பாரத பிரதமரை அவமானப்படுத்தும் வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்று, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீப காலமாகவே, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், மத்திய அரசையும், பாரத பிரதமர் நரேந்திர மோடியையும் கிண்டல், கேலி செய்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில், 2016-ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள், அவர் அணியும் உடை உள்ளிட்டவை குறித்து, கிண்டலும், கேலியும் செய்திருந்தார்கள். இதைக் கேட்டு அரங்கத்தில் இருந்தவர்களும், நடுவர்களாக இருந்தவர்களும் கைகொட்டி சிரித்ததுதான் வேதனை.
இதைவிட கொடுமை என்னவென்றால், கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அந்த நிகழ்ச்சியில் பிரதமரை கொச்சைப்படுத்தும் வகையிலான காட்சியை மட்டும் கட் பண்ணி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததோடு, தமிழ்நாடுன்னா சும்மாவா என்று நக்கலாக கமெண்ட்டும் செய்திருந்தார். அதேபோல, தர்மபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், அதேகாட்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததோடு, சிரித்து சிரித்து மகிழ என்று கமெண்ட்டும் செய்திருந்தார். அதேசமயம், நம் நாட்டின் பிரதமரை கொச்சைப் படுத்துகிறார்களே என்கிற ஆதங்கமும், கொதிப்பும் மக்களிடம் அப்பட்டமாக வெளிப்பட்டது. குறிப்பாக, ஜோதிமணி, செந்தில்குமார் பதிவுகளை பார்த்து கொந்தளித்து விட்டார்கள்.
மேலும், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு, பிரதமரை கொச்சைப்படுத்திய அத்தொலைக்காட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். தவிர, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும், இந்து அமைப்புகளும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்,
குறிப்பாக, பொதுமக்கள் பலரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருவதோடு, அந்நிறுவனத்துக்கு விளம்பரங்கள் கொடுத்துவரும் நிறுவன நிர்வாகங்களையும் தொடர்புகொண்டு இனி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்று எச்சரித்து வருகின்றனராம். இதனால் மேற்படி வர்த்தக நிறுவனத்தினரும், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தை தொடர்புகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்ததோடு, தாங்கள் கொடுத்த விளம்பரங்களை இனி ஒளிபரப்ப வேண்டாம் என்று கூறிவருவதாக தகவல். இதனால், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் செய்வதறியாது திகைத்து வருவதோடு, மேற்படி நிகழ்ச்சியை தயாரித்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறதாம். இதைக்கண்டு மற்ற தொலைக்காட்சி நிர்வாகத்தினரும் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.