முன்னேற்ற பாதையில் நமது நாடு..!

முன்னேற்ற பாதையில் நமது நாடு..!

Share it if you like it

2019 டிசம்பர் 8 ஆம் தேதி, சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டு அறியப் பட்டார்.

அவரது பெயர் “வீ குய்க்ஸியன்” (Wei Guixian) என்றும், அவர் “ஹூனான்” கடல் வாழ் உயிரினச் சந்தையின் வியாபாரி என்றும், முன்னணி அமெரிக்க நாளேடான “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” (Wall Street Journal) உறுதிப் படுத்தியது. டிசம்பர் முடிவதற்கு உள்ளாகவே, வூஹான் நகரில், 266 பேருக்கு வைரஸ் தொற்று கண்டு அறியப் பட்டதாக “சௌத் சைனா மார்னிங் போஸ்ட்” (South China Morning Post) நாளேடு அம்பலப் படுத்தியது.

இந்த நிலையில், இதுவரை தெரிய வராத “மர்மமான நிமோனியா” வால் (Mysterious Pneumonia)  27 பேர் பாதிக்கப் பட்டு இருப்பதாக, உலக சுகாதார நிறுவனத்துக்கு  (World Health Organisation), வூஹான் (Wuhan) நகராட்சி சுகாதாரக் கமிட்டி, முதல் முறையாக டிசம்பர் 31ம் தேதி செய்தி அனுப்பியது. இது தான், “கொரோனா” தொடர்பாக, வெளி உலகத்துக்கு சீனா சொன்ன முதல் தகவல்.

இந்தியாவிற்கு முதன் முதலில் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது, ஜனவரி  30, 2020, அன்று.

சுயசார்பு பாரதம் :

உலக பொருளாதார வளர்ச்சியில், நமது நாடு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனில், நாம் நம்மை சார்ந்து தான் இருக்க வேண்டும். அப்போது தான், நமது நாட்டில் வியாபாரம் செழிக்கும். நமது நாட்டை சேர்ந்தவர்கள் அதிக பொருட் செல்வத்துடன் வாழ்வார்கள்.

மற்ற நாட்டைச் சார்ந்து இருக்கும் பட்சத்தில், அந்த நாட்டிற்கு நமது பணம், அந்நிய செலாவணி மூலம், சென்று சேரும். இதனால், நமது நாட்டில் உள்ள பணம், அங்கு போய் சேர்வதால், நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதனை கவனத்தில் கொண்டே, “ஆத்ம நிர்பார் பாரத்” ( Atmanirbhar Bharat) என்னும் புரட்சிகர திட்டத்தை, நமது பாரத பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேலும், கொரோனாவால், உலகெங்கும் பொருளாதாரம், பெரிதும் பாதிக்கப்பட்ட சூழலில், நமது நாடும் அந்த பாதிப்பிற்கு தப்பவில்லை. மிகப் பெரும் பொருளாதார சீர்திருத்தம் தேவை என்பதை உணர்ந்த நமது மத்திய அரசு,  “ஆத்ம நிர்பார் பாரத்” என்ற திட்டத்தை வெளியிட்டது. அதன் மூலம், நமது

நாட்டின் பொருட்களை, நாமே தயாரிக்கும் திறனை உருவாக்கும் ஒரு நல்ல முயற்சி, என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

700 மடங்கு அதிகரித்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி:

ஒரு காலத்தில், நமது நாடு, ராணுவ தளவாடங்களை வெளி நாட்டில் இருந்து, இறக்குமதி செய்து கொண்டு இருந்தது. ஆனால், தற்போது நமது நாட்டில் தயாரிக்கப் பட்ட ராணுவ தளவாடங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு, நமது நாடு “தன்நிறைவு” அடைந்து உள்ளது என்பது, நமக்கு நிச்சயம் பெருமை தரக் கூடிய விஷயம்.

“ஸ்டாக்ஹோம் உலக அமைதி ஆராய்ச்சி நிறுவனம்” (Stockholm International Peace Research Institute) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், நமது நாடு ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியில், 2015 ஆம் ஆண்டு, உலகத் தர வரிசையில், 23ஆம் இடத்தில் இருந்தது.

2019 ஆம் ஆண்டு, உலகத் தரவரிசையில், நமது நாடு 19 ஆம் இடத்திற்கு உயர்ந்தது.

பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில், நமது நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, 700 மடங்கு அதிகரித்து இருப்பதாக, அந்த ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு:

நமது நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது, அனைவருக்கும் மிகப் பெரும் அச்சம்  ஏற்பட்டது. 139 கோடிக்கு மேல், மக்கள் தொகை வாழும் நமது நாட்டில், உலக மக்கள் தொகையில் 2 வது இடத்தில் இருக்கும் இந்தியாவால், தாக்குப் பிடிக்க முடியுமா? வளர்ச்சி அடைந்த நாடுகளே தடுமாறிக் கொண்டு இருக்கும், இந்த சூழ்நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா? என சிலர் எதிரான கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருந்த நேரத்தில், நமது அரசின் சிறப்பான செயல்பாட்டினால், உலக அளவில் ஒப்பிடும் போது நமது நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், உயிரிழப்பும் மிகவும் குறைவு என அறிவியல் வல்லுனர்களும், மருத்துவர்களும் கருத்து தெரிவித்தனர்.

உலகெங்கும்  கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை கணக்கிட்டால், அவர்களில் நான்கில் ஒருவர் அமெரிக்கராக இருப்பர். இதுவரை கொரோனாவால் இறந்தவர்களை கணக்கிட்டால், ஐந்தில் ஒருவர் அமெரிக்கராக இருப்பர்.

இந்தியாவிலோ ஆயிரம் பேருக்கு 7 பேருக்கு மட்டுமே, கொரோனா நோய் பாதிப்பால், உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஒப்பிடும் போது, இது மிகவும் குறைவு.

மொத்தமாக நமது நாட்டில், கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளவர்களை, தற்போது கணக்கிட்டால், மகாராஷ்டிரா, கேரளாவில் மட்டும் 70 சதவீதம் பேர் உள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் மொத்தமாக சேர்த்து, பாதிப்பு அடைந்து உள்ளது 30 சதவீதம் மட்டுமே.

தடுப்பூசி:

வளர்ந்த நாடுகளே, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டு பிடிப்பதில், தடுமாறிக் கொண்டு இருக்கும் நேரத்தில், “வராது வந்த மாமணி”யாக, நமது நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியால், கொரோனாவிற்கு எதிரான இரண்டு தடுப்பு ஊசி மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்டது.

சீரம் (Serum) என்ற நிறுவனத்தின், “கோவிஷீல்டு” (Covishield) என்ற தடுப்பூசி மருந்தும், பாரத் பயோடெக் (Bharat Biotech) என்ற நிறுவனத்தின் “கோவேக்ஸின்” (Covaxin) என்ற தடுப்பூசி மருந்தும், தற்போது பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே, இந்த இரண்டு தடுப்பூசி மருந்துகளையும் முதல் தவணையாக போட வேண்டும், என பிரதமர் திட்டவட்டமாக கூறி விட்டார். அவர் மேலும் கூறுகையில், அரசியல்வாதிகள் தங்களுடைய அதிகாரத்தின் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், முன் களப் பணியாளர்களுக்கு, வழி விட வேண்டும் என்றும், அவர்கள் செலுத்திய பிறகே, மற்றவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், அறிவுறுத்தி இருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு, முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி  மருந்து செலுத்தப் பட்டது.

போர்க் கால நடைமுறையில், அதிவேகமாக தடுப்பு ஊசி செலுத்தப் பட்டது. 20 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போட, இங்கிலாந்தில் 34 நாட்கள் ஆனது. அமெரிக்காவிலோ 20 லட்சம் பேருக்கு போட, 15 நாட்கள் ஆயிற்று. ஆனால், நமது நாட்டில், வெறும் 11 நாட்களில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:

நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை, பல வெளி நாடுகளுக்கு, நமது அரசு ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கின்றது.

பிரேசில், பூடான், மாலத்தீவு, நேபாளம், மியான்மர், ஓமன், வங்காளதேசம், மொரிஷியஸ், துபாய், குவைத், தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா, மஸ்கட், பஹ்ரைன், எகிப்து, இலங்கை என பல உலக நாடுகளுக்கு இந்திய அரசு வாரி வழங்கி வருகின்றது.

மருந்தை பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட, உலக நாடுகள் அனைத்தும், இந்தியாவிற்கு நன்றி செலுத்தி வருகின்றது. பிரேசில் அதிபர் நமது பிரதமருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், அனுமார் சஞ்சீவி மலையை தூக்கி வருவது

போன்ற படத்தை வெளியிட்டு, தனது நாட்டு மக்களின் துயரைப் போக்க, மருந்துகளை அனுப்பிய இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் Dr. திரு. விஜயபாஸ்கர் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அது போல், பிரபல அரசியல் விமர்சகர் திரு. சுமந்த் C ராமன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் Dr. திரு. கிருஷ்ண சாமி அவர்களும், தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக பதிவிட்டு இருக்கின்றார்கள்.

மத்திய அரசு எதை செய்தாலும், அதை குறை சொல்வதை, வழக்கமாக கொண்டு இருக்கும் எதிர் கட்சிகள், ஒருவேளை பிரதமர் மருந்து ஏற்றுக் கொண்டு இருந்தால், மக்களுக்கு கொடுக்காமல் அவருக்கு மட்டுமா?  என கேள்வி எழுப்பி இருக்கும். தற்போது அவருக்கு செலுத்த வேண்டியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி இருக்கும்.

2020 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை – ஆத்மநிர்பார்தா:

சவால்களை எதிர் கொள்ளத் தேவையான மனநிலை, அதற்கான நெறிமுறைகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடிய வார்த்தையாக “ஆத்மநிர்பார்தா” இருப்பதால், இந்த வார்த்தையை “சிறந்த இந்தி வார்த்தையாக”, ஆக்ஸ்போர்டு மொழிகள் நிறுவனம் அறிவித்து உள்ளது.

நமது நாடு கொரோனா அபாயங்களை கையாண்ட விதம் மற்றும் தப்பிப் பிழைத்த எண்ணற்ற மனிதர்களின் சாதனைகளை கவனத்தில் கொண்டு, இந்த வார்த்தையை தேர்ந்து எடுத்து இருப்பதாக, “ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு” அறிக்கை வெளியிட்டு உள்ளது.

“பொருளாதாரம், சமூகம் மற்றும் தனி நபர்கள் சுய சார்பு அடைய வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்.‌ அதற்கு ஒரு வார்த்தையை பயன் படுத்தி, அந்த சொற்றொடர், இன்று,  உலக அளவில் முக்கியத்துவம் பெற்று, சிறந்த வார்த்தையாக தேர்ந்து எடுக்கப் பட்டு இருப்பது, நம் அனைவருக்கும் பெருமை தரக் கூடிய தருணம்.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஊக்கம் அளிக்கும் வகையில், நமது நாட்டில் தயாரித்த பொருட்கள், தற்போது உலக நாடுகளில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதன் மூலம், “உலகின் குருவாய் பாரதம் ஆகி விட வேண்டும்”  என்ற நமது ஒவ்வொருவரின் எண்ணமும், நிறைவேறிக் கொண்டு வருகின்றது.  தற்போது நடக்கும் நிகழ்வுகளும், அதையே நமக்கு கோடிட்டு காட்டுகின்றது.

அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it