கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி ( வயது 45) திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கலாபவன் மணி மரணமடைந்தார். அவரது உடலில் மெதில் ஆல்கஹால் மற்றும் குளோர்பைரிஃபோஸ் இருப்பது அவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், அவரது மனைவி தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.
சிபிஐ அவரது நண்பர்கள் ஜாஃபர் இடுகி, சபுமோன் மற்றும் ஐந்து பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி விசாரணை நடத்தியது.
இந்நிலையில் 32 பக்க விசாரணை அறிக்கையை கொச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கலாபவன் மணியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால் தான் அவர் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கலாபவன் மணிக்கு பச்சையாக காய்கறிகளை உண்ணும் பழக்கம் இருந்துள்ளதாகவும், அதனால் அவரது உடலில் குளோர்பைரிஃபோஸ் என்ற பூச்சிக் கொல்லி கலந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.