தமிழுக்காக தன்னையே தியாகம் செய்த- தமிழ் தாத்தா உ.வே.சா!

தமிழுக்காக தன்னையே தியாகம் செய்த- தமிழ் தாத்தா உ.வே.சா!

Share it if you like it

தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய பல மூத்த முன்னோடிகளில் ஒருவரும் தமிழ் ஒளி மேலும் பரவிட தன் வாழ் நாளையே நெய்யாக உருக்கியவர் உ.வே.சாமிநாதன் என்று தமிழ் கூறும்நல்லுலகம் நன்கு அறியும் என்பது திண்ணம்.  இளமை பருவத்தில் இவர்களின் குடும்பத்தை   வறுமை நோய் கொடுமைப்படுத்தியதாலும் ,நிலையான வருமானம் இல்லாத காரணத்தினால் அவரின் தந்தை ஊர் ஊராக சென்று வாழும் நிலையே இருந்தது.

எப்படியிருந்தாலும் தன் மகன் படிக்க வேண்டுமே என்ற எண்ணம் அவரின் தந்தையிடம்  உறுதியாக இருந்ததது. இதனை அடுத்து தன் மகனை சடகோப ஜயங்காரிடம் இருந்து  தமிழ்மொழி கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார். ஆசிரியர் ஊட்டிய தமிழ்  மீது மாறா பக்தி ஏற்பட சாமிநாதனுக்கு இது  வாய்ப்பாக அமைந்தது. அதனை அடுத்து தனது 17ம் வயதில்  தஞ்சாவூர் திரிசிரபுரம் பிள்ளையிடம் ஜந்து வருடம் தமிழ் பயின்றார். பிறகு துறவி போல் அலைந்து தமிழ் மீது உள்ள தாகத்தால்  பல  பெரிய தமிழ் அருவிகளிடம்  தமிழ் நீரை பருகினார்.

அன்றைய மக்கள் அறியாமையால் தங்கள் முன்னோர்கள் விட்டு சென்ற அறிய ஓலைச்சுவடிகளை  போற்றி பாதுகாக்காமல். தன் வீட்டின் ஓர் மூலையில்  பல எண்ணற்ற ரத்தினம் போன்ற தமிழ் சுவடிகள் கரையான், எலி, போன்றவற்றின் தாக்குதலுக்கு உள்ளாகியதை பற்றி கவலைப்படாமலும்.  தீயின் நாக்குகளுக்கு அதனை  சுவைக்கும் படியும் விட்டு விட்டனர். இதனால்  எஞ்சியிருக்கும் சிலவற்றையாவது காக்க வேண்டும் என்று, தமிழ்பால் மீது கொண்ட அன்பால் அது தந்த தெம்பால் ஊர் ஊராக நடையாகவே நடந்தார். தமிழ் தான் தன் வாழ்க்கை என தவமாக கிடந்தார் என்று கூறினால் அதுமிகையன்று.

சில அறிய ஒலைச்சுவடிகள் ஓர் வீட்டில் இருப்பதை அறிந்து, அவ்வீட்டு உரிமையாளிடம் தங்களிடம் இருக்கும் ஒலைச்சுடியை  தருமாறு அன்புடன்  கேட்டார். ஆனால் அவரோ மறுநாள் இந்த ஒலைச்சுவடிகளை ஆற்றில் விட வேண்டும் ஆகையால் தங்களுக்கு தரமுடியாது வந்த திசை நோக்கி செல்லுமாறு உதாசீனம் செய்து அனுப்பிவிட்டார்.

உ.வே.சா அவரின் கடும் சொற்களை கண்டு கலங்காமல், அந்த முதுமையிலும் கூட அவர் கூறிய ஆற்றின் நடுவே கடும் குளிரையும் பொறுத்துக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் பதுங்கி இருந்தார்.  இதனை அடுத்து அங்கு வந்த வீட்டு உரிமையாளர் சில பூஜைகளை முடித்து விட்டு தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்டு விட்டு சென்று விட்டார்.

சென்றவர் தலைமறைந்தவுடன் தன் தலையை வெளியில் நீட்டி நீந்தி சென்று அவ்ஓலைச்சுவடிகளை கொண்டு வந்தார். இப்படியாக தமிழ் மொழிக்காக அல்லும் பகலும் பாடுப்பபட்ட அவரின் உழைப்பின் மூலமாக தான் இன்று அறிய தமிழ் நூல்களை நாம் பயில முடிகிறது. உ.வே.சா இல்லையென்றால் இன்று சிலப்பதிகாரம் சீரழிந்து போயிருக்கும், மணிமேகலை மண்ணை விட்டே மறைந்து போயிருக்கும் என்ற கூற்றை யாரும் மறுத்துவிட முடியாது.

இவர் பிப்ரவரி 19.02.1855ம் தேதி தமிழகத்தில்,பாபநாசம் அருகே உள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் வேங்கட சுப்பையர். தாயார் சரஸ்வதி அம்மாள். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். இவரது தாயார் தமிழ் கடவுள் முருகன் மீது இருந்த பக்தியால் சாமிநாதன் என்ற செல்லப் பெயரால் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்து விட்டது.

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதின்  சுருக்கமே உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் மொழிக்கு சேவையாற்றியதாலும், தமிழுக்காக தனது சொத்துக்கள் முதற்கொண்டு விற்று தமிழ் ஆலமரம் போல் வேருன்ற தன் உழைப்பு, வியர்வை, சிந்தனை, தியாகம், அனைத்தையும் அற்பணித்ததால். இவரை நாம்  தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கிறோம்.

உ.வே.சா. தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் அளித்து கெளரவித்தது . 1906ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி ‘மகாமகோபாத்யாயர்’ என்ற பட்டத்தை வழங்கியது. இது தவிர தக்ஷிண கலாநிதி என்னும் பட்டமும் பெற்றுள்ளார்.

தமிழுக்காக தன் வாழ்வையே வேள்வியாக்கிக் கொண்ட தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் ஏப்ரல் 28 ஆம் தேதி 1942 ஆம் ஆண்டு அவருடைய 87 ஆம் வயதில் மறைந்தார்.

உ.வே.சா புத்துயிர் கொடுத்த  நூல்கள்.

சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை,  பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9  உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டை மணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4.

இவை தவிர  90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு பிப்ரவரி 18, 2006 ஆம் ஆண்டில்  உ.வே.சா. நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. மேலும்  1942ல் இவர் பெயரால் சென்னை, வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(பி.கு) சென்னை திருவல்லிகேணி பிள்ளையார் கோயில் தெருவில் வாழ்ந்த தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர்,  இல்லம் இடிக்கப்பட்டு அவரின் தியாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளோம் என்பது வருத்ததிற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.  (ஆக்கம்; எஸ்.ஆர்.செந்தில்குமார்)

 

 


Share it if you like it