“எவ இவ”… பெண்களிடம் பொன்முடி ரிப்பீட்டு!

“எவ இவ”… பெண்களிடம் பொன்முடி ரிப்பீட்டு!

Share it if you like it

கிராமசபை கூட்டத்தில் குடிநீர் பிரச்னை குறித்து கூறிய பெண்ணை “எவ இவ” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

உழைப்பாளர் தினத்தையொட்டி, நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கெடார் ஊராட்சியிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தனியார் கல்லூரியில் படிக்கும் தனது மகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவது குறித்து ஒரு பெண் கேள்வி எழுப்பினார். அதற்கு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை கிடையாது. அரசுக் கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று கூறினார். உடனே, அருகில் இருந்தவர்கள், இல்லைங்க, தனியார் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கும் கிடைக்கும் என்று எடுத்துக் கூறினார்கள். இதன் பிறகு, சுதாரித்துக் கொண்ட பொன்முடி, எல்லா பெண்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே, தனியார் கல்லூரியில் படிக்கும் உங்கள் மகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அமைச்சரிடம் குறைகளை தெரிவித்தனர். அப்போது, செல்லங்குப்பம் பகுதியில் கடந்த 13 வருடங்களாக முறையான சாலை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி, மக்களை ஒருமையில் பேசியும், முகம் சுளிக்கும் வகையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசினார். மேலும், குடிநீர் குறித்து பேசிய ஒரு பெண்ணிடம் ‘எவ அவ’ என்று எகத்தாளமாகக் கேட்டார் அமைச்சர் பொன்முடி. இப்படி பொன்முடி பேசியது, பெண்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, ஓசி பஸ் முதல் போய்யா யோவ் என கூறியது வரை அமைச்சர் பொன்முடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது பெண்களை அவதூறாகப் பேசிய மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இது தொடர்பாக வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் பெண்களை மட்டுமல்லாது பொதுமக்களை தரக்குறைவாக பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it