பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றியில் அப்துல் கலாமை நினைவு கூறும்போதெல்லாம் வாஜ்பாயின் புன்னகை தவழும் முகமே நினைவுக்கு வரும்… உன்னதமான தலைவன் இல்லாமல் எந்தவொரு விஞ்ஞானியும் நாட்டுக்கு எதையும் அளித்துவிட முடியாது. அப்துல் கலாம் என்ற மாபெரும் விஞ்ஞானியை ஜனாதிபதியாக்கி இந்தியாவின் பட்டித் தொட்டியெங்கும் பெருமைபடுத்திய பீஷ்ம பிதாமகர் திரு.வாஜ்பாய் அவர்களே.
இன்று எதற்கெடுத்தாலும் வாஜ்பாய் நல்லவர், அப்பழுக்கற்றவர், அவரது ஆட்சி தொடர்ந்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்படும் அனைவரும் அன்று அவரையும் அவரது ஆட்சியையும் பழித்தவர்களே…
இன்டர்நெட், ஸ்மார்ட் ஃபோன் எனப் பன்முகத் தகவல் பெட்டகங்கள் எதுவும் அதிகம் சென்று சேராத அந்நாட்களில், பத்திரிக்கைகளும், இரவு 8 மணி செய்திகளும் தான் நாம் என்ன படிக்க வேண்டும், கேட்க வேண்டும் என தீர்மானிக்கும். ஆனால் ஆட்சிக்கட்டிலில் வாஜ்பாய் இருந்த காலகட்டத்தில் அவைகள் ஏன் அவரது புகழை மக்களிடையே கொண்டு செல்லாமல் மறைத்தன எனும் உண்மை புரியவந்தபோது தான் இந்நாட்டின் உண்மையான அவலநிலையை உணர முடிந்தது.
நல்லவேளை, அந்நாட்களில் முகநூலோ, ட்விட்டரோ, இன்டர்நெட்டோ, இல்லாமல் போனது ஒருவிதத்தில் நன்மையே.. இல்லையெனில் சபிக்கப்பட்ட சமுதாயம் அந்த நல்ல மனிதரின் சாதனைகளையும் பெருமைகளையும் குதறிப் போட்டிருக்கும்.
தங்க நாற்கரச் சாலைத் திட்டம், பொக்ரான் அணுகுண்டு சோதனை, பொருளாதாரச் சீர்திருத்தம், கார்கில் போர் என வாஜ்பாயின் ஆட்சி சுதந்திர இந்தியாவின் பொன்னேடுகளில் பொறிக்கப் படவேண்டியவை. ஒரு ஊழல் குற்றச்சாட்டு கிடையாது, அனைத்து எதிர்க்கட்சியினரும் மரியாதை செலுத்தும் தலைமைப் பண்பு, எப்பொழுதும் இதழில் தவழும் புன்னகை, தன்னை நோக்கி வரும் வசவுச் சொற்களை லாவகமாகக் கையாளும் நகைச்சுவை, இலக்கிய மேதை, கவிஞர் – இந்த குணங்கள் நிறைந்த ஒப்பற்ற தலைவர்கள் எல்லாம் சென்ற நூற்றாண்டில் மட்டுமே சாத்தியம் என்பது இந்தியாவின் சாபம் போலும்.
அவரது ‘தங்க நாற்கரம்’ திட்டம் தரும் பலன் என்பது அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின் அட்சயப் பாத்திரம். அதில் பயணம் செய்யாத இந்தியரைக் காட்டவே முடியாது. அப்பொழுது தேவையற்ற செலவு என்றும், பாமர மக்களை அச்சுறுத்தும் செயல் என்றெல்லாம் காங்கிரசால் கடுமையாக விமர்சிக்கப் பட்டவை. அப்போதைய பத்திரிகைகள் ‘NIGHTMARE FOR TAXPAYERS’ எனத் தலைப்புச் செய்திகள் வெளியிட்டன… ஆனால் இன்று இந்தியாவை தலைநிமிரச் செய்த விரல் விட்டு எண்ணக்கூடிய திட்டங்களில் மகத்தானது இந்த தங்க நாற்கரச் சாலைத் திட்டம்.
பொக்ரானில் அப்துல் கலாம் நிகழ்த்திய சாகசங்களுக்கு அனுமதி அளிப்பதும், அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, தன்னிச்சையாக செயல்படுவதும் மற்ற எந்தவொரு பிரதமராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. அதன் வரலாற்றையும், இந்தியா எப்படி அமெரிக்க உளவுத்துறையினை முட்டாளாக்கியது என்ற வரலாறும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமெரிக்க-இந்திய பொருளாதார சலசலப்பில் வாஜ்பாயின் ஒவ்வொரு நகர்வும், உத்தரவுகளும் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையானவை. உரக்கச் சொல்லலாம், சுதந்திர இந்தியா அதுவரை வாஜ்பாய் போன்ற தைரியமான ஒரு பிரதமரைக் கண்டதில்லை.. (இந்திரா காந்தியிடம் இருந்தது தைரியம் அல்ல, முரட்டுத்தனம்)
ஒருபக்கம் இது போன்ற சாகசங்கள் நடந்துகொண்டிருக்கும்போது தான் இங்கே புரட்சித்தமிழன் சத்யராஜ், ‘அமெரிக்க அதிபரைப் பாருங்கள், எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார், நம்முடைய பிரதமரோ வயது முதிர்ந்து வேகமாக நடக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறார்’ என்றெல்லாம் பகடி செய்து திரைக்கதையமைத்து ‘மகாநடிகன்’ என்ற அரசியல் திரைப்படத்தில் தனது தத்துப்பித்து அறிவைப் பேசி புரட்சி செய்து கொண்டிருந்தார், இன்றும் செய்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லை, அதனால் விட்டு விடுவோம்.
வாஜ்பாயின் பொருளாதாரக் கொள்கைகளின் பாய்ச்சல் அசாத்தியமானது. வழக்கம்போல அன்றைய தலைமுறைக்கு அது எள்ளளவும் புரியவில்லை, இந்தியாவைக் கூறுபோடுகிறார் எனும் குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் அழுத்தமாக எழுப்பப்பட்டது. விவசாயிகளை கண்டுகொள்ள மறுக்கிறார் என்பது பிரச்சாரமாகவே மாறியது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத ஆட்சியில் அவரது புலிவேகப் பாய்ச்சல் மேலும் மேலும் பாயாமல் பதுக்கப்பட்டது. அவர் சொன்னது போல இந்தியா ஆணித்தரமாக ஒளிர்ந்தது, ஒளிர வைத்தவர் வாஜ்பாய், ஆனால் கிருஷ்ணனின் சத்திய ஜோதியை உணர மறுத்த குருட்டு திருதராஷ்டிரனாய் மக்கள் இருளில் அமிழ்ந்து இருந்தனர்…
அவரது ஆட்சியின் பலனை காலம் கடந்தே சிலாகித்தோம். காலம் கடந்தே அவரிடம் ஆட்சியைக் கொடுத்தோம். இன்று பா.ஜ.க எனும் கட்சி அசுர பலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் வாஜ்பாய் எனும் 94 வயது இளைஞனின் அயராத உழைப்பும், தன்னலமற்ற சாதனைகளும், அப்பழுக்கற்ற தேசப் பற்றும் தான் காரணம். ஒரு வேளை இன்னும் ஒரு பத்தாண்டுகள் அதிகம் ஆட்சி புரிந்திருந்தால் கலாமின் கனவு மிக விரைவாகவே நனவாகியிருக்கும் போலும்.
வாஜ்பாயைப் பற்றி பேசும்போது ஏற்படும் பெருமையை விட அவரைத் தொடர்ந்து ஆள விடாமல் தடுத்த வெறுமை தான் மேலோங்குகிறது. காமராஜர் ஆகட்டும், வாஜ்பாய் ஆகட்டும், எப்பொழுதும் அவர்களை வீழ்த்தி காரியம் ஆற்றிய பின்தான் அதன் வீரியம் நமக்குத் தெரிய வருகிறது.
லாஹூருக்கு பேருந்து விட்டு பாகிஸ்தானுடன் சமாதானம் பேசியவர். ஆனால் பாகிஸ்தான் முரண்டு பிடித்தது, அணு ஆயுதம் பிரயோகிப்போம் எனப் பூச்சாண்டி காட்டியது. அப்போது எந்தவொரு நாடும் அஞ்சும் ஓர் அறிக்கையை வெளியிட்டது வாஜ்பாய் அரசு. ‘இந்தியா மீது அணு ஆயுதம் பிரயோகித்தால், அடுத்த பொழுது விடிவதற்குள் பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகும்’ என பகிரங்கமாக எச்சரித்தார் சுதந்திர இந்தியாவின் இரும்பு மனிதர் ‘பீஷ்ம பிதாமகர்’ அடல் பிஹாரி வாஜ்பாய்.
வாஜ்பாய் உரையாற்றும் பொழுது அவ்வளவு அற்புதமாக இருக்கும், ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு அழகாக வந்து விழும், எதிரிகளும் அவரது பேச்சைக் கேட்க காத்திருப்பர், கவிதை எழுதுவது மட்டுமல்ல, பேசும்போதும் கவித்துவமாகவே பேசும் திறம் கொண்டவர் வாஜ்பாய் என்றெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்… ஹிந்தி கற்க முடியாத வருத்தத்தை இந்த மாதிரி தலைவர்களின் உரைகளை நேரடியாக புரிந்துகொள்ள முடியாத தருணங்களில் தான் உணர முடிகிறது…
வெறும் பதின்மூன்றே நாட்களில் அவரது ஆட்சியைக் கவிழ்த்தவுடன் அவர் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா — ‘அரசுகள் வரும், போகும். கட்சிகள் பிறக்கும், பின் மாயமாகும். ஆனால், அதையெல்லாம் விட முக்கியம், நம் நாடு ஒளிர வேண்டும், அதன் ஜனநாயகம் சாகாவரம் பெற்றிருக்க வேண்டும்’.
இன்று அவர் இல்லை. ஆனால் அவர் காட்டிய தீரம், நாட்டுப்பற்று, வளர்ச்சி, ஆட்சிமுறை, மக்களின் மீதான அக்கறை அனைத்தும் விதையாக மாறட்டும். தலைவர்கள் பிறப்பார்கள், மறைவார்கள், ஆனால் தேசம் தொடர்ந்து ஒளிர வேண்டும். அவர் காட்டிய பாதையில் இத்தேசம் தொடர்ந்து ஒளிரட்டும், ஜனநாயகம் சாகாவரம் பெறட்டும்…
ஒரு சாலையில் என்ன வளர்ச்சி வந்துவிடப் போகிறது எனக் கேட்டவர்களெல்லாம் ஒவ்வொரு நாளும் அந்த சாலையின் மூலம் நிகழும் துரிதப் போக்குவரத்தின் காரணமாக ஒட்டு மொத்த இந்தியாவின் தொழில்கள் அனைத்தும் கணிசமான பொருளாதார முன்னேற்றத்தை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை இன்றும் நினைவு கூறிச் சிலாகிக்கின்றனர்.
பாரதத்தாய் பெற்றெடுத்த தலைமகனின் நினைவு தினம் இன்று