ஏலகிரி மலை – ஏழைகளின் ஊட்டியான அழகிய மலை வாழிடம்

ஏலகிரி மலை – ஏழைகளின் ஊட்டியான அழகிய மலை வாழிடம்

Share it if you like it

வார விடுமுறையை அல்லது நண்பர்கள் – உறவினர்கள் கூடுகை என்று ஒரு நாள் பொழுது முழுவதையும் குறைந்த செலவிலும் மகிழ்ச்சியாகவும் ஒரு மலைவாழ் இடத்தில் கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஏலகிரி மலையின் பயணமும் அனுபவமும் மனநிறைவைத்தரும். மலையேற்றம் – பாராகிளைடிங் என்று சாகச காரர்களுக்கு இந்த ஏலகிரி மலை சிறந்த பயிற்சி களமாகவும் இருக்கும் .அந்த வகையில் சுற்றுலா – ஆன்மீகம் – இயற்கை ஆர்வலர்கள் – சாகச விரும்பிகள் என்று அனைவரும் விரும்பும் ஒரு ரம்யமான மலை வாழிடம் ஏலகிரி மலை.

கிழக்குத் தொடர்ச்சி மலையின் சிறிய மலைத் தொடரின் ஒரு பகுதி தான் ஏலகிரி மலை. ஏலகிரி மலை கடல் மட்டத்திலிருந்து 1,110 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. ஊட்டி – கொடைக்கானல் – கொல்லிமலை போல மிக உயர்ந்த மலையாக இல்லாத போதும் ஏழைகளின் ஊட்டி என்ற பெயரை இந்த ஏலகிரி மலை வாழும் சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் இயற்கை சுற்றுலா தலமாகவும் விளங்குவது சிறப்பு. எப்போதும் மிதமான தட்பவெப்ப சூடன் நிலவும் ஏலகிரியில் கடுமையான கோடை வறட்சி காலங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் .தொடர் வறட்சி காலங்களில் இந்த ஏலகிரி மலை அதன் வனப்பும் வசீகரமும் இழந்து அவ்வப்போது காட்டுத்தீயில் சிக்கி பேரழிவையும் கடந்து வருகிறது.

ஏலகிரி மலையில் ஏலக்காய் தோட்டங்கள் பிரசித்தி பெற்றது .நூற்றாண்டு முன்பு வரை இருந்த மலைபலம் மண்வளம் நீர் வளம் அதிக அளவில் ஏலக்காய் விளைந்த பகுதியாக இந்த பிரதேசத்தை தக்க வைத்தது .ஏலக்காய் அதிகம் விளையும் மலை என்று ஏலமலை என்ற பெயர்தான் ஏலகிரி என்றும் வழங்கலானது. ஆனால் தட்பவெப்ப மாறுதல் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏலகிரி மலையின் இயற்கை சீரழிவு காரணமாக தற்போது ஏலகிரி மலையின் பெயரில் மட்டுமே ஏலம் இருக்கிறது.

ஆனால் இன்றும் மா பலா சீதா கொய்யா இலந்தை பேரிக்காய் விளாங்காய் நாவல் உள்ளிட்ட அபூர்வ மருத்துவ குணமும் உயர்ச்சத்துக்களும் நிரம்பிய பழ வகை மரங்கள் ஏராளம் உண்டு. ஏலகிரி மலைத்தேன் மருத்துவ குணம் நிறைந்தது. ஏலகிரி மலையில் விளையும் ஏலக்கி என்ற மருத்துவ குணமும் இயற்கை சுவையும் உடைய வாழைப்பழம் இந்த மலையின் தனி சிறப்பு.. தமிழகத்தில் இந்த மலையைத் தவிர வேறு எந்த பகுதியிலும் ஏலக்கி வாழை இத்தனை சுவையோடும் இயற்கை மணமோடும் இருப்பதில்லை என்பது ஏலகிரி மலையில் தனிச்சிறப்பு.

ஏலகிரி மலையை சுற்றிலும் இருக்கும் மலை கிராமங்களில் விவசாயம் காய்கறிகள் கீரைகள் பழங்கள் வனம் சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழில்கள் மூங்கில் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் கைவினைப் பொருட்கள் என்று விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும் இன்றளவும் பிரசித்தி பெற்றது. அங்கு உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் மூங்கில் உபயோகப் பொருட்களும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரை சாலை ஓர கடைகளில் கிடைக்கும்.

இம்மலையில் விளையும் மலைப்பூண்டு சிறு வெங்காயம் இன்றளவும் நாட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நிலா ஊர் ஏரி உள்ளிட்ட சுற்று வட்டார ஏரிகள் நல்ல நீர் வளம் கொண்டவை. ஏலகிரி மலையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ஏரியும் மலை மீது இயற்கையாகவே அமைந்த ஒரு பெரிய ஏரியும் ஏலகிரியின் மிகப்பெரிய நீர் ஆதாரங்கள். இந்த ஏரியில் படகு போக்குவரத்து உண்டு. ஏலகிரி மலையில் கோடை காலங்களில் கோடை சிறப்பு விழாவும் தமிழக சுற்றுலா துறை சார்பாக முன்னெடுக்கப்படுகிறது .அதில் இடம்பெறும் மலர் கண்காட்சி பழ கண் காட்சி மற்றும் இயற்கை பண்ணை சார்ந்த கண்காட்சி பிரசித்தி பெற்றது.

பசுமை போர்த்திய மலைச்சாரல் அடர்ந்த வனப்பகுதிகள் அச்சமூட்டும் கொண்ட ஊசி வளைவுகள் என்று ஒரு மலைவாழ் இடத்திற்கு தேவையான அத்தனை அம்சமும் நிரம்ப பெற்ற ஏலகிரி ட்ரக்கிங் என்னும் மலையேற்றத்திற்கு இலகுவானதும் பாதுகாப்பானதுமான மலை வாழிடமாகும். வார விடுமுறை நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் இங்கு மலையேற்றத்தில் ஈடுபடும் சுற்றுலா விரும்பிகளை கூட்டம் கூட்டமாக பார்க்க முடியும்.

ஏலகிரிமலை பாராக்லைடிங் என்னும் விண்வெளி சாகசத்திற்கு உலக பிரசித்தி பெற்றது.பாராசூட் மூலம் வானில் பறந்து வட்டமடித்து தரையிறங்க தேவையான மலைப்பகுதி பள்ளத்தாக்கு என்று இயற்கையாகவே பாராக்கி லைட்டிங் சாகசத்திற்கு ஏற்றதாக ஏலகிரி மலை அடையாளப்படுத்தப்படுவதால் உலகெங்கும் உள்ள பாராக் லைடின் வீரர்கள் ஏலகிரி மலைக்கு வருவதை பார்க்க முடியும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச அளவில் பயிற்சி செய்யும் சாகச போட்டியும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

மலை என்றாலே அருவி இருந்தால் தானே? அது முழுமையாகும். ஏலகிரியில் அருவி இல்லையா ? என்ற கேள்வி எழலாம் .ஏலகிரி மலையில் அருவிகள் இல்லை .ஆனால் ஏலகிரியில் இருந்து மலை மீது சில கிலோமீட்டர் பயணிக்கும் போது ஜலகம்பாறை என்ற இடத்தில் ஒரு காட்டருவி இருக்கிறது .ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த ஜலகம் பாறை கொடும் வறட்சி காலத்தில் மட்டுமே தண்ணீர் அரிது. மற்றபடி மலையின் ஊடே மூலிகைகளோடு பயணித்து வரும் குளிர்ச்சியான நீரில் நீராடுவதும் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தை தரிசிப்பதும் ஏலகிரி மலையில் பயணத்தை முழுமையாக்கும். அந்த வகையில் ஆடிப்பெருக்கு – கிருத்திகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும்.

மலையின் மீது வரும் சுற்றுலா வாசிகளுக்கு தேவையான உணவகங்கள் சிற்றுண்டி விடுதிகள் ஏராளம் உண்டு தமிழக அரசு சுற்றுலா சார்பிலும் உணவு தங்கும் விடுதிகள் உண்டு. சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் பயணித்து ஆம்பூர்- திருப்பத்தூர் மார்க்கத்தில் சோலையார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு மலை அடிவாரம் நோக்கி பயணிக்க வேண்டும்.

ஆம்பூர் – வாணியம்பாடி – ஆலங்காயம் – திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏலகிரிக்கு பேருந்து வசதிகள் குறிப்பிட்ட அளவில் உண்டு. இந்த நகரங்களில் இருந்து தனிப்பட்ட வாகனங்களை அமர்த்திக் கொண்டும் ஏலகிரி மலைக்கு பயணிக்க முடியும். ஆம்பூர் – வாணியம்பாடி – திருப்பத்தூர் ரயில் நிலையங்களில் இருந்தும் ஏலகிரிக்கு பயணிக்க முடியும். சோலையார்பேட்டை ரயில் முனைமம் ஏலகிரிக்கு அருகில் இருக்கும் ரயில் முனைமம். இந்த ஏலகிரி மலைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னை – திருப்பத்தூர் வரையிலான ஒரு பயணிகள் விரைவு தொடர்வண்டியை தென்னக ரயில்வே இயக்குவதும் அதை ஏலகிரி எக்ஸ்பிரஸ் என்று இந்த சுற்றுலா மலை வாழிடத்தின் பெயரிலேயே இயக்குவதும் ஏலகிரி மலைக்கு கூடுதல் சிறப்பு.


Share it if you like it