நிலத்தைக் கேட்டு மிரட்டல்… மூதாட்டி மீது கொலை வெறித் தாக்குதல்: தி.மு.க. ஒ.செயலாளர் அராஜகம்!

நிலத்தைக் கேட்டு மிரட்டல்… மூதாட்டி மீது கொலை வெறித் தாக்குதல்: தி.மு.க. ஒ.செயலாளர் அராஜகம்!

Share it if you like it

நிலத்தை எழுதி வைக்கும்படி வலியுறுத்தி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஒருவர் மூதாட்டி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ப.வில்லியனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கள்ளிகுளம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி அஞ்சலை. 78 வயதாகும் அஞ்சலைக்கு சொந்தமாக அக்கிராமத்தில் 1 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்திற்கு அருகே கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.ஜி.பிரபாகரனின் நிலம் இருக்கிறது. ஆகவே, அஞ்சலையின் நிலத்தை அபகரிக்க முடிவு செய்த பிரபாகரன், அந்த நிலத்தை தனக்கு எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். இதற்கு அஞ்சலை மறுப்புத் தெரிவித்து விட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் ராமு ஆகியோர், அஞ்சலை மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில், பலத்த காயமடைந்த அஞ்சலை, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால், பிரபாகரன் தனது செல்வாக்கை பயன்படுத்தி, ஒரே நாளில் அஞ்சலையை டிஸ்சார்ஜ் செய்ய வைத்து விட்டார். வீட்டுக்குச் சென்ற அஞ்சலைக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

அப்போது, மருத்துவமனை வளாகத்திலேயே அஞ்சலை மயக்கம் போட்டு விழுந்து விட்டார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அஞ்சலையை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அஞ்சலையின் மகன் வேல்முருகன் போலீஸில் புகார் அளித்தும், பிரபாகரன் தி.மு.க. நிர்வாகி என்பதால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகவல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் சங்கருக்குத் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலையை நேரில் பார்வையிட்ட அவர், நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். பின்னர், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த சங்கர், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.


Share it if you like it