உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான அஜய்பால் சிங் பங்கா (எ) அஜய் பங்காவை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்திருக்கிறார்.
அமெரிக்காவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது உலக வங்கித் தலைவர் பதவிக்கும் இந்தியர் நியமிக்கப்படவிருக்கிறார். இது இந்தியர்களுக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அஜய் பங்கா, 1959-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தவர். இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் (ஐ.ஐ.எம்.) எம்.பி.ஏ. படித்தார். பின்னர், நெஸ்லே இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் சுமார் 13 ஆண்டுகாலம் பணிபுரிந்தார்.
இதன் பிறகு, அமெரிக்கா சென்ற அஜய் பங்கா, பிரபல சிட்டி குரூப் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து, மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவராக அஜய் பங்கா பதவி பெற்றார். பிறகு, அதே நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தார். 2021-ம் ஆண்டில் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மாஸ்டர்கார்ட், அமெரிக்கன் ரெட் கிராஸ், கிராஃப்ட் ஃபுட்ஸ், டவ் இன்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் பொறுப்பு வகித்த அஜய் பங்காவுக்கு, தொழில் மற்றும் நிதித் துறையில் சுமார் 30 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது உலக வங்கியின் தலைவராக இருக்கும் டேவிட் மால்பாஸ் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்திருக்கிறார். உலக வங்கியின் தலைமைப் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் அஜய் பங்கா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஏற்கெனவே பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில், தற்போது உலக வங்கித் தலைவர் பதவிக்கும் இந்தியர் நியமிக்கப்படுவது பெருமைக்குரிய விஷயமாகும்.