மஹா சிவராத்திரி முக்கியமாக ஒரு ஹிந்து பண்டிகையாகும், இது ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானின் நினைவாக நடைபெறுகிறது. ஹிந்துக்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு பெரிய திருவிழாவாகும். இந்த விழாவானது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது
மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்
மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம்.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.
பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள்.
‘அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை (சிவனை)ப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.
மேலும் ஒருநாள் விளையாட்டாக சிவனின் கண்ணை மறைத்தாள் பார்வதி.உலகமே இருண்டது.செய்வதறியாமல் திகைத்த உயிர்கள் சிவனை சரணடைந்த நாளாகவும் கருதப்படுகிறது.
பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை சிவன் அருந்தினார்.தேவர்கள் அனைவரும் விழித்திருந்த அந்த இரவே சிவராத்திரி என்றும் புராணங்கள் சொல்கிறது.