50வது சதத்தை விளாசி சச்சினை நோக்கி தலை வணங்கிய விராட் கோலி !

50வது சதத்தை விளாசி சச்சினை நோக்கி தலை வணங்கிய விராட் கோலி !

Share it if you like it

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 29 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். தனது 13-வது அரை சதத்தை கடந்த ஷுப்மன் கில் 65 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசிய நிலையில் தசைபிடிப்பு காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். நிதானமாக விளையாடிய விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 50-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். சீராக ரன்கள் சேர்த்த விராட் கோலி 113 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் விளாசிய நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 70 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசிய நிலையில் டிரெண்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் கே.எல்.ராகுல் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் விளாசினார்.

50 சதங்கள் விளாசி டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்திருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. இந்த மைல்கல் சாதனையை விராட் கோலி தனது 279-வது இன்னிங்ஸில் நிகழ்த்தி உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி. இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் அதுவும் அவரது சொந்த மைதானத்திலேயே விராட் கோலி நிகழ்த்தியது, அத்தருணத்தை மேலும் அழகாக்கியது. இதே மைதானத்தில்தான் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கடைசியாக பேட்டிங் செய்தார். அதே நாளில் தற்போது விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

‘எனது சாதனையை கோலி முறியடித்ததில் மகிழ்ச்சி’ – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் அவர், உலக கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை முறியடித்தார். சதம் விளாசிய விராட் கோலி மைதானத்தில் இருந்தபடி சச்சினை நோக்கி தலை வணங்கினார். கேலரியில் இருந்த சச்சின் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியானது 397 ரன்கள் எடுத்து நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கை வைக்க நியூசிலாந்து 327 ரன்களில் சுருண்டது. இதனால் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது.


Share it if you like it