகிய 9 பேர் மீது 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து, நிர்வாகி ஜூபின் பேபி தவிர மற்ற 8 பேரும் கைது செய்யப்பட்டனர். ஜூபின் பேபி தனக்கு உடல் நலம் சரியில்லாததாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்து விட்டார்.

இந்த நிலையில், போலீஸாரின் அழைப்பை ஏற்று விழுப்புரம் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அகிலா, ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி சிகிச்சை பெற்றுவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜூபின் பேபியிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர், ஜூபின் பேபியை வரும் மார்ச் 2-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஜூபின் பேபிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே, ஜூபின் பேபியின் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவர்கள் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில்தான், அன்பு ஜோதி ஆசிரமம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது, ஜூபின் பேபி ஏற்கெனவே, கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அடுத்த அட்டுக்கல் மலையடிவாரத்தில் ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்தி வந்திருக்கிறார். இங்கு கடந்தாண்டு ஜூலை 22ம் தேதி முதல், 2 நாட்களாக சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களைப் பிடித்து வாகனங்களில் ஏற்றி வந்து, இந்த காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். இக்காப்பகத்தில் இருந்து 23-ம் தேதி இரவு முழுவதும் கூச்சலும், அழுகை சத்தமுமாக இருந்திருக்கிறது. இத்தகவல் அருகிலுள்ள பழங்குடி மக்கள் மூலம் பரவவே, ஆசிரமத்தின் முன்பு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் திரண்டனர். அப்போது, காப்பகத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தவே, ஜூபின் பேபி கைது செய்யப்பட்டதோடு, ஆசிரமத்திற்கும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, விழுப்புரம் குண்டலப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து பலரும் பெங்களூருவிலுள்ள மற்றொரு ஆசிரமத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலரை காணவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆகவே, உடல் உறுப்பு திருட்டுக்காக ஆசிரமத்தில் இருந்தவர்கள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டார்களா என்கிற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த பெங்களூரு ஆசிரமத்துக்குச் செல்ல போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.


Share it if you like it