வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதி இருப்பதாகவும், அதுகுறித்த தகவல்களைச் சேகரிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி கூறியதன் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் பாழடைந்த நிலையில் கோட்டையும் அதன்மேல் மசூதி போன்ற ஒரு கட்டிடமும், அதனருகில் 5 நடுகற்களும் இருப்பது கண்டறியப்பட்டன. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:
கண்டறியப்பட்ட 5 நடுகற்களில் 2 நடுகற்களில் மட்டும் 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு எழுத்துவடிவில் 2 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் என்றும், மற்றொரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் மகன் சீலன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் இந்த நடுகற்கள் உள்ளன. இதனருகில் காலத்தால் பழமையான மற்ற 3 நடுகற்களும் உள்ளன.
ஆய்வின்போது, தேசூர் வருவாய் ஆய்வாளர் ஏ.வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாபு, கிராம உதவியாளர்கள் அதியமான், ராஜசேகர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர் .