பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவிற்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக கர்தார்பூர் வழித்தடத் திட்டம் இந்தியா-பாகிஸ்தான் அரசாங்கங்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்தார்பூர் குருத்வாராவில் பாகிஸ்தான் ராணுவம் வைத்துள்ள வெடுகுண்டு குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வெடிகுண்டுக்கு அருகில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், “இந்திய விமானப்படை 1971 ஆம் ஆண்டில் குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலத்தை அழிக்கும் நோக்குடன் இந்த குண்டை வீசியது. இருப்பினும், வாகேகுரு ஜி (சர்வவல்லமையுள்ள அல்லாஹ்) ஆசீர்வாததினால் இந்த தீய செயல் நிறைவேறவில்லை.
இந்த குண்டு புனித கிணற்றில் விழுந்ததால் தர்பார் சாஹிப் குருத்வாராவிற்கு சேதம் ஏற்படவில்லை. இந்த புனித கிணற்றைத் தான் குரு நானக் அவர்கள் வயலுக்கு நீர் பாசனம் செய்ய பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று எழுதப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் கடந்த 1971 ஆம் ஆண்டு இந்த வெடிகுண்டை வீசியதாக பாகிஸ்தான் கூறுகிறது. இந்த வெடிகுண்டு நீண்ட காலமாகவே அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் தற்போது சீக்கியர்களின் கர்தார்பூர் புனிதப்பயணம் தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு இதை அங்கு வைத்துள்ளது, சீக்கியர்கள் மத்தியில் இந்தியா மீதான வெறுப்புணர்ச்சியை தூண்டும் முயற்சியாகவே கருதப்படுகிறது.