மோடிக்கிட்ட போயி கேளு… பொன்முடி மீண்டும் ‘ராக்ஸ்’!

மோடிக்கிட்ட போயி கேளு… பொன்முடி மீண்டும் ‘ராக்ஸ்’!

Share it if you like it

தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணிடம், மோடிக்கிட்ட போயி கேளு என்று ஒருமையில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கமடம், திருவெண்ணெய் நல்லூர், முகையூர், அரகண்டநல்லூர் பேரூராட்சி போன்ற பகுதிகளில் நடந்தது. முகாம் நடைபெறும் இடங்களுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார். அந்த வகையில், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த பொதுமக்களை பார்த்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை அனைவரும் கையில் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

பிறகு, எவ்வளவு பணம் வருகிறது. வீடு, கார் போன்றவை இருக்கிறதா என்று பொதுமக்களிடம் கேள்விகளை கேட்டார். மேலும், இந்த 1,000 ரூபாய் உரிமைத் தொகையை யார் தருகிறார்கள் என்று தெரியுமா எனக் கேட்டார். அதற்கு, முதல்வர் ஸ்டாலின் என்று ஒரு சிலரே கூறினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி, தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கிறது. இதை குறைக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, மோடியிடம் போய் கேளு என்று அப்பெண்ணைப் பார்த்து ஒருமையில் கூறினார்.

மேலும், விலைவாசி ஏறும், இறங்கும். நாங்கள்தான் 1,000 ரூபாய் கொடுக்கிறோமே… அது மகிழ்ச்சியா, இல்லையா? என்று கேள்வி கேட்ட பெண்னை பார்த்து கேட்டார். அதோடு, நாங்கள்தான் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் தக்காளி கொடுக்க நடவடிக்கை எடுத்தோமே என்று கூறியவர், பின்னர் அந்தப் பெண் தனக்கு ஓட்டு போடவில்லை என்றும் யாராவது சொல்லிக் கொடுத்து பேசுவார் எனவும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


Share it if you like it