இத்தல இறைவன் மேற்கு நோக்கிய கோலத்தில் புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேலே உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. இத்தலத்தில் வழிகாட்டி விநாயகர் உள்ளார். உபமன்யூ பராசரர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
தல சிறப்பு
இத்தல பெருமாளுக்கு தான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஜந்து அரங்கங்களில் இதுவும் ஒன்று பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 6 வது திவ்ய தேசம் ஆகும்.
ஸ்தல வரலாறு
முன்னொரு காலத்தில் இவ்வூர் பலாச மரங்கள் நிறைந்த புரசமர வனாந்திரமான இடமாக காட்சி அளித்தன. இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என ஆன்மீக பெரியோர்கள் தொன்று தொட்டு அழைத்து வருகின்றனர். உபரி சர்வசு என்னும் மன்னன் தன் ஆட்சியின் கீழ் இப்பகுதியை ஆண்டு வந்தான். கொடிய விலங்கினங்களின் சேட்டையை ஒழிப்பதற்காக வேட்டையாட காட்டிற்கு சென்றான். அவ்வேளையில் காட்டு யானையை தன் அம்பினால் தாக்கினான். வலியின் கொடுமை தாங்காமல் அலறிக் கொண்டே ஓடிய யானை வழியில் வேதம் ஓதும் அந்தணர் ஒருவரை மிதித்து கொன்று விட்டது. இதனால் அம்மன்னுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு அவனை வாட்டி வதைத்தது. தோஷ நிவர்த்திக்காக துர்வாச முனிவரிடம் வேண்டி நின்றான். அம்முனிவரோ ‘பலாச வனத்தில் அருள் ஆட்சி புரியும் ரெங்கநாதன் ஆலயம் சென்று ‘ஓம் பத்ம நாபாய நம’ என்ற திருமந்திரத்தை உச்சரித்தும் பலருக்கு அன்னதானம் உபசரித்தும் இருப்பாயேயானால் இத்துயரில் இருந்து ஆண்டவன் அபயம் அளிப்பான் என்று அருளாசி வழங்கி வழியனுப்பி வைத்தார் அம்முனிவர். அதன்படியே மன்னனும் இவ்வூரிலேயே ஒர் அழகிய அரண்மனை எழுப்பி. அவன் மேற்பார்வையில் மக்களின் பசிப்பிணிகளை நீக்கும் பொருட்டு அன்னதானம் இன்முகத்தோடும் தாய் உள்ளம் போன்று குறைவின்றி வழங்கி வந்தான். அப்பொழுது வானத்தில் ஓர் அசரீரி மன்னா! நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று லட்சம் பேருக்கு அன்னதானம் நல்கினால் சாப விமோசனம் கிட்டும் என்று கூறியது அந்த அசரீரி. உபரி சர்வசுவும் லட்சம் பேருக்கு அன்னதானம் செவ்வண்ணே செய்து முடித்தான். அவ்வேளையில் முதுமை பருவம் தாங்கிய ஏழ்மை உருவில் ஓர் அந்தணர் போல் வந்த பெருமான் தன்னை பசி அக்னி எரித்துக்கொண்டு இருக்கிறது என்று அம்மன்னனிடம் உணவு யாசகமாக கேட்டார். சமைத்த உணவெல்லாம் பருக்கை மிச்சமின்றி அனைவருக்கும் பரிமாறப்பட்டு விட்டதே என்ன செய்வது என்று அனல் தீண்டிய வெண்ணெய் போல் அவர் நிலை கண்டு உருகினான் மன்னன். பெரியவரே தாங்கள் சிறிது நேரம் பொறுத்துக் கொண்டால் சுவைமிகுந்த உணவு சமைத்து தங்களுக்கு பரிமாறுவேன் என்று வாக்குறுதி அளித்தான். ஆனால் பெருமாளோ பசியோ என்னை அரித்துக்கொண்டு இருக்கிறது. சமையல் செய்ய நீண்ட நேரம் ஆகும் உடனே எனக்கு அப்பம் செய்து கொடு என்று கேட்டுக் கொண்டார். மன்னனோ அன்பும், பக்தியும் கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது போல். அப்பங்களை ஓர் அழகிய குடத்தில் நிரப்பி அவருக்கு வழங்கினான். பேரானந்தம் அடைந்த இறைவன். அப்பக்குடத்தில் தனது பொற்கரத்தை வைத்து ஆசி வழங்கிவிட்டு. மன்னனுக்கு திவ்ய தரிசனம் வழங்கினார். இதனை அடுத்து அம்மன்னன் பட்ட துயரங்கள் அனைத்தும் நீரில் இட்ட உப்பைப்போல் மறைந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே இத்தல பெருமாளுக்கு அப்பக்குடத்தான் என்னும் சிறப்பு பெயரும் உண்டு. 108 திவ்ய தேசங்களில் இவ்வாலய பெருமானுக்கே இரவில் அப்பம் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும் பெருமாள் மேற்கு பார்த்தும் தாயார் கிழக்கு பார்த்தும் தம்பதி சமதே பெருமாளாக அருள்பாலிக்க நமக்காக காத்திருப்பது காண கண் கோடி வேண்டும என்பது திண்ணம்.
இவ்வாலயம் இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் நீக்கியும் , உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் போக்கி அருளிய தலம் என பல பெருமைகளை தன்னகத்தே உடைய திவ்ய தலமாகவும். தற்போது கோவிலடி என்றும் திருப்பேர் நகர் என புராண பெயர் கொண்டும் தொன்று தொட்டு அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு முன்பே ஸ்ரீதேவி எழுந்தருளிய தலம். நம்மாழ்வார் இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்து விட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று அறியப்படுகிறது. எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஜதீகம். மேலும் ஜந்து ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று அதாவது பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இதுவும் ஒன்று.
மூலவர் | அப்பக்குடத்தான் |
உற்சவர் | அப்பால ரங்கநாதர் |
தாயார் | இந்திரா தேவி, கமல வல்லி |
தல விருட்சம் | புரஷ மரம் |
தீர்த்தம் | இந்திர புஷ்கரிணி |
ஆகமம் & பூஜை | பாஞ்சராத்ர ஆகமம் |
புராண பெயர் | திருப்பேர் |
ஊர் | கோவிலடி
|
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்)
அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி)
மத்திய ரங்கம் – ஸ்ரீ ரங்கம்
சதுர்த்த ரங்கம் – கும்பகோணம்
பஞ்ச ரங்கம் – இந்தளூர் (மயிலாடுதுறை)
இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.
பாடியவர்கள்;
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேன். -நம்மாழ்வார்
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எம்பயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள் , தீராத பிரச்சனை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
திருவிழா ;
பங்குனி உத்திரத்தில் தேர் தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம்.
ஏறத்தாழ இவ்வாலயம் 2,000 ஆண்டுகள் தொன்மையும் மேன்மையும் வாய்ந்த அழகிய திருத்தலம். உலகமெல்லாம் வாழும் தம் அடியவர்கள் மேல் தாய் போல் அன்பு மழை பொழிந்து யாவருக்கும் அவன் அருள் கிட்டும் தலமாக அப்பகுடத்தான் ஆலயம் திகழ்கின்றது என்று கூறினால் அது மிகையன்று.
–கதிர் கலியமூர்த்தி