மேற்குவங்க தேர்தல் வன்முறை; துப்புக் கொடுத்தால் ரூ.50,000 பரிசு: சி.பி.ஐ. அறிவிப்பு!

மேற்குவங்க தேர்தல் வன்முறை; துப்புக் கொடுத்தால் ரூ.50,000 பரிசு: சி.பி.ஐ. அறிவிப்பு!

Share it if you like it

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரை பற்றி துப்புக் கொடுத்தால், 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ. அறிவித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் வன்முறை வெறியாட்டம் தாண்டவமாடியது. மம்தா கட்சியைச் சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆக்ரோஷமாகத் தாக்கினார்கள். இத்தாக்குதலில் பிர்பூம் மாவட்டம் நல்ஹாட்டி, கூச்பெகர் மாவட்டம் சீதல்குச்சி ஆகிய இடங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரு கொலைகளிலும் தொடர்புடைய ஜாகிதி ஹசன் என்கிற சோட்டான், பாருக் அலி என்கிற பாதல் மற்றும் ஷியாமல் பர்மான், நபகுமார் பர்மான் ஆகிய 4 பேர் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர். ஆனால், மேற்படி 4 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் சி.பி.ஐ. வசம் சிக்காத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதோடு. அரெஸ்ட் வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், மேற்படி 4 பேர் பற்றி துப்புக் கொடுத்தால் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அகிலேஷ் சிங் அறிவித்திருக்கிறார். மேலும், போன் மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ துப்புக் கொடுக்கலாம் என்றும், துப்புக் கொடுப்பவரை பற்றிய ரகசியங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், ஆகவே தைரியமாக துப்புக் கொடுக்கலாம் என்றும் சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததும், இக்கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பது கூடுதல் தகவல்.


Share it if you like it