ஐ.நா-வில் பல்லுயிர் நல அமைப்பின் நிர்வாகச் செயலாளராக இருக்கும் எலிசபெத் மருமா ரெமா உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், காலநிலை அவசரத்தைச் சீர்செய்ய திட்டங்களைச் செயல்படுத்துமாறு, ஐக்கிய நாடுகளின் சபையில் தனது ஆணித்தரமான கருத்தின் மூலம் அச்சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.
வன உயிரினங்கள் அழிவின் விளிம்பு நிலையில் உள்ளன. சுற்றுச்சூழலும் வாழ்வாதாரமும் இதனால் பெரும் சீரழிவை சந்தித்து வருகின்றது. இந்த ஆண்டிலாவது இதைத் தடுத்து நிறுத்த ஏதாவது ஒப்பந்தத்தை உலக நாடுகள் உருவாக்கிட வேண்டும். இல்லையெனில் இந்தப் பூமியை விரைவில் நாம் கைகழுவ வேண்டியிருக்கும்.
நாம் எவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் போகிறோமோ, அவை நம்மை விட எதிர்கால சந்ததிகளை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். பவளப்பாறைகள், மழைக்காடுகள் போன்றவற்றின் இழப்புகளால் ஏற்படும் பெரும் விபத்துகளைத் தாண்டி, உயிரினங்களற்ற வெற்று உலகிற்கே நம்மை அழைத்துச் செல்லும்.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டு தீ இதற்கு சிறந்த உதாரணம் என்று கூறிய அவர், மக்களின் வாழ்வாதாரமானது சுற்றுச்சுழலை நம்பித்தான் இருக்கிறது. ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், எரிபொருள் என எல்லாவற்றுக்கும் இயற்கை சார்ந்தே நாம் இருக்கிறோம்.
பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட பத்திலிருந்து நூறு மடங்கு வரை வேகமாக உலகம் அழிந்து வருகிறது, என முன்னணி அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆறாவது பேரழிவை நோக்கி மனித குலம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டுவர நம் கையில் மிகச் சொற்ப காலமே உள்ளது என்று வல்லுநர்கள் கூறியுள்ளதாக அவர்களின் கருத்தினை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.