FCRA – Foreign Contribution Regulation Act – அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளி நாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை, உரிய முறையில் பதிவு செய்து, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே (FCRA – Foreign Contribution Regulation Act), அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டம் ஆகும்.
இந்த சட்டமானது செப்டம்பர் 27, 2010 ஆம் ஆண்டு அன்று இயற்றப்பட்டு, மே 1, 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டு என இரண்டு முறை திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது மீண்டும் ஒரு முறை திருத்தப் பட்டு, மக்களவையில் செப்டம்பர் 21, 2020 அன்றும், மாநிலங்களவையில் செப்டம்பர் 23, 2020 அன்றும், அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டம் நிறைவேறியது.
சட்டம் திருத்தப் பட்டதற்கான காரணம் :
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையில் நன்கொடைகள், இந்திய என்.ஜி.ஓ. களுக்கு (NGO – Non Government Organisation) வந்து உள்ளன. அதற்கான சரியான கணக்கை, அந்த நிறுவனங்கள் அரசிடம் சமர்ப்பிக்காமல் உள்ளது.
2011 முதல் 2019 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில், மத்திய அரசு, 19,000 தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து உள்ளது. மேலும், சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாக பல தொண்டு நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடுத்து, அதுவும் நடந்து வருகின்றது.
திருத்தப்பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
– வெளிநாட்டு நிதிகளை பெறும் தொண்டு நிறுவனங்கள், தங்களின் நிர்வாக செலவை 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக, இந்த மசோதா மூலம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரை FCRA கணக்கிலுள்ள பணத்தில், 50 % பணத்தை நமது அலுவலக நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்றிருந்தது. இனிமேல் 20 % பணத்தை மட்டுமே நிர்வாக செலவுகளுக்கு செலவழிக்க முடியும்.
– தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களுடைய அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டம் (FCRA) சான்றிதழை, மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதையடுத்து சட்டத்தை மீறாத வகையில், சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் செயல்படுகிறதா, என்று மத்திய அரசு ஆய்வு செய்யும். இதில், எந்தவித பிரச்சினையும் இல்லையெனில், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு, தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும்.
– எந்தவொரு சங்கத்திற்கும், நபருக்கும் வெளிநாட்டு பங்களிப்பை மாற்றுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. FCRA கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கிலிருந்து, மற்றொரு FCRA கணக்கிற்கு பணத்தை கொடுக்கவோ, அனுப்பவோ கூடாது.
– அரசு ஊழியர்கள் யாவரும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை, இந்த மசோதா தடை செய்கின்றது.
– தொண்டு நிறுவனங்கள், “ஸ்டேட் பாங்க் வங்கி”யில் (SBI – State Bank of India) மட்டுமே கணக்கு தொடங்கி, அதன் மூலம் தான், வெளிநாட்டு நிதியை பெற வேண்டும். நாட்டின் அனைத்து நகரங்களிலும், எஸ்.பி.ஐ. வங்கி இருப்பதால், தொண்டு நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள, எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும். அயல் நாட்டிலிருந்து FCRA கணக்கிற்கு வரும் பணம் அனைத்தும், டில்லியிலுள்ள SBI வங்கி FCRA கணக்கிற்கு வர வேண்டும். பிறகு அருகாமையில் ஊரில் உள்ள, FCRA வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றம் செய்து கொள்ளலாம்.
– கணக்கு தொடங்க இருக்கும் தொண்டு நிறுவனங்கள், கண்டிப்பாக தங்களின் “ஆதார்” எண்ணை வழங்கிட வேண்டும்.
தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை:
2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, நமது நாட்டில் 31 லட்சம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதனுடன் யூனியன் பிரதேசங்களில் 82,000 தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.
2011 ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, நமது நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை – 15 லட்சம். அரசு மருத்துவ மனைகளின் எண்ணிக்கை – 11,993, படுக்கைகள் – 7.84 லட்சங்கள்.
31 லட்சம் தொண்டு நிறுவனங்கள் என்றால், இது, பள்ளிக் கூடங்களை விட, இரண்டு மடங்கு அதிகம். அரசு மருத்துவமனைகளை விட 250 மடங்கு அதிகம்.
மொத்தம் உள்ள 31 லட்சம் தொண்டு நிறுவனங்களில், 3 லட்சத்துக்கும் குறைவான தொண்டு நிறுவனங்களே, முழுமையான கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர். கேரளாவில், எந்த தொண்டு நிறுவனமும், முழுமையான கணக்கை சமர்ப்பிக்கவில்லை.
பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை:
நாடு முழுவதும் 99 ஆயிரத்து 458 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டது, 7067 தொண்டு நிறுவனங்கள். உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப் படி அகில இந்திய அளவில், அதிக நிதி உதவி பெறும், தொண்டு நிறுவனங்களின் வரிசையில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிக பணம் பெறும், 15 தொண்டு நிறுவனங்களின் வரிசையில், 6 நிறுவனங்கள் தில்லியை சேர்ந்தது, மூன்று நிறுவனங்கள் கேரளாவை சேர்ந்தது, மற்றும் இரண்டு நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தது.
நிதியை தொண்டு நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன:
அரசு செயல் திட்டங்களை நிறுத்த:
2012 ஆம் ஆண்டு, அன்றைய மத்திய அமைச்சரும், தற்போதைய புதுச்சேரியின் முதலமைச்சருமான திரு V. நாராயணசாமி அவர்கள், மூன்று தொண்டு நிறுவனங்களை குறிப்பிட்டு, அமெரிக்காவில் இருந்து, அவர்களுக்கு வரும் நிதியை வைத்து, கூடங்குளம் அணுமின் உலையை, செயல்பட விடாமல் செய்கின்றார்கள் என்றும், வெளி நாட்டிலிருந்து வரும் நிதியை, தவறான வழியில் பயன்படுத்தி, தமிழக மக்களை வைத்து, அணுமின் உலைகளை கட்ட, தடங்கல் ஏற்படுத்துகிறார்கள், என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
நமது நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும், மத சேவைகளுக்காகவும் உதவுவதாக கூறி, தொண்டு நிறுவனங்கள், அமெரிக்காவில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, அரசு திட்டங்கள் செயல்படாமல், அதனை தடுக்க, வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துகிறார்கள் என்றும், போராட்டக்காரர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை போராட தூண்டுகிறார்கள் என்றும், தமிழக மக்களை பல்வேறு கிராமத்தில் இருந்து அழைத்து வந்து, அவர்களுக்கு உணவு அளித்து போராட்டம் செய்யத் தூண்டுகிறார்கள் எனவும் திரு V. நாராயணசாமி குற்றம் சாட்டி இருந்தார்.
இதே கருத்தை, அன்றைய உள்துறை அமைச்சரான திரு ப. சிதம்பரம் கூறி இருந்தார்.
ஸ்டெர்லைட், சேலம் எட்டு வழி சாலை போன்ற தமிழக அரசு நலத்திட்டங்கள், போராட்டாக்காரர்களால், வெளிநாட்டு நிதிகள் கொண்டு, நிறுத்தப் பட்டது. இதற்கான ஆதாரம், போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், மனித உரிமை சட்ட வழக்கறிஞர் காலின் கான்சால்வ்ஸ் (Colin Gonsalves) மூலம் நான்கு ஐரோப்பிய சர்ச்சில் இருந்து, 50 கோடி பணம் பெற்று, தில்லியில் நடந்த ஷாஹின்பாக் போராட்டத்தில், அந்தப் பணம் பயன் படுத்தப் பட்டது, நிரூபிக்கப் பட்டு உள்ளது.
தீவிரவாத செயல்களுக்கு:
வெளிநாட்டிலிருந்து நிதிகளைப் பெற்றுக் கொண்டு, நமது நாட்டில் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது, ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2011 ஆம் ஆண்டில் நடந்த மும்பை தாக்குதல் உட்பட, நமது நாட்டின் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்களில், வெளிநாட்டுப் பணம் கைமாறியது, காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
மதமாற்றத்திற்கு:
ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் கூறிய தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “ஊழியம்” என்ற பெயரில் மதமாற்றம் செய்ய, மாற்று மதத்தை சேர்ந்தவர்கள், பணம் பெறுகிறார்கள் என்ற தகவலை அவர் கூறினார். மேலும், அரசிடம் தொண்டு நிறுவனம் என்று கூறி பல இடங்களுக்கு சென்று, மதமாற்றம் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்களுக்கு மாதமாதம் சிறிய உதவியை செய்து, பணம் கொடுத்து, அவர்களை வரவழைப்போம் என்றும், அதன் மூலம் காலப் போக்கில் அவர்களை மையமாக வைத்து அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், அக்கம் பக்கத்தினரையும், மாற்று மதத்திற்கு மாற்றி விடுவோம் என்றும், அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கம்பாஷன் இன்டர்நேஷனல் (Compassion International) என்ற சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனத்தை, மத்திய அரசு மே மாதம் 2016 ஆம் ஆண்டு, தடை செய்தது. கருணா பாலவிகாஸ் (Caruna Bal Vikas) என்ற தொண்டு நிறுவனத்திற்கு, கம்பாஷன் இன்டர்நேஷனல் (Compassion International) என்ற தொண்டு நிறுவனம் தரும் பணத்தை, மெதோடிஸ்ட் சர்ச் (Methodist Church), பாப்டிஸ்ட் சர்ச் (Baptist Church), சால்வேஷன் ஆர்மி (Salvation Army), கிறிஸ்டின் மிஷனரி சொசைட்டி (Christian Missionary Society), இந்தியன் பெண்ட கோஸ்டல் சர்ச் (Indian Pentecostal Church) போன்ற தேவாலயங்களுக்கு மதமாற்றம் செய்ய பணத்தை செலவிடுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தது. மேலும், இந்திய அரசிற்கு எதிராக செயல்படுவதாக பல்வேறு வகையான குற்றச்சாட்டு எழுந்தது.
2017 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்காவின் செயலாளர் ஜான் கெர்ரி, அன்றைய வெளியுறவு துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜிடம், அந்தத் தொண்டு நிறுவனத்திற்கு, போடப்பட்ட தடையை, நீக்குமாறு வேண்டுகோள் வைத்தார். ஆனாலும், மத்திய அரசு போடப்பட்ட தடையை நீக்க, அறவே மறுத்து விட்டது.
கருணா பால விகாஸ் (CVB – Caruna Bal Vikas) என்ற தொண்டு நிறுவனத்திற்கு, வரும் வெளி நாட்டு பணத்தை முறையாக பயன்படுத்தாமல், மதமாற்றத்திற்கு பயன் படுத்தப்பட்டது, அதன் மூலம் சமுதாயத்தில், அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது, குழந்தைகளை மதம் மாற்ற முயற்சி செய்தது.
மற்றொரு தொண்டு நிறுவனமான, (AMCPL) 2014 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. AMCPL மற்றும் கருணா பால விகாஸ் (CVB) என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குனர்களும், பொறுப்பாளர்களும், விலாசங்களும் ஒன்றாக இருந்தது, சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. 2014 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் பல்வேறு பணத்தை வெளி நாட்டிலிருந்து பெற்று, நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக, சி.பி.ஐ வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடத்தியது.
FCRA சட்டத்தினால் கிடைக்க இருக்கும் நன்மைகள்:
– மத மாற்றங்கள் தடுக்கப் படும்
– சில கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் கிடைக்கப் பெறும் நிதிகள், பெருமளவில் நிறுத்தப்படும்
– தீவிரவாத செயல்கள் அறவே ஒழிக்கப்படும்
– கருப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றும் முயற்சி, அடியோடு நீங்கும்
– அரசின் நலத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தவிர்க்கப்படும்
– போராட்டக்காரர்களின் வங்கி கணக்கு நிரப்பப்படாமல் காலியாகும்
– அரசாங்கத்திற்கு விரோதமாக மக்களை தூண்டி விடுபவர்களின் FCRA எண்கள் முடக்கப்படும்.
இந்த சட்டத்தின் மூலம், முறையாக, சரியாக, செயல்படும் எந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கும், எந்த வித பாதிப்பும் நேராது. மாறாக முறை தவறி, “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்ற வாக்கிற்கு ஏற்ப, ஒருவரின் ஏழ்மையை காரணம் காட்டி, வெளி நாட்டில் இருந்து, நன்கொடைகள் பெற்று, அதன் மூலம், சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்த, இந்த சட்டம் அறவே தடுக்கின்றது.
எனினும், சரியாக கணக்கு காட்டும், எந்த தொண்டு நிறுவனத்திற்கும், இந்த சட்டத்தால் எந்த வித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு மிகத் தெளிவாக கூறி உள்ளதை, நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
– அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
தற்போதைய மத்திய எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நல்ல முடிவாகத்தான் உள்ளது. வெளிநாட்டு நன்கொடைகளை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள்தான் நோட்டம் சொல்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.