நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறை படுத்துமா தமிழக அரசு?

நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறை படுத்துமா தமிழக அரசு?

Share it if you like it

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பது

நமது ஆன்றோர் வாக்கு.

தினமும் கோவிலுக்கு சென்று, இறைவனை வழிபடுவதே, நமது மக்களின் வழக்கம். கால மாற்றத்தின் எதிரொலியாக, வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ, கோவிலுக்கு செல்வது என்பதே, தற்போது, சிலரின் வழக்கமாக மாறி வருகின்றது. ஆண்டுக்கு ஒரு முறை, தங்களது குலதெய்வக் கோவில் வழிபாட்டிற்கு சென்று வருவதே, பலருக்கும் பெரிய விஷயமாக இருக்கிறது. அவ்வாறு, கோவில்களுக்கு நாம் செல்வது குறைந்ததால், கோவில் சொத்துக்கள், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற, பல்வேறு முயற்சிகளை ஹிந்து அமைப்புக்கள் எடுத்தாலும், அதில் முழு வெற்றி கிடைக்கவில்லை.

சமீபத்தில் வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பு மனநிறைவை தந்தது. அந்த தீர்ப்பை முழுவதும் அமல்படுத்தினாலே,  மீண்டும் பழைய சொத்துக்களை மீட்டுக் கொண்டு வர முடியும், என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

புராதன கோவில்கள், கட்டடங்கள், பாதுகாப்பு ஆணையம் அமைத்தல், விதிகள் ஏற்படுத்துதல், மகாபலிபுரம் உலக புராதன பகுதி மேலாண்மை ஆணையம் அமைத்தல் போன்றவை தொடர்பாக, எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை என ஆங்கிலப் பத்திரிகையில்,  ஜனவரி 2015 ஆம் ஆண்டில் செய்தி வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையில், அன்றைய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு, வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வழக்கு நிலுவையில் இருக்கும் போது பழம்பெரும் கோவில்கள், சிலைகள், ஓவியங்கள், பொருட்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் 900 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரங்கள் (Affidavit), 240 பக்கங்கள் கொண்ட எதிர் பிரமாண பத்திரங்கள் (Counter Affidavits), 200 பாழடைந்த கோவில் புகைப்படங்கள், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரிக்க நீதிபதிகள்  R. மகாதேவன் மற்றும் P.D. ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு அமர்வு 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 தொடங்கி, 2021 ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி வரை, தொடர்ந்து ஆறு வருடங்கள் ஐந்து மாதம் என மொத்தம் 77 மாதங்கள் விசாரணை நடத்தி, இறுதியாக ஜூன் 7-ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு அன்று, இறுதித் தீர்ப்பு வழங்கியது.

தமிழக இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலை:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன. அவற்றுள் 8 ஆயிரத்து 450 கோவில்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. இவை புராதான கோயில்களாக கருதப்படுகின்றன.

6 ஆயிரத்து 414 கோவில்கள் சிறிய அளவில் சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. 530 கோவில்கள் பாதி சேதம் அடைந்தும்,  716 கோவில்கள் முழுமையாக சேதம் அடைந்தும் உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோவில்களை தொல்லியல் துறை ஆய்வு செய்து, அதன் சேதத்தை மதிப்பிட வேண்டும். பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
  • புராதான சின்னங்கள், ஓவியங்கள், கோவில்கள், சிலைகள், பழமை வாய்ந்த பொருட்களை பாதுகாத்திடல் வேண்டும்.
  • புராதன நினைவு சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க, மகாபலிபுரம் பகுதியில் உலக புராதன மேலாண்மை ஆணையத்தை அமைக்க, 8 வாரங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
  • தமிழக அரசுக்கும், மகாபலிபுரம் மேலாண்மை ஆணையத்திற்கும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக, 17 நபர்கள் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, 8 வாரங்களில் அரசு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாநில தொல்லியல் துறை பிரதிநிதிகள், வரலாற்று அறிஞர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள், தகுதியான ஸ்தபதி, ஆகம சாஸ்திர நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும்.
  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோவில்களை பார்வையிட்டு, சிற்பங்களை கண்டறிந்து உடனடியாக செப்பனிட, அரசின் மாவட்ட குழுவிற்கு, தகவல் அறிவிக்க வேண்டும்.
  • கோவில்களில் பழமையான கைவண்ணக் கலைப் பொருட்களை பாதுகாக்க வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும். பழமை வாய்ந்த பொருட்களுக்கு, ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதனுடைய பாரம்பரிய குறிப்புகள் பாதுகாக்கப் பட்டு, பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.
  • கோவில் நிதியை முறையாக பராமரிக்க வேண்டும்.
  • கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அந்தந்த மாவட்ட குழுக்கள் கணக்கெடுக்க வேண்டும்.
  • காலியிடங்கள், குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் போன்ற விவரங்களை சேகரிக்க வேண்டும்.
  • சட்டவிரோத கோவில் நிலங்கள் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆவணப்படுத்த வேண்டும்.
  • கோவில்களுக்கு, நிலத்தை தானம் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக, நிலங்களை விற்கவோ, யாருக்கும் கொடுக்கவோ கூடாது. கோவில் வசம் தான், இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.
  • சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர்கள் அவகாசம் வழங்கி, எட்டு வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளுக்கு எதிராக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • வருவாய்த்துறை உதவியுடன், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண வேண்டும்.
  • வாடகை பாக்கி வைத்து இருப்பவர்களின் பட்டியல்களை, 6 வாரங்களில் தயாரித்து இணையத்தில் வெளியிட வேண்டும்.
  • கோவில்களில் உள்ள சிலைகளை கணக்கு எடுக்க வேண்டும்.
  • திருடப்பட்ட சிலைகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
  • கோவில் நிலங்களில் வசிப்பவர்களின் வாடகை பாக்கியை, உடனே வசூலிக்க வேண்டும்.
  • கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் போன்றவற்றை முறையாக பாதுகாக்க, அதற்கான சொத்துப் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கோவிலிலும் உள்ள சிலைகள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நகைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.
  • ஓதுவார்கள், அர்ச்சகர்களை  நியமிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கோவிலுக்கும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்.
  • கோவில்களின் கணக்கு, வழக்குகளை மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகளின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி:

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் விவரங்களை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக, 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் தனியார் வசமே உள்ளது. பலர் வாடகைக்கும், குத்தகைக்கும் நிலங்களை எடுத்தாலும், அதற்குரிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, சென்னை, திருச்செந்தூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட  23 மாவட்டங்களில் உள்ள, 47 கோவில்களுக்கு சொந்தமான 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்களின்  விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்,  இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போது தமிழக கோவில்களுக்கு சொந்தமான, 72 சதவீத மொத்த நில விவரங்கள் இணையத்தில் வெளிவந்து உள்ளன.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலமாக, தமிழக கோவில்களின் நிலங்கள், பாரம்பரியச் சின்னங்கள் மீட்கப் படுவதுடன், அவை பொக்கிஷமாக பாதுகாக்கப் படவும் வேண்டும்.

இந்து சமய அறநிலைத்துறை அறிக்கையின் படி, 1985 – 87 ஆம் ஆண்டு தமிழக கோவில்களின் மொத்த நிலப்பரப்பு 5.2 லட்சம் ஏக்கர்.

2019 – 20 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, தமிழக கோவில்களின் மொத்த நிலப்பரப்பு 4.7 லட்சம் ஏக்கர். இடைப்பட்ட காலத்தில், மீதமுள்ள நிலங்கள் எங்கே போனது, என்பது புரியாத புதிராகவே உள்ளது.

தமிழ் மொழி, இன்றும், வளமாக இருப்பதற்கு முக்கிய காரணமே நமது கோவில்கள் தான். நமது கோவிலுக்கு வரும் பக்தர்கள், தமிழ் மொழியில் உள்ள பாடல்களைப் பாடி, அவர்கள் அர்ச்சனை செய்து வருகின்றனர். அதன் மூலம், தமிழ் மொழியின் தரத்தை, வளத்தை  அவ்வையார், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர் உயர்த்தினார்கள்.

கோவிலின் சொத்துக்களை முழுமையாக மீட்டெடுப்பதுடன், அதில் வரும் பணத்தைக் கொண்டு, கோவில்களுக்கு செலவிட்டு, கோவில்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!

 

.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it