தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்தது . இதில் உள்ளாட்சிகளில் பொதுப்பிரிவு பட்டியல் சமூக மக்கள் பெண்களுக்கு என்று சுழற்சி முறையில் ஒதுக்கீடுகள் வருவது வழக்கம் . அந்த வகையில் பட்டியல் சமூகம் சார்ந்த வேட்பாளர்களுக்கு மட்டும் என்று சுழற்சி முறை வந்தபோது அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் இரண்டு ஆண்டுகளாக பதவிப்பிரமாணம் ஏற்க முடியாத நிலையில் பெண் ஒருவர் பரிதவிக்கிறார்.
தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி மலை கிராமம் பஞ்சாயத்து இருக்கிறது . இதில் காமனூர் தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி. கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாய்க்கனேரி மலை கிராமம் பஞ்சாயத்து பட்டியல் சமூகப் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டது. இதனால் பாண்டியனின் மனைவி இந்துமதி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் . ஆனால் அந்தப் பகுதியில் மாற்று சமூகத்தினர் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் இதை பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கியதற்கும் இந்துமதி போட்டியிடுவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் போட்டியின்றி இந்துமதி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு இன்று வரை பதவி பிரமாணம் செய்விக்கப்படவில்லை.
இந்துமதியின் வெற்றியை எதிர்த்து நாய்க்கனேரி பஞ்சாயத்தின் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்ட விதியின் அடிப்படையில் அவர் போட்டியிட்டு இருக்கிறார். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அதனால் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டு ஊராட்சி தலைவராக பணியை தொடரலாம். என்று வழக்கை முடித்து வைத்திருக்கிறது. இதை எதிர்த்து மீண்டும் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த வழக்கு விசாரணையில் இருந்தாலும் இந்துமதி பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதிலோ அல்லது அவர் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததற்கோ இடைக்கால தடை எதுவும் நீதிமன்றத்தில் விதிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று வரை அவருக்கு பதவிப்பிரமாணம் செய்விக்கப்படவில்லை.
மேலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணமாக இந்துமதி பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தை அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி சார்ந்தவர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதன் காரணமாக வாழ்வாதாரம் வேண்டி காமனூர் தட்டு பகுதியிலிருந்து வெளியேறி ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் பிழைக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போன இந்துமதி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் பயந்து போன அவரது கணவர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் காணாமல் போன தனது மனைவி பற்றியும் அதன் அடிப்படையில் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் மீது சந்தேகம் இருப்பது பற்றியும் புகார் அளித்திருக்கிறார். ஆனால் சில மணி நேரங்களில் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்துமதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் காரணமாக தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அதன் காரணமாகவே வீட்டை விட்டு வெளியேற நினைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளாக பதவிப்பிரமாணம் செய்யாமல் இழுத்தடிக்கும் விவகாரம் சம்பந்தமாக தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்தும் அந்த புகார் ஏற்றுக்கொள்ளப்படாமல் வழக்கும் பதிவு செய்யப்படாமல் காவல்துறை அலட்சியம் காட்டியதாக இந்துமதியின் கணவர் குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து சமூக நீதி பாதுகாப்பு குழு திராவிடர் கழகம் விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் ஒன்று திரண்டு ஆம்பூர் நகராட்சி அலுவலகம் மாதனூர் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம் வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அதில் பட்டியல் சமூகம் சார்ந்த பெண் என்ற காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கும் அவர் தலைவராக பதவி பிரமாணம் செய்வதற்கும் இயலாத நிலை. இதன் காரணமாக அவர்கள் அனுபவித்த இன்னல்களுக்கும் நிவாரணம் வேண்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக அவருக்கு பதவி பிரமாணம் செய்விக்கவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்துமதிக்கு பதவிப்பிரமாணம் செய்விக்கவும் அவரது பதவி பிரமாணத்தை இதுவரையில் தாமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மாநில அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி இருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகளாகியும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள முடியாத நிலையில் உரிய நடவடிக்கை வேண்டும் என்று இன்று இத்தனை கட்சிகள் அமைப்புகள் களம் இறங்குகிறது. ஆனால் இந்த இரண்டு ஆண்டு காலமாக அந்த குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போது அவர்கள் ஊரைவிட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசிக்கும் நிலை வந்த போதும் அவர்களுக்கு ஏன் எந்த கட்சியின் அமைப்பின் உதவி கிடைக்கவில்லை.? இரண்டு ஆண்டுகளாக பதவி பிரமாணம் எடுக்க முடியாத நிலையில் இந்துமதி இருக்கிறார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு அதுமேல் முறையீடு என்று போய்க்கொண்டிருக்கிறார்கள் . எதிர் தரப்பில் இவ்வளவு நடந்த விபரம் இன்று இந்துமதிக்கு நியாயம் வேண்டி களமிறங்கும் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் இந்த இரண்டு ஆண்டுகளாக தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இன்று திடீரென அத்தனை அமைப்புகளும் ஒன்று திரண்டு வந்து அவருக்கு நியாயம் கேட்கிறார்கள். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.
காரணம் ஒன்றுதான் இங்கு சமூக நீதி சம நீதி என்பதெல்லாம் அந்தந்த கட்சிகள் அமைப்புகளின் சுயநலம் அரசியல் ஆதாயம் ஆட்சி அதிகாரம் பொருத்து அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் . கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட கட்சிகள் அமைப்புகள் எல்லாம் ஆளும் திமுகவின் ஊது குழலாக அவர்களது கூட்டணி கட்சிகளாக கூட்டணி தர்மம் காத்து தோழமை சுட்டுதலில் மூழ்கி இருந்தார்கள். அதனால் பட்டியல் சமூகம் சார்ந்த ஒரு பெண் தலைவராக கூட பதவிப்பிரமாணம் எடுக்க முடியாத அவலம் இருந்தது. அவர்களின் கண்களுக்கும் தெரியவில்லை. இந்த பாதிப்பு அவர்களின் மனதையும் உருக்கவில்லை. செய்திகள் எதுவும் அவர்களின் காதுகளுக்கும் சென்றடையவில்லை. ஆனால் இன்று தமிழகத்தில் அரசியல் களம் மாத தொடங்கி இருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகள் கூட்டணி மாற தயாராகி வருகிறது. அதனால் இன்று இந்த பெண்ணிற்கு நீதி வேண்டும் சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆளும் அரசுக்கு எதிராக களம் காண்கிறார்கள்.
இந்துமதிக்கு பதவி பிரமாணம் செய்விக்காமல் இத்தனை காலம் தாமதித்தது உள்ளாட்சித் துறை நிர்வாகம் இந்த உள்ளாட்சித் துறை நிர்வாகம் சார்ந்த அமைச்சர் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த இரண்டு ஆண்டுகளாக இது சம்பந்தமான புகார் மனுக்கள் எதுவும் போகாமலாக இருந்திருக்கும் ? புகார் மனுக்கள் எதையும் வெற்றி பெற்ற இந்துமதியும் அவரது கணவரும் முன்னெடுக்கவில்லை என்றால் அதன் பின்னணி என்ன? என்பது விசாரிக்கப்பட வேண்டும். ஒருவேளை அவர்கள் புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரையில் எந்த ஒரு அதிகாரியும் விசாரணை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உண்மையான நிவாரணமாக இருக்க முடியும்.
இந்துமதிக்கு பதவிப்பிரமாணம் செய்விக்க அவரின் பதவி பிரமாணத்திற்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று இன்று கோரிக்கை விடுக்கும் கட்சிகள் அமைப்புகள் எல்லாம் இன்று அவருக்காக குரல் கொடுத்து அரசியல் செய்யலாம். நாளையே அவர்களின் அரசியல் நிலைப்பாடும் கூட்டணி கணக்குகளும் மாறும் போது அத்தனை பேரும் களத்தில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். மீண்டும் களத்தில் இந்துமதி தனித்து விடப்படும் சூழல் வரலாம் . ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக நீதியும் சம நீதியும் அனைவருக்கும் பொதுவே என்ற பக்குவமும் மனநிலையும் இங்குள்ள ஒவ்வொரு தனிமனிதருக்குள்ளும் தாமாக வரவேண்டும். அந்த மனநிலை வந்தால் மட்டுமே கட்சி அரசியல் அமைப்புகள் நீதிமன்றங்கள் உத்தரவு கடந்து அவரவருக்கு உண்டான தனி மனித உரிமைகள் சுதந்திரங்கள் இங்கு பாதுகாக்கப்படும். அதுவே உண்மையில் சமூகத்தில் சம நீதி சமூக நீதி பாதுகாக்கப்படுவதன் சாட்சியமாக இருக்கும்.
ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் சாதி என்னும் அடையாளத்தை ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றி அதை தங்களின் ஆதாயத்திற்காக வாக்கு வங்கி பெட்டகமாகவும் கட்டமைத்துக் கொண்டார்கள் . அதன் காரணமாக அவர்களுக்கு இந்த சாதிய அடையாளமும் சாதிய ஒதுக்கீடு அதன் காரணமாக இருக்கும் வாக்கு வங்கி அரசியல் எல்லாம் நிரந்தரமாக தேவைப்படுகிறது . அந்த வாக்கு வங்கி அரசியலில் எங்கு ஆதாயம் இருக்குமோ? அது சார்பில் அரசின் எந்திரம் சாய்கிறது. எங்கு ஆதாயம் குறைகிறதோ ? அல்லது எங்கு ஆட்சியாளர்களின் ஆதிக்கம் வலுவிழக்கிறதோ? அங்கு சமூக நீதி சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகிறது. அந்த வகையில் இது முழுக்க முழுக்க ஆட்சியாளர்களின் அரசு எந்திரத்தின் அலட்சியம் அதிகார துஷ்பிரயோகம் மட்டுமே.
பட்டியல் சமூகம் சார்ந்த பெண் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அவருக்கு பதவி பிரமாணம் இல்லை என்று செய்திகள் வெளியாகிறது. அவருக்கு பதவி பிரமாணம் நிகழாமல் இருப்பதற்கு காரணம் முன்னாள் ஊராட்சி தலைவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இதுவரையில் அவர் மீது எந்த புகார் வழக்கும் பதிவு செய்யப்படாமல் அவரின் மீது எந்த விசாரணையும் இல்லாமல் இருப்பதையும் அவர்களே குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் அந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆளும் கட்சியின் பின் குலம் உள்ளவரா ? அல்லது ஆளும் கட்சியின் ஆதரவு கட்சியின் பின்புறம் உள்ளவரா? என்பதை நம்மால் யூகிக்க முடியும். இந்த இரண்டில் ஒன்று இருந்தால் ஒழிய தமிழக காவல்துறையை அவர்கள் தங்கள் மீது வழக்கு வராத வண்ணம் கட்டுப்படுத்தி இருக்க முடியாது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாகியும் பதவிப்பிரமாணம் செய்விக்க முடியாத நிலையில் பரிதவிக்கும் பெண்ணிற்கு எதிராக களத்தில் நிற்பவர்கள் ஆளும் கட்சி சார்ந்தவர்கள். அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிறது.
இவ்வளவு நடந்து முடிந்த பிறகும் கூட எதிர் தரப்பினரின் ஆளும் கட்சி ஆதரவு பின்புலம் அவர்களின் உண்மை பின்னணி பற்றி எதுவும் குறிப்பிடாமல் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கிறார்கள். மாநில தலைமைச் செயலாளரிடம் மனு கொடுக்கிறார்கள். ஆனால் தங்களது கூட்டணி சார்ந்த கட்சிதான் ஆளும் கட்சியாக இருக்கிறது. இவர்கள் நினைத்தால் இதை நேரடியாக இவர்களது கட்சி தலைமை மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போக முடியும். அடுத்த நிமிடம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணவும் முடியும். ஆனால் அதை செய்ய இவர்களுக்கு மனம் இல்லை என்றால் அதன் பின்னணி என்ன. ?
ஒன்று எதிர் தரப்பின் பின்புறம் ஆளும் கட்சியாக வலுவான கட்சி செல்வாக்கு இருக்கும் பட்சத்தில் இதை முதல்வரின் காதுக்கு கொண்டு போனாலும் அதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பதால் பெயருக்கு அரசியல் செய்து விட்டு போகலாம் என்று இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இவர்கள் அனைவரும் இதை நேரடியாக முதல்வரின் அல்லது உள்ளாட்சித் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போக முயற்சித்து ஆளும் கட்சி அரசு இயந்திரம் அதற்கு உரிய ஒத்துழைப்பு அனுமதி வழங்காமல் தவிர்த்து இருக்க வேண்டும் . இரண்டில் எது நடந்திருந்தாலும் முழுக்க முழுக்க ஆட்சியாளர்களும் அரசு எந்திரமும் இந்த பெண்ணின் பதவி பிரமாணத்தைக்கு தடையாக எதிர் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகிறது.
மேடைதோறும் சமூக நீதிப் பேசுபவர்கள் அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு நாங்களும் எங்களின் கட்சியும் தான் என்று பேசும் ஆளும் கட்சிக்காரர்கள் இதுவரையில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசாமல் கருத்து தெரிவிக்காமல் இருப்பதில் இருந்தே அவர்களின் உண்மையான சமூக நீதியை அது பற்றிய மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியும் . சமீப காலமாக இதே திருப்பத்தூர் மாவட்டத்தில் அத்திமா பல்லி கிராமம் அருகே தங்களை திமுகவின் நிர்வாகிகள் கட்சிக்காரர்கள் மகளிர் உரிமை தொகை சார்பான விவகாரத்தில் சாதிய பெயரைச் சொல்லி அவமதிப்பதாகவும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவதாகவும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தது நினைவிருக்கலாம். பட்டியல் சமூகம் சார்ந்த பெண் என்பதால் வெற்றி பெற்று ஊராட்சி தலைவராக பதவி பகித்து வருபவரை ஒரு அமைச்சர் தனக்கு சரிசமமாக நாற்காலியில் அமர அனுமதிக்காமல் தரையில் அமர வைத்து பேசிய நிகழ்வும் அதை எதிர்த்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இரண்டு ஆண்டுகளாகியும் பதவிப்பிரமாணமே செய்து வைக்காமல் அவரின் போட்டியையும் சட்டத்தின் மூலம் உள்ளாட்சி பிரிவில் சுழற்சி முறை ஒதுக்கீடு கிடைத்தால் கூட பதவிக்கு வர முடியாது. எங்களின் ஒத்துழைப்பு அனுமதி இல்லாமல் பதவிப்பிரமாணம் செய்ய முடியாது என்ற அளவில் எதிர் தரப்பினர் செயல்பட்ட போதிலும் அவர்களை ஆட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் பாதுகாத்து வருவதிலிருந்து தமிழக அரசும் ஆட்சியாளர்களும் எந்த அளவிற்கு சமூக நீதியை பாதுகாக்கிறார்கள் சாதி பாகுபாடு அற்ற ஒரு சமுதாயத்தை கட்டமைத்து விட்டோம். நாங்கள் தான் சமூக நீதி காவலர்கள் என்று அவர்கள் தம்பட்டம் பேசிக் கொள்வதெல்லாம் எவ்வளவு பெரிய பொய் என்பதும் உணர முடியும். சாதி என்ற அடையாளத்தை ஆயுதமாக்கி அரசியல் வியாபாரத்தில் ஆதாயம் தேட நினைக்கும் ஆட்சியாளர்களின் அரசியல்வாதிகளின் எண்ணம் மாறாத வரையில் இது போன்ற அவலங்களும் தொடரவே செய்யும்.