நமது பாரத நாடு பல பொக்கிஷங்களை கொண்ட நாடு. இந்திருநாட்டில் மக்களை செம்மைப்படுத்த கடவுளின் அவதாரம், முனிவர்கள், அறிஞர்கள், மகான்கள் போன்றோரும், எண்ணிலடங்காத இலக்கியம், வேதங்கள், தத்துவங்கள், தற்காப்பு கலைகள், மருத்துவம் இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு வளம்மிக்க, செழிப்புமிக்க நாடு நமது பாரத நாடு.
இவற்றுள் மிக முக்கியமானது மனித உடலும், மனமும். இவை இரண்டும் உறுதியாகவும், அழகாகவும் , ஆரோக்கியமாகவும், நீண்ட காலம் நிலைத்திருக்க நமது முன்னோர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோகக் கலையும்.
“நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்” என்று நமது முன்னோர்கள் எழுதிய இலக்கணத்திற்கு ஏற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ சித்தர்கள் நமக்களித்த அமிர்தமாவது மருத்துவமும், யோகக் கலையுமாகும்.
யோகாசணம் பொருள்:
யோகம் என்ற பதத்திற்கு ஒருமுகப்படுத்தல் மற்றும் இணங்கியிருத்தல் என்று பொருள்
ஆசனம் என்பது இருக்கை என்று பொருள்
யோகாசனம் என்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில் உடலை இணக்கமாக இருக்க வைப்பது என்று பொருள்.
ஐந்து புலன்களையும் அலைபாயாமல் பயிற்சியின் மூலம் ஒருமுகப்படுத்தி மனிதனின் மனதில் புதைந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை தட்டியெழுப்ப அதை எவ்வாறு மனித சமுதாயத்திற்கு பயன்படும்படி செய்யலாம் என்பதை கற்றுத்தருவதே யோகக்கலை ஆகும்.
யோகக்கலை வேதகாலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முறையாக வரையறுக்கப்படாமல் இருந்த யோக சாஸ்திரத்தை முறையாக ஒருங்கிணைத்தவர் பதஞ்சலி முனிவர் ஆவார்.
யோகத்தின் வகை
யோகம் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கர்மயோகம் (பலனை எதிர்பார்க்காமால் செய்யும் சேவை)
2. பக்தியோகம் (முழுமையாக தன்னை அர்பணித்தல்)
3. ஞானயோகம் (பூரண அறிவுடன் செயலாற்றல்)
4. இராஜயோகம் (யோகங்களின் முதன்மையானது, விஞ்ஞான நுட்பம் கொண்டது)
இவ்வாறாக மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் ஆற்றலை தட்டி எழுப்ப நமது முன்னோர்கள் யோகக்கலை மூலம் எண்ணற்ற பொக்கிஷங்களை நமக்கு அள்ளி கொடுத்துள்ளனர். ஒரு மனிதனின் முகப்பொலிவு, உள்ளத்தூய்மை, நல்ல சிந்தனை, வலிமையான உடல் பெறவும், நமது ஆரோக்கியமான வாழ்விற்கும் சிறப்பானது யோகக்கலையே.