அமெரிக்கா – சீனா வர்த்தக போர் தாக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்குள் அடுத்து அமரிக்கா – ஈரான் போர் பதற்றம் நம்மை ஆட்டிவைக்க தொடங்கிவிட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இதனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அடித்தட்டு மக்கள் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கும் பொழுது அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்க கூடும். இதனால் பண வீக்கம் அதிகரித்து இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது .
மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கின . நாட்டின் பங்குசந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 32 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 8 காசாக உள்ளது. முன்னதாகவே இந்தியா நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வேளையில், இந்த புது பிரச்சனை இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் சவாலாக இருக்க கூடும் என கருதப்படுகிறது.