மேட்டுப்பாளையம்: காரமடை அருகே, 90 வயதுடைய 2 மூதாட்டிகள், எவ்வித பிரதிபலனும் பார்க்காமல், பல ஆண்டுகளாக பள்ளி மற்றும் கோவில் வளாகத்தை, சுத்தம் செய்வதை, சேவையாக செய்து வருகின்றனர் இதுகுறித்து பிரபல பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில்.
காரமடை அடுத்த தேக்கம்பட்டி சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி சுப்பம்மாள், 90. இவர்களுக்கு மகன், மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த பின்பு, இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த, இருபது ஆண்டுகளாக, தேக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருமாள் கோவில் ஆகிய வளாகங்களை, சுத்தம் செய்வதை முழுநேரப் பணியாக செய்து வருகிறார்.இதற்கு யாரிடமும், எவ்வித பிரதிபலனும் இந்த மூதாட்டி எதிர்பார்ப்பதில்லை. இதை ஒரு சேவையாக, தள்ளாத வயதிலும் செய்து வருகிறார்.
இதேபோன்று தேக்கம்பட்டி அருகே உள்ள கெண்டேபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ரங்கம்மாள், 90. இவருக்கும் மகன், மகள்கள் உள்ளனர். இவர் பூ பறிக்கும் வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, குடும்பம் நடத்தி வருகிறார். மேலும் இவ்வூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை, தினமும் காலையில் சுத்தம் செய்வதை, சமூக சேவை பணியாக செய்து வருகிறார். ஆனால் இவருக்கு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை, இன்னும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எவ்வித பிரதிபலனும் பார்க்காமல், சமூக சேவை செய்து வரும் இந்த மூதாட்டிக்கு, மாவட்ட நிர்வாகம், முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.