மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது நடந்த குண்டு வீச்சில் ஒருவர் பலியானார். இதனால், அங்கு பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து, கடந்த 2 வாரங்களாக நடந்த வன்முறைகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் காயமடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்டங்கா பகுதியில் நடந்து வன்முறையின்போது கபாஷ்டங்கா கிராமத்திலுள்ள மாந்தோப்பில் குண்டு வீசப்பட்டது. இதில், பிரபல தாதா அலிம் ஷேக் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இவர்களில் தாதா அலிம் ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ராணி நகர் பகுதியில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குண்டு வீசப்பட்டதில் 3 பேர் லேசான காயமடைந்திருக்கிறார்கள்.
இத்தாக்குதலுக்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி இருக்கின்றன. தமிழக பா.ஜ.க. தலைவர் நாராயணன் திருப்பதியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.