1989 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில சட்டசபையில் ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ என்ற திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசுப்பணி பெறுவதற்கான தகுதியற்றவர்கள் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ராம்ஜி லால், ராஜஸ்தான் போலீசில் கான்ஸ்டபிள் பதவிக்கு 2018 மே மாதம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் 2002 ஆம் ஆண்டில் அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சட்டத்தை எதிர்த்து ராம்ஜி லால் என்பவர் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது வழக்கை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராம்ஜி லால் மேல்முறையீடு செய்தார். அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில், ”ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ தொடர்பான சட்டம் செல்லும். இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.