சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் – மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்!

சென்னையில் ரூ.100 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் – மத்திய மந்திரி அடிக்கல் நாட்டினார்!

Share it if you like it

நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்குழுமம்(சி.எஸ்.ஐ.ஆர்.) தனது உறுப்பு ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலமாக வாகனங்களை மின்மயமாக்குதல் உள்பட பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது.
சூரிய மின்னாற்றல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் பேட்டரிகளின் பங்கு முக்கியமானதாகும். அந்த வகையில் காரைக்குடியில் உள்ள மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்(சிக்ரி) புதிய தலைமுறை பேட்டரிகளான லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் சல்பர் பேட்டரி தயாரித்தல் போன்ற உயரிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்புக்கான புதுமை தொழில் நுட்ப மையம் அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ வர்தன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள எரிபொருள் சோதனை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டட அவர் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதன்பின்பு காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த நவீன பேட்டரியில் இயங்கும் இரண்டு சக்கர வாகனத்தை மத்திய மந்திரி ஓட்டினார்.
விழாவில் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேசியதாவது:- நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களின் பயன்பாடும், செல்போன்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

2022-ம் ஆண்டுக்குள் 400 கிகா வாட் தூய எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் 30 முதல் 35 சதவீத அளவுக்கு தூய எரிசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை 2022-ம் ஆண்டுக்குள் 40 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்தகைய எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஏதுவாக சென்னை தரமணியில் ரூ.100 கோடி மதிப்பில் அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த பத்தாண்டுக்குள்(2030) நாடு முழுவதும் நூறு சதவீதம் மின்சார வாகனங்களின் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


Share it if you like it