கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம்  வழங்கிட வேண்டும்- இந்து முன்னணி !

கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்- இந்து முன்னணி !

Share it if you like it

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது.

நமது கோவில்கள் பண்டைய காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோவில்களில் அன்னதான திட்டத்தை துவங்கிவைத்தார்கள்.

கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஆலயங்களில் செயல்பட்டுவந்த அன்னதான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த அவசிய சேவையை இந்து அறநிலையத்துறை முடக்கி வைத்துள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் தினசரி 1 லட்சம் பேருக்கு திருப்பதி கோவில் மூலமாக உணவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியில் கோவில்களில் நடைபெற்று வந்த அன்னதான திட்டத்தை ஊரடங்கு நேரத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டுபோய் சேர்க்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வராமல், காணிக்கையாக செலுத்திய நிதியினை பக்தர்களின் ஆலோசனையின்றி கோவில் பணியாளர்கள், மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் ஒப்புதலுடன் அவசரகதியில் மடை மாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

இந்த நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் சலுகை கொடுக்கப்படும் அதே நேரத்தில் இந்துகோவில் வருமானம் சுரண்டப்படுவது நியாயமா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் செயல்படுத்தபடும் அன்னதான திட்டங்களை விரிவுபடுத்தி கோவில்களின் சேவை மக்களுக்கு சென்றடைய அரசு வழிவகைசெய்ய வேண்டும்.

இந்து சமய நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருகோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.


Share it if you like it