அமைச்சர் பொன்முடியை கண்டித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி… விழுப்புரம் அருகே பரபரப்பு!

அமைச்சர் பொன்முடியை கண்டித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி… விழுப்புரம் அருகே பரபரப்பு!

Share it if you like it

அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தியதோடு, ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் பொன்முடி ஒழிக என்று கோஷம் எழுப்பி, 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்திருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே இக்கோயிலுக்குள் பட்டியல் சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. இந்த சூழலில், கடந்த மாதம் நடந்த கோயில் திருவிழாவின்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கோயிலுக்குள் சென்றிருக்கிறார்கள். இதையறிந்த ஊர் மக்கள், அவர்களை பிடித்து தாக்கி இருக்கிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனால், ஒரு மாதமாகியும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், தங்களை கோயிலுக்குள் அனுமதிக்க கலெக்டர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையறிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்த விவகாரம் மேல்பாதி கிராம மக்களுக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கோயில் முன்பு திரண்டு அமைச்சர் பொன்முடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜாதிக் கலவரத்தை தூண்டும் அமைச்சர் பொன்முடி ஒழிக என்று கோஷம் எழுப்பினர். மேலும், பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி, தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை வீசி எறிந்தனர்.

தகவலறிந்து வந்த அதிகாரிகள், ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென 3 பேர் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஊர் மக்களை அமைதிப்படுத்தினர். எனினும், பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் ஊர் மக்கள் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இதுவும் ஒரு சான்று…


Share it if you like it