தமிழர் வளர்ந்தால் தானே தமிழும் வளரும்..!

தமிழர் வளர்ந்தால் தானே தமிழும் வளரும்..!

Share it if you like it

“திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது நமது ஔவையார் வாக்கு. அந்த வாக்கிற்கு ஏற்ப, பணம் சம்பாதிக்க, எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். கடல் கடந்து வாணிபம் செய்து, நல்ல முறையில் பொருள் ஈட்டலாம் என்ற எண்ணம், இன்று நேற்று தோன்றியது அல்ல, பழங்காலத்தில் இருந்தே, தமிழகத்தில் இருந்து வருகின்றது. நமது நாட்டினரின் கப்பல் கட்டும் திறமைகளையும், அதை நிர்வகிக்கும் திறமையையும் வெளிநாட்டினர் நன்கு அறிந்து வைத்து இருந்தனர்.

நமது நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, 16 துறைமுகங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சென்னையில் இருந்து சீனா, எகிப்து, ஐரோப்பியா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு, நமது நாட்டில் இருந்து வர்த்தகம் செய்யப் பட்டது.

பெரும்பாலான வணிக வர்த்தகம், கடல் வழி மார்க்கமாக நடைபெற்று வந்ததாக அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காவேரி பூம்பட்டினம் துறைமுகம் மூலம், அரபு நாடுகளில் இருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப் பட்டதாகவும், இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும், நிறைய பொருட்கள் வந்து சேர்ந்தது எனவும், அதன் மூலம் வணிகம் சிறப்பாக நடைபெற்றதாகவும், மேலும், நமது நாட்டில் இருந்து, ஏலக்காய், மிளகு போன்ற வாசனை நறுமணப் பொருட்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் இவை குறிப்பிடப்பட்டு உள்ளது. “கப்பல் கட்டும் திறமை”, “அதை பராமரித்து நிர்வகிக்கும் திறமை” போன்ற வல்லமைகள் நிறைந்தவர்கள், நமது நாட்டினர்.

மயிலாப்பூர், கோவளம் போன்ற பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினம், சுந்தர பாண்டியன் பட்டினம் போன்ற பகுதிகளுக்கு, தமிழர்கள் உள்நாட்டு வணிகம் செய்து வந்தார்கள்.

பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தில் துறைமுகம் வைத்து வணிகம் செய்தனர். அன்றைய மன்னர்கள், சென்னை அருகே உள்ள கோவளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினம் துறைமுகம் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்களை வணிக வர்த்தகம் செய்து வந்தார்கள்.

உலகெங்கும் தற்போது உள்ள துறைமுகங்களின் எண்ணிக்கை:

அமெரிக்கா – 554

இங்கிலாந்து – 391

ஸ்பெயின் – 382

இத்தாலி – 311

ஜப்பான் – 292

சீனா – 172

கீரிஸ் – 103

ஜெர்மனி – 98

நார்வே – 83

ஸ்வீடன் – 82

இந்தியா – 76

மேலே கொடுக்கப்பட்டு உள்ள பட்டியலில் வளர்ந்த நாடுகளே அதிகம் உள்ளன. அங்கு உள்ள துறைமுகங்களின் எண்ணிக்கையின் மூலமாக, அந்த நாடுகள், எவ்வாறு வளர்ந்து உள்ளது என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

ஏற்றுமதி, இறக்குமதி செய்வதன் மூலம், தங்களது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், மக்களின் பொருளாதாரமும், அருகாமையில் சுற்றி உள்ள மக்களின் வாழ்வாதாரங்களும், நாட்டின் வளங்களும் உயர்ந்துக் கொண்டே வந்து இருப்பது, மேலே கொடுக்கப்பட்ட பட்டியலின் மூலம், நமக்கு நன்கு புலப்படும். துறைமுகம் மூலமாக பல கோடிகள் வரை லாபம் கிடைக்கும்.

அந்தோலன் ஜீவி – எதிர்ப்பதை பிழைப்பாக கொண்டவர்கள்:

எந்தத் திட்டத்தை, அரசாங்கம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதை சிலர் வாடிக்கையாக வைத்து இருக்கின்றனர். சாலை போட அரசு முன் வந்தால், அதை எதிர்க்கின்றனர். ஒரு நல்ல சாலை இருந்தால் தானே, ஒரு ஊருக்கும் மற்ற ஊருக்கும், சுலபமாக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால்,  சாலை வசதி செய்து தரக் கூடாது என சிலர் கூறி வருவது, வேதனையான விஷயம்.

எதிர்ப்பவர்கள் ஒரு வேளை, எந்த சாலையிலும் பயணிக்காமல், தங்களுடைய எதிர்ப்பை காட்டலாமே? அதனை செய்ய முன் வருவார்களா?

ஏதாவது ஒரு தொழிற்சாலை அமைந்தால், அதையும் எதிர்க்கின்றனர். தொழிற்சாலை என ஒன்று இருந்தால் தானே, பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். ஒரு தொழிற்சாலை இருந்தால், அதனை சுற்றி நிறைய பேருக்கு நேரடியாக மட்டும் அல்லாமல், மறைமுகமாகவும் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உதாரணத்திற்கு, அந்த தொழிற்சாலையை சுற்றி, உணவு பொருட்கள் விற்பவர்கள் போன்ற பல தொழில் செய்து வருவர்களுக்கு, மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம், அந்த ஊர் மக்களின் பொருளாதாரமும், ஊர் கட்டமைப்பும் மேம்படும்.

காட்டுப் பள்ளி துறைமுகம்:

சென்னை அருகாமையில் உள்ள எண்ணூரில் காட்டுப் பள்ளி துறைமுகம் உள்ளது. லார்சன் & டோப்ரோ (Larsen & Toubro – L&T) நிறுவனத்தால், 2012 ஆம் ஆண்டு முதல், காட்டுப் பள்ளி துறைமுகம் செயல் படுத்தப்பட்டு வருகின்றது. 2018 ஆம் ஆண்டு அதானி குழுமம், அதை வாங்கி விஸ்தரிக்க முயற்சி செய்தது.

தற்போது 330 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள துறைமுகமானது, 6111 நிலப்பரப்பில் 53,031 கோடி முதலீட்டில், அதானி குழுமத்தால் விஸ்தரிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் 1,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும், 4500 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

கையாளும் திறன்:

தற்போதைய நிலவரப்படி ஆண்டிற்கு 24.65 மில்லியன் டன். இது வருடத்திற்கு  320 மில்லியன் டன்னாக நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நிலக்கரி, இரும்புத் தாது, உரங்கள், எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள், அங்கு உள்ள சரக்கு கொள்கலன்களால் (Container) கையாளப்பட உள்ளது.

இதன் மூலம் நிறைய பொருட்கள், வெளி நாட்டில் இருந்து இறக்குமதியும், இங்கு இருந்து நிறைய பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதியும் செய்யப் படும். அதனால், பலருக்கும் பொருள் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

திடீர் போராளிகள், இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தும் விமர்சனம் செய்தும் வருகின்றனர். இதனால், மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், புரளி கிளப்பி கூறி வருகின்றனர்.

சென்னை துறைமுகத்திற்கு அருகே ராயபுரம், காசிமேடு போன்ற பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடித்து, நல்ல முறையில் தொழில் செய்தும் வருகின்றனர்.

எதிர் கட்சிகளை நோக்கி மக்கள் கேள்வி:

கேரளாவில் உள்ள “விழிஞ்சம்” துறைமுகத்தை, அதானி குழுமத்திற்கு வழங்கியது, அப்போது ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் அரசாங்கம். 17 ஆகஸ்ட் 2015 அன்று, அன்றைய கேரளா முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான உம்மன் சாண்டி முன்னிலையில், அதானி நிறுவனத்திற்கு 7,525 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது அமைதியாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போது மட்டும், தமிழகத்தில் உள்ள காட்டுப் பள்ளி துறைமுகம், அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். தன் கட்சிக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவருக்கு என்றால் ஒரு நியாயமா? என தமிழக மக்கள் ராகுலை நோக்கி, கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு காலத்தில், தாமிரத்தை (Copper) வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்த நமது நாடு, இன்றோ, வெளி நாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டது. போராட்டக் காரர்களால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் (Sterlite) நிறுவனத்தால், வேலை வாய்ப்புகளை இழந்தது தமிழர்களே. நேரடியாகவும், மறை முகமாகவும் பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழர்களே, என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது மாநிலத்திற்கு வர வேண்டிய நிறைய தொழிற்சாலைகள் வராமல், வெளி மாநிலத்திற்கு சென்றதன் மூலம் பெரும்பான்மையான தமிழர்களின் வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டு விட்டது.

அரசாங்கம் எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்காமல், எப்படி அதை நல்ல முறையில் செயல் படுத்துவது, என சிந்தித்தால், நமது மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லது. ஆனால், எல்லாவற்றையும் எதிர்த்து, அதன் மூலம் தேவை இல்லாத குழப்பத்தை மக்களிடையே ஏற்படுத்தி, சமூகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாக்கி, அதன் மூலம், மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் கேடு விளைவிக்க நினைக்கும் சிலரின் எண்ணம் நிச்சயம் பலிக்க கூடாது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தமிழர்கள் நல்ல நிலைக்கு உயர்ந்தால் தான், தமிழும் வளரும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழர்களின் வளர்ச்சியும், தமிழகத்தின் பொருளாதாரமும் உயரும் போது தான், அனைவரும் வியக்கத்தக்க வகையில், நமது தேச முன்னேற்றமும் ஏற்படும் என்பதை, பொறுத்துக் கொள்ள முடியாமல், அதனை தடுக்க முயற்சி செய்யும் நபர்களை, சரியான முறையில் அடையாளம் கண்டு, அவர்களை‌ அப்புறப் படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

http://www.worldportsource.com/countries.php

https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/how-ancient-tamil-ports-helped-trade-in-gems-arab-horses/

 

 

 


Share it if you like it

One thought on “தமிழர் வளர்ந்தால் தானே தமிழும் வளரும்..!

  1. Very nice article, gives precise information. We need to give more information to the common people. நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

Comments are closed.