தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், ‘மக்களைத் தேடி மருத்துவம்’. இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கிவைத்தார். தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதுதான் இத்திட்டம். இன்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக பிரத்யேக தன்னார்வலர்களை நியமித்து, அவர்களுக்கு ரூ.4500 ஊதியம் வழங்கி வருகிறது. அவர்களும் தொடர்ந்து களப்பணி ஆற்றுகிறார்கள்.
இதுதொடர்பாக மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறோம். நாள்தோறும் 10 வீடுகளுக்கு சென்று பொதுமக்கள் 20 பேரை சந்தித்து,அவர்களின் நோய் விவரங்கள்தெரிவிக்கப்பட்டு தேவையானமருந்து, மாத்திரைகளை வழங்கிசிகிச்சைஅளிக்கும் பணிகளைஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. இதில் கிராமப்புற பகுதியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு முறையாக சம்பளம்வருவதில்லை. ஒவ்வொரு முறையும் தாமதமாகத்தான் வருகிறது.
தீபாவளி என்பதால் நடப்பு மாத சம்பளம் தற்போது வந்துள்ளது. கடந்த காலங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வந்த நிகழ்வுகளும் உண்டு. மாதந்தோறும் 400 பேருக்கு மேல் பரிசோதனை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக சர்வரில்எங்களுக்கு உரிய புள்ளி விவரங்களை பதிவிடும் போதுதான், உரிய சம்பளம் கிடைக்கும். நுரையீரல், வாய், கர்ப்பப்பை மற்றும் புற்றுநோய் தொடர்பான அனைத்து பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள் என பல்வேறு தரப்பினரையும் கணக்கில் எடுத்து சிகிச்சை அளிக்க ஒருங்கிணைத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுதான் எங்கள் பணி.
பேருந்து வசதி இல்லாத பல கிராமங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால், இருசக்கர வாகனத்துக்கான எரிபொருள் உள்ளிட்டவைக்கே ஊதியம் சரியாகிவிடும். நாள்தோறும் 4 முதல் 6 மணி நேரம் பணி செய்கிறோம். எனவே, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயத்தை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.அதேபோல் பலருக்கும் கோட் உள்ளிட்டவை வராததால், பலரும் உரிய சீருடையின்றி உள்ளனர்” இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில், அரசின் சாதனை திட்டமாக ‘மக்களே தேடி மருத்துவம்’ பார்க்கப்படுகிறது. தன்னார்வலர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டுமென்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.