மக்கள்தொகை தகவல்கள், ரகசியமாக பாதுகாக்கப்படும். விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, கடந்த 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதை புதுப்பிக்கும் பணி, இந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
2021-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின் ஒரு அங்கமாக, இந்த பணி வீடு, வீடாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாட்டில் குடியிருப்பவர்களை பற்றிய பதிவேடுதான், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகும். கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் இந்த பதிவேடு புதுப்பிக்கப்படுகிறது.
ஒரு பகுதியில் 6 மாதங்களாக வசிப்பவர்கள் அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு அதே பகுதியில் வசிக்க இருப்பவர்கள், குடிமக்களாக கருதப்படுவார்கள். ஒவ்வொரு குடிமகனும் இதில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
ஒவ்வொருவரின் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ‘பான்’ கார்டு விவரங்கள் கேட்கப்பட மாட்டாது.
ஒருவரின் பெயர், குடும்பத் தலைவருக்கான உறவுமுறை, தந்தை பெயர், தாய் பெயர், வாழ்க்கைத்துணையின் பெயர், பாலினம், பிறந்த தேதி, திருமண விவரம், பிறந்த இடம், நாடு, தற்போதைய முகவரி, அங்கு வசிக்கும் கால அளவு, நிரந்தர முகவரி, பணி, கல்வித்தகுதி ஆகிய தகவல்கள் கேட்கப்படும்.
இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த சந்தேகங்களுக்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது. இதுகுறித்து தலைமை பதிவாளர் மற்றும் மக்கள்தொகை ஆணையாளர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்கள்தொகை தகவல்கள், ரகசியமாக பாதுகாக்கப்படும். 1948-ம் ஆண்டின் மக்கள்தொகை சட்டப்படி, ரகசியம் காப்பாற்றப்படும். இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் இதுதான் மிகப்பெரிய கணக்கெடுப்பு ஆகும். இதில், 30 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுகிறார்கள். ரூ.8 ஆயிரத்து 700 கோடி செலவில் இப்பணி நடக்கிறது.
முதல் முறையாக, செல்போன் ‘ஆப்’ மூலமாகவும் கணக்கெடுப்பு நடக்கிறது. ஆன்லைன் மூலமாக பெயர் சேர்க்கலாம்.