விஜய் திவஸ்..
1947 ஆகஸ்ட் 15 இல் பிரிட்டிஷ் காரனிடமிருந்து விடுதலை அடைந்தோம். ஆனால் அவன் 562 சமஸ்தானங்களுக்கு தனித்தனியே பிரித்து சுதந்திரம் கொடுத்தான் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த தேசத்தை புனர் நிர்மாணம் செய்த பெருமை வல்லபாய் பட்டேலைச் சேரும். அவற்றுள் நேரு பொறுப்பேற்றுக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மட்டும் இன்று வரை பாக்கிஸ்தானுடன் பிரச்சினையாகவே தொடருகிறது.
1947 செப்டம்பரில், கபைலி பழங்குடியினர் என்கிற போர்வையில், பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. ஜம்முகாஷ்மீர் ராஜ்ஜியம் பாரதத்துடன் இணைந்த மறுநாள், அக்டோபர் 27 காலை 7:30 மணிக்கு பாரத ராணுவ வீரர்களுடன் முதல் விமானம் ஸ்ரீநகர் வந்து இறங்கியது. தொடர்ந்து காஷ்மீர் பாதுகாப்புப் போரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நமது ராணுவ வீரர்கள் வீர பலிதானமானார்கள். மீர்பூர், கோட்லி, ராஜௌரி, பூஞ்ச் போன்ற பகுதிகளில் போரில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்களும் வீர பலிதானமானார்கள். முழு ஜம்முகாஷ்மீர் மாநிலத்தையும் மீட்கும் முன்னர் அன்றைய பிரதமர் நேரு போரை நிறுத்திவிட்டு, ‘பிரச்சினையை ஐநா சபையில் பேசி தீர்த்துக் கொள்வோம் என்றார். தவறான இந்த முடிவால் ஐந்தில் இரண்டு பகுதி ஜம்முகாஷ்மீர் இன்றும் பாக்கிஸ்தான் வசம் உள்ளது.
1962-ல் சீனா, பாரதத்தின் மீது எதிர் பாராத நிலையில் போர் தொடுத்தது, பிரதமராயிருந்த நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கையினால், பாரதத்தின் எல்லைகள் பலவீனமாக்கப் பட்டிருந்தன. இதனால் நமது பல பகுதிகளை சீனாவிடம் இழந்தோம். இதை பார்த்து ஊக்கம் பெற்ற பாக்கிஸ்தானின் பிரதமர் ஆயூப்கான் இரண்டாவது பலத்த அடி கொடுத்தால் ஹிந்துக்களின் மனத் திட்பம் குலைந்துவிடும் எனக் கணக்கிட்டார்.
1965 ஏப்ரலில் ஜம்முகாஷ்மீரை முழுவதுமாக அபகரிக்கும் நோக்குடன், பாக்கிஸ்தான் பாரதத்தின் மீது படையெடுத்தது. ஆறு மாதங்கள் நீடித்த இந்த போரில் நமது ராணுவத்தின் கையே ஓங்கி இருந்தது. இரு பக்கமும் இழப்புகள் இருந்தாலும், பாக்கிஸ்தான் 200க்கு மேற்பட்ட டாங்குகளையும், 3800 வீரர்களையும் இழந்து நம்மைவிட அதிகம் பாதிப்படைந்திருந்தது. பாக்கிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரை, பாரத ராணுவம் அடைந்ததால் , தனது குடி மக்களை மீட்பதற்காக அமெரிக்கா மூலமாக தற்காலிக போர் நிறுத்தத்துக்கு வேண்டுகோள் விடுத்தது பாக்கிஸ்தான். பாரத ராணுவம், பாக்கிஸ்தானின் வளமான லாகூர், சியால்கோட் பகுதிகளில் 1920 ச.கி.மீ நிலப் பரப்பை பிடித்திருந்தது. பாக்கிஸ்தானோ காஷ்மீரில் ஒரு சிறு பகுதி மற்றும் சிந்துவுக்கு அருகில் உள்ள பாலைவனப் பகுதியை சேர்த்து 540 ச.கி.மீ பகுதிளை மட்டுமே பிடித்திருந்தது. போர் தொடர்ந்திருந்தால் பாக்கிஸ்தான் முழுமையாக தோற்கடிக்கப் பட்டிருக்கும்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் , ஐ.நா சபை மூலமாக நிற்பந்தித்ததால், செப்டம்பர் 23 அன்று போர் முடிவுக்கு வந்தது. பாரதப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், பாக்கிஸ்தான் பிரதமர் அயூப்கானும் அன்றைய ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்தில் ரஷ்ய அதிபர் முன்னிலையில் சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தினர். தாஷ்கண்ட் ஒப்பந்தப்படி இரண்டு ராணுவங்களும் பழைய நிலைகளுக்கு செல்வதென்று கையெழுத்திடப் பட்டது.
ஆனாலும் இந்தியாவைவிட தாங்களே வீரத்தில் சிறந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று மூளை சலவை செய்யப் பட்டிருந்த பாக்கிஸ்தானியர்களால், பாரதத்தின் வெற்றியை மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அயூப்கானின் திறமையின்மைக்கு எதிராக கலவரம் செய்தார்கள்.
1965 போர், காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கொண்டு வரவில்லை. ஆக்கிரமிக்கப் பட்டிருந்த காஷ்மீர் பகுதிகள் பாக்கிஸ்தான் வசமே தொடர்ந்தன. ராணுவத்தின் வீரத் தியாகங்கள் அர்த்தமற்றதாகி விட்டன. ஆனால் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டிலேயே மர்மமான முறையில் இறந்து விட்டார் . காங்கிரஸ் அரசு மீது கோவம் கொண்டு இருந்த பாரதிய மக்கள் பிரதமர் இறப்பினால் கோவம் அனுதாபமாக மாறிவிட்டது.
1971ல் கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப் படும் வங்காளப் பகுதியின் மீது, பாக்கிஸ்தான் ராணுவத்தின் அடக்கு முறை எல்லை மீறியது. வங்காளிகள் பாக்கிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாடாக விரும்பினாரகள். போராட்டங்கள் நடந்தன. மார்ச் 25 அன்று லெப் ஜெனரல் டிக்கா கான் தலைமையில் ராணுவம் களமிறக்கப் பட்டது. மனித வேட்டை நடந்தது. படித்தவர்கள் குறிப்பாக கொல்லப் பட்டார்கள். ஹிந்துக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். ஒட்டு மொத்தமாக சுமார் 3 லட்சம் பேர் கொல்லப் பட்டிருந்தார்கள். 2 லட்சம் பெண்களுக்கு மேல் கற்பழிக்கப் பட்டிருந்தனர். ஏராளமானபேர் அகதிகளாக பாரதத்துக்குள் நுழைந்தனர். பாரதம் வங்க தேசத்துக்கு ஆதரவு தெரிவித்தது.டிசம்பர் 3 அன்று மாலை, பாக்கிஸ்தான் ராணுவம் தனது விமானப் படை மூலம் 11 பாரத நகரங்களின் மீது தாக்குதல் நடத்திப் போரைத் துவக்கியது.
மிகக் குறுகிய நாட்களே நடந்த இந்தப் போர் டிசம்பர் 16 அன்று முடிவுக்கு வந்தது. பங்களா தேஷ் என்ற தனி நாடு பாரதத்தின் உதவியுடன் உருவானது. பாக்கிஸ்தான் படு தோல்வியைச் சந்தித்தது. உலக வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் 90,368 பேர் சரணடைந்தனர். இந்த வெற்றியை நமது ராணுவம் ஆண்டு தோறும் ‘விஜய் திவஸ்’ என்று கொண்டாடி வருகிறது. சர்வதேச சமூகமும் பாரத ராணுவ நடவடிக்கையை ஆதரித்தன. பாக்கிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு.
ஆனாலும் பாரத அரசோ இந்த சந்தர்ப்பத்தில் இழந்த காஷ்மீரை மீட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
ஒவ்வொரு முறையும் போர்க்களத்தில் கிடைத்த வெற்றியை பேச்சு வார்த்தையில் இழந்துள்ளோம். சுடுவது கையில் உள்ள துப்பாக்கி அல்ல; அதற்குப் பின்னால் உள்ள துணிச்சலான மனம். தேசம் என்னும் விராட புருஷனின் வாளேந்திய கரம்தான் ராணுவம். அந்த விராட புருஷனின் அதாவது ஒட்டு மொத்த சமுதாயத்தின் நெஞ்சுரம் இல்லாமல் பிரச்சனைகள் தீராது. தேசத்தின் ராணுவத்தின் பின்னால் தேசம் நிற்க வேண்டும். ராணுவத்தின் வெற்றியை தேசமே கொண்டாட வேண்டும். சமுதாயத்தின் மன நிலை தயார் செய்யப் பட வேண்டும். அப்பொழுது தான் இவை சாத்தியமாகும். வந்தேமாதரம்!
Hero