பாரதீய ஜனதா கட்சியின் 14-வது தேசிய தலைவராக ஜே.பி.நட்டா நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, நட்டா தனது பதவிக்காலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவிக்கிறேன். நட்டா, அடிமட்டத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக கடுமையாக பணியாற்றி உள்ளார். அவர் அர்ப்பணிப்புடனும், ஒழுக்கத்துடனும் செயலாற்றுபவர். கட்சியின் இளைஞர் பிரிவு, எம்.எல்.ஏ., இமாசலபிரதேச மந்திரி, கட்சியின் தலைமை அமைப்பு பணிகள், எம்.பி., மத்திய மந்திரி என அவர் எந்த பொறுப்பில் பணியாற்றினாலும் தனி முத்திரை பதிக்கக் கூடியவர் என்று நரேந்திர மோடி பேசினார்.
உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, “ஜே.பி.நட்டாவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன், உங்கள் தலைமையில் பா.ஜனதா மேலும் வலுப்படும் என்றும், இன்னும் பெரிதாக வளரும் என்றும் நான் நம்புகிறேன். அவரது திறமையும், அனுபவமும் புதிய சாதனைகளை பெற்றுத்தரும்” என்றார்.