விருதுநகர் அருகே மணல் கொள்ளைக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வும், அவரது உதவியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் அருகே பெரியபேராளியைச் சேர்ந்தவர் ரவி. ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவரான இவர், பெரியபேராளி ஊராட்சியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கருப்பையா ஆகியோரை அணுகி இருக்கிறார். அப்போது, வி.ஏ.ஓ. மதன்குமார் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார். அதற்கு, இதற்கு முன்பு மணல் அள்ளுவதற்கு 20,000 ரூபாய் கேட்டீர்கள். 10,000 ரூபாய் கொடுத்தேன். ஆனால், மணல் அள்ளவில்லை. ஆகவே, தற்போது குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறார்.
அதற்கு வி.ஏ.ஓ. மதன்குமாரோ, நீங்கள் மணல் அள்ளுங்க, அள்ளாம போங்க. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்குச் சேர வேண்டியதை கொடுத்திடுங்க என்ற கறாராக கேட்கிறார். ஒருவழியாக, இருவரும் பேரம் பேசி நிறைவாக 1,000 ரூபாய்க்கு ஒப்புக்கொள்கிறார்கள். பின்னர், ரவி பணத்தை வி.ஏ.ஓ. மதன்குமாரிடம் கொடுக்க, அவரோ உதவியாளர் கருப்பையாவிடம் கொடுக்கச் சொல்கிறார். ரவி தயங்கவே, குடுய்யா என் மேல நம்பிக்கை இல்லையா, அதான் வி.ஏ.ஓ.வே கொடுக்கச் சொல்றாருல்ல என்று சொல்லவே, ரவியும் பணத்தை கொடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா பெரியபேராளி கிராம நிர்வாக அலுவலர் மதன்குமார் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கருப்பையா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். வி.ஏ.ஓ.வும், அவரது உதவியாளரும் லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.